கற்றலுக்கான பழக்க வழக்கங்களை விருத்தியாக்கிக் கொள்ளல்
கலாநிதி க. சுவர்ணராஜா
ஓய்வு நிலைப் பீடாதிபதி
கற்றலில் சிறந்து விளங்குவதற்கு ஒரு மனிதர் தம்மிடையே ஏற்படுத்திக்கொண்டுள்ள பழக்கங்களும் ஒரு காரணமாக அமைகின்றது. மறுபக்கத்தில் பழக்கங்களுக்கு அடிப்படையாக அமைவது கற்றலாகும். ஆகவே கற்றலில் வெற்றி பெறுவதற்கு கற்போர் நல்ல பழக்கங்களை தம்மிடையே வலுப்பெறச் செய்தல் அவசியமானதாகும்.
ஒருவர் தாம் கற்றுக்கொண்ட செயலைப் பலமுறை திரும்பத் திரும்ப பரிச்சயப்படுத்தும்போது சிறிது காலம் சென்றவுடன் நனவுடன் கூடிய அம்முயற்சியானது கவனமின்றி இலகுவாக செய்யகூடிய விடயமாகின்றது. ஏனெனில் திரும்பத் திரும்ப பரிச்சயப்படுத்தப்பட்ட அச் செயலானது பழக்கமாகி விடுகின்றது. உதாரணமாக துவிச்சக்கரவண்டியை மிதிப்பதற்கு கற்றுக்கொண்ட ஒருவர் நன்கு பரிச்சயமானவுடன் வெகு இலாவகமாக மிதிப்பதற்கு பழக்கப்படுத்தப்பட்டு விடுகின்றார்.
ஒரு கற்றல் பழக்கமாக மாறுவதற்கு பின்வரும் விடயங்கள் அக்கற்றலில் இணைந்திருக்க வேண்டும்.
1. முழுமையான கவனத்தைச் செலுத்துதல்.
2. ஆதிக விருப்பமுடையதாக இருத்தல்.
3.கற்றலின் ஆரம்பத்தில் ஏற்படும் தோல்விகளையும் சவால்களையும் ஏற்கும் மனப்பாங்கு கொண்டிருத்தல்.
4. ஏற்கனவே எம்முடன் இருக்கும் புதிய கற்றலுக்கான பொருத்தமற்ற நடத்தைகளிலிருந்து விடுபடுதல்.
5.கற்றலின் ஒவ்வொரு கட்டத்திலும் கற்போர் தம்மை சுயமதிப்பீட்டிற்குஉள்ளாக்குதல்.
பழக்கங்களின் வகைகள்
பழக்கங்களை பின்வருமாறு வகுத்து நோக்கலாம். அவையாவன
1. உடலியக்கப் பழக்கங்கள் (HABITS OF BODILY MOVEMENTS) உதாரணம்: செய்திறன்கள்
2. சொற்பழக்கங்கள் (VERBAL HABITS) உதாரணம்: வாசிப்பு
3.சமூகப்பழக்கங்கள் (SOCIAL HABITS) உதாரணம்: மரியாதையுடன் நடத்தல்
4. அறநெறிப் பழக்கங்கள் (MORAL HABITS) உதாரணம்: நேர்மை
5. சிந்தனைப் பழக்கங்கள் (THOUGHT HABITS) உதாரணம்: நம்பிக்கை
பழக்கங்கள் எவ்வாறு ஏற்படுகின்றன
1. திரும்ப திரும்ப ஒன்றைச் செய்வதனுாடாக
2.தொடர்ச்சியான பயிற்சி
3.ஆர்வம், அக்கறை
4. மனநிறைவு வரும் வரை பயிற்சி செய்தல்
5. பயிற்சிக்கான வாய்ப்பு
6. ஆயத்தநிலை என்பனவாகும்
நாம் ஏற்படுத்திக் கொள்ளும் பழக்கங்கள் எமக்கு நல்ல நண்பர்களாகவோ அல்லது மோசமான எதிரிகளாகவோ ஆகிவிடும். நாம் நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளும்போது அவை எமக்கு என்றும் பயன்படுவனவாகவும், எமது செயல்களில் செயற்பாடுகளில் வெற்றியை ஈட்டி தருவனவாகவும், எம்மைப் பற்றிய எண்ணங்களை மற்றவர்களிடையே உயர்த்தி விடுபவையாகவும் அமைந்துவிடும். மாறாக நாம் ஏற்படுத்திக் கொள்ளும் தீய பழக்கங்கள் எமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எமக்கு எதிரியாக நின்று எம்மை அழிக்கவும் எமது செயற்பாடுகளின் வெற்றியை தடுப்பதாகவும் அமைந்துவிடும்.
கற்றலுக்கான பழக்கங்கள்
எந்தவொரு செயற்பாட்டினதும் வெற்றியின் திறவுகோலாய் அமைவது அச் செயற்பாட்டில் ஈடுபடுபவர் விருத்தியாக்கிக் கொள்கின்ற அச் செயல் தொடர்பான பழக்கங்கள் ஆகும். உதாரணமாக ஒரு விளையாட்டு வீரன் தாம் ஈடுபட்டுள்ள விளையாட்டில் வெற்றி பெறுவதற்காக விளையாட்டு தொடர்பான திறன்களை விருத்தியாக்கிக் கொள்கின்றான். ஒரு சங்கீத வித்துவான் சங்கீதம் தொடர்பான திறன்களை விருத்தியாக்கிக் கொண்டு சங்கீதத்தில் வெற்றியடைகின்றார். ஒரு முகாமையாளர் முகாமைத்துவத் திறன்களை விருத்தியாக்கிக் கொள்வதன் ஊடாகவே தன்னுடைய நிறுவனத்தினை திறமையான முகாமைத்துவம் செய்து வெற்றியடைகின்றார். ஆகவே எந்தவொரு செயற்பாட்டின் பின்னணியிலும் அச் செயற்பாட்டிற்கான திறன் விருத்தியும் அது தொடர்பான பழக்கங்களும் அடித்தளமாக அமைகின்றது. இந்நோக்கில் நாம் பார்க்கும் போது கற்றலில் ஈடுபடுபவர்களும் கற்றலில் வெற்றியடைவதற்கு கற்றல் தொடர்பான
திறன்களை கட்டாயம் விருத்தியாக்குதல் வேண்டும். கற்றல் தொடர்பான திறன்களை விருத்தியாக்குதல் என்பது கற்றலுக்கென நல்ல பழக்கங்களை எம்மிடையே அமைத்துக்கொள்ளும்போது அப் பழக்கங்கள் எமக்கு ஒரு நல்ல நண்பனாய் நின்று கற்றலில் நாம் வெற்றியடைய வழிகாட்டும்.
கற்றலுக்காக நாம் விருத்தியாக்கிக்கொள்ள வேண்டிய பழக்கங்களை இரண்டு வகையாக பிரித்து நோக்கலாம்:
*சுய முகாமைத்துவம்
* உடன்பாடான சிந்தனையை வளர்த்துக்கொள்ளல்
சுய முகாமைத்துவம்
எமது உள்ளத்தை நாம் சுய முகாமைத்துவத்திற்கு ஆட்படுத்துதல் கற்றலுக்கான பழக்கத்தை உருவாக்கிக் கொள்வதற்கான முக்கிய படியாகும். எமது உள்ளத்தை நாம் சுயமாக கட்டுப்படுத்தி அதனை கற்றல் வழியின் பால் திருப்புதலே கற்றலில் எமக்கு பாரிய வெற்றியை பெறுவதற்கான பெரும் முயற்சியாகும். உள சுய முகாமைத்துவம் அல்லது பேரறிகை என்பது கற்றல் செயன்முறையை திட்டமிடுதல், நெறிப்படுத்துதல், மதிப்பிடுதல் என்பவற்றை உள்ளடக்கியதொரு கலையாகும். உள சுய முகாமைத்துவம் ஏற்படும் போது கற்றலுக்கான தெரிவுகள் இலகுவாகும். கற்றல் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய உள வலிமை எளிதாக எம்மிடையே ஏற்பட்டுவிடும். ஆகவே கற்போர் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய பிரதான பழக்கம் உள சுய முகாமைத்துவம் ஆகும்.
கற்போரிடம் உள சுய முகாமைத்துவப் பழக்கம் ஏற்படும் போதும் பின்வருவன தொடர்பான தெளிவு அவரிடத்தே ஏற்படும்.
1. சிறந்த கற்றல் நடையியலை இனங்கண்டு கொள்ளல்
கற்றல் நடையியல் என்பது காட்சியுடன் கற்றல், கேட்டுக் கற்றல், அனுபவித்துக் கற்றல், ஊகித்துக் கற்றல் என்றவாறு வேறுபடுகின்றன. இக் கற்றல் நடையியல்களில் எதனை பயன்படுத்திக் கற்றல் சிறப்பானதாக அமையும், எந்த நடையியல் கற்றலில் அதிக விளைவுகளைத் தருகின்றது என்று கற்போர் இனங்கண்டு அந்த நடையியலை பயன்படுத்தும் உளத் தெளிவு கற்போரிடம் ஏற்படல் வேண்டும்.
2. கற்றல் திறன்களை நெறிப்படுத்துதல்
வாசித்தல், எழுதுதல், அவதானித்தல், நேர முகாமைத்துவம், குறிப்பெடுத்தல், பிரச்சினை தீர்த்தல் போன்றவற்றை கற்றல் திறன்கள் எனக் குறிப்பிடலாம். கற்போர் தனது கற்றல் திறன்களை நெறிப்படுத்தவும், அதனை தொடர்ந்து விருத்தியாக்கவும் முயலுதல் கற்றலுக்கான உள முகாமைத்துவத்தின் அடுத்த தெரிவாகும். ஒரு கற்போர் தனது கற்றல் திறன்கள் எந்தளவுக்கு போதுமான அளவு விருத்தியடைந்துள்ளன? கடந்த காலங்களில் தமது கற்றல் திறன்கள் மூலம் பெற்றுக்கொண்ட வெளியீடுகள்,
பெறுபேறுகள் எத்தகையது? போன்றவாறு தன்னை சுயமதிப்பீட்டிற்கு உள்ளாக்கும் பழக்கத்திற்கு ஆளாக்குதல் வேண்டும்.
உதாரணமாக, ஒரு கற்போர் கடந்த ஒரு பாடத்திற்கான ஒப்படையில் குறைவான புள்ளிகளைப் பெற்றிருக்கின்றார் எனின் அதில் தாக்கம் செலுத்திய தமது கற்றல் திறன் எதுவென இனங்கண்டு கொள்ளல் வேண்டும். வாசிப்புத்திறன் போதாமையால் அந்த ஒப்படையில் குறைவான புள்ளிகளைப் பெற நேரிட்டிருக்கும் எனின் வாசிப்புத்திறனை விருத்தியாக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
சில கற்போர்கள் குறிப்பெடுத்தலில் கொண்டிருக்கும் தவறான பழக்கங்கள் அவர்களது அடைவுமட்டத்தில் தாக்கம் செலுத்துகின்றன. சிலர் தாம் எடுத்த குறிப்பினை தாமே விளங்கிக்கொள்ள முடியாத சிக்கல்களுக்கும் உள்ளாகின்றனர்.
மேலும் சில கற்போர் பரீட்சைக்காக தம்மை ஆயத்தம் செய்வதிலும், பரீட்சையில் விடையளிப்பதிலும் நேர முகாமைத்துவம் தொடர்பாக விடும் தவறுகள் அவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளில் அதிக தாக்கத்தினை செலுத்துகின்றன.
ஆகவே தமது கற்றல் திறன்களை நெறிப்படுத்தி விருத்தியாக்கும் பழக்கம் கற்போரிடம் இடைவிடாது தொடர வேண்டியது ஒரு பழக்கமாகும்.
3. பல்வேறு கற்றல் சூழல்களை பயன்படுத்துதல்
கற்போர் தான் பங்கேற்கும் கற்றல் சூழலை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் பழக்கத்தினை ஏற்படுத்திக்கொள்ளல் கற்றலுக்கான ஒரு சிறந்த உள முகாமைத்துவம் ஆகும். பொதுவாக விரிவுரைகள், ஆய்வுகூட பரிசோதனைகள், கலந்துரையாடல்கள், கற்றல் குழுக்கள், சகபாடியுடன் இணைந்து கற்றல், கள வேலைகளில் ஈடுபட்டுக் கற்றல், செயல்திட்டங்கள், ஆய்வுகள் என்பனவற்றை கற்றல் சூழல் எனலாம். இக் கற்றல் சூழலை பயனுள்ளதாக பயன் படுத்தும் உள முகாமைத்துவம் கற்போருக்கு அவசியமானதாகும்.
உதாரணமாக, விரிவுரைகளின் போது அதனை கவனியாது வேறு செயற்பாடுகளில் ஈடுபடல், தேவையான போது குறிப்பெடுக்காது விடுதல், சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள முனையாமை, குழுவேலைகளில் அக்கறையின்றி இருத்தல், தமது உயரிய பங்களிப்பினை செலுத்தாது இருத்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். –
கற்போர் தான் பங்கேற்கும் கற்றல் சூழலில் எவ்வாறு நடந்துகொள்ளல் வேண்டும் எவ்வாறான ஆயத்தத்துடன் அங்கு செல்ல வேண்டும். தமது பங்களிப்பினை எவ்வாறு உயர்மட்டத்தில் வழங்கலாம், புதிய விடயங்களை எவ்வாறு முயன்று கொள்ளலாம், எவ்வித மனக் கட்டுப்பாட்டுடன் அங்கு நடந்துகொள்ளல் வேண்டும் போன்ற விடயங்களில் அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும்.
ஒரு கற்றலை பயனுள்ளதாக்கிக்கொள்ள முனையும் பழக்கமானது கற்றலில் எதிர்பாராத வெற்றிகளைக் குவிக்கக்கூடியதாகும்.
4. கற்றல் சுற்றுகையை நிறைவு செய்தல்
பொதுவாக கற்றலின் வெற்றி என்பது பொருத்தமான நேரத்தில் பொருத்தமான முறையில் கற்றல் சுற்றுகையை நிறைவுசெய்தல் ஆகும். நாம் விடயங்களை கற்பதற்கென தெரிவு செய்தவுடன் அதனை முடிந்த வரையில் நிறைவாக கற்றுவிடல் வேண்டும். நுனிப்புல் மேய்தல், கற்றலை ஒத்தி வைத்தல், கற்றல் மனதில் பதிந்துள்ளதா என மதிப்பீடு செய்யாது கற்றலை நிறுத்துதல், தேவையான எல்லா விடயங்களையும் தேடிக் கற்காது விடுதல் என்பன கற்றல் சுற்றுகை நிறைவுபெறாத நிலையினையே எடுத்துக்காட்டும்.
பொதுவாக கற்றல் சுற்றுகையானது பின்வருமாறு அமையும்.
• புதிய தகவல்களை மனனஞ் செய்தல்
பொதுவாக சட்டவிதிகள், எண்ணக்கருக்கள் என்பனவற்றை தேவைக்கேற்றவாறு மனனஞ்செய்து கொள்ளல் அவசியமாகும். மனனஞ் செய்யும்போது அவை சலிப்புடையதாகவோ அல்லது சோர்வூட்டுகின்றதாகவோ காணப்படின் வெவ்வேறு நுட்ப முறைகளைப் பயன்படுத்தி கட்டாயம் மனனஞ்செய்து கொள்ளல் அவசியம். ஏனெனில் சில விடயங்கள் மனதில் நன்றாகப் பதியப்பட்டு இருத்தல் அவசியமாகும்.
• தகவல்களை தன்மயமாக்குதலும் ஒழுங்கமைத்தலும்
கற்கும்போது பெறும் தகவல்களை ஏற்கெனவே உள்ள அறிவுடன் இணைத்துக் கொள்ளவும், எமக்குப் புரியும் வகையில் அதனை ஒழுங்கமைத்துக் கொள்ளலும் கற்றல் சுற்றுகையின் மற்றுமொரு படியாகும். தகவல்களை தன்மயமாக்குதலும், ஒழுங்கமைத்தலும் கற்றலின் போது கடினமான செயலாகக் காணப்பட்டாலும் நாம் முயற்சி செய்யும்போது அது மகிழ்ச்சி நிறைந்த செயலாகவும், விருப்பத்திற்குரிய கற்றல் தொழிற்பாடாகவும் மாறும். நாம் கற்றலில் ஈடுபடும்போது ஏற்கெனவே நம்மிடமுள்ள அறிவை புதிய அறிவுடன் தொடர்புபடுத்தும்போது எமது கற்றலுக்கான ஆர்வம் துாண்டப்படுவதுடன் கற்றல் தொடர்பான புதிய நுட்பங்களை கையாள வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்படும். அத்துடன் பல்வேறு வகையில் முயன்று தவறுகள் நேர்ந்தாலும் எம்மிடையே இந்நிலை தொடர வேண்டும். அது புதியதொரு கண்டுபிடிப்பாகவும், எமது ஆக்கத்திறனை பயன்படுத்து வதாகவும் அமைவதால் அங்கு கற்றல் மகிழ்ச்சிக்குரிய செயற்பாடாக மாறும்.
• கற்றலின்போது தகவல்களைப் பயன்படுத்துதல்
நாம் கற்றலில் ஈடுபடும் போது திரட்டிக்கொண்ட தகவல்களை பகுத்தலும், தொகுத்தலும், அதனை அடிப்படையாகக் கொண்டு பிரச்சினை தீர்த்தலில் ஈடுபடலும் எமக்கு கற்றலில் திருப்தியை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாகும். கற்றல் சுற்றுகையின் திருப்தி தரும் ஒரு படியாக கற்றலின் போது தகவல்களைப் பயன்படுத்துதல் அமைகின்றது.
• கற்றுக்கொண்டதை மதிப்பீடு செய்தல்
நாம் கற்றுக்கொண்டவற்றை மதிப்பீடு செய்தல் கற்றல் சுற்றுகையின் மற்றுமொரு படியாக அமைகின்றது. கற்றல் தொழிற்பாட்டினை வலுப்படுத்துகின்றதாகவும், கற்றல் தொடர்பாக ஆனந்தமூட்டுகின்ற ஒரு படிமுறையாகவும் கற்றுக்கொண்டதை மதிப்பீடு செய்தல் என்ற படி அமைகின்றது. எமது தீர்ப்புக்கள், முன்னுணர்வுகள், எடுகோள்கள் என்பனவற்றை தீர்மானிப்பதாக இப்படிமுறையானது அமைகின்றது.
உடன்பாடான சிந்தனையை வளர்த்துக் கொள்ளல்
கற்றலுக்கான உள சுய முகாமைத்துவத்தின் அடுத்ததொரு விடயம் கற்றலுக்காக உடன்பாடான சிந்தனையை வளர்த்துக்கொள்ளல் ஆகும். உடன்பாடான சிந்தனையை வளர்த்துக்கொள்ளல் என்பது கற்றல் தொடர்பாக உயரிய நம்பிக்கை கொள்ளல், சுயமதிப்பினை விருத்தியாக்கிக் கொள்ளல், இலக்குகளை அமைத்துக் கற்றல், கற்றலை மகிழ்ச்சியுள்ள ஒரு செயலாகக் கருதுதல் என்பனவாகும். நாம் எதனை அடைய வேண்டுமென்று சிந்திக்கின்றோமோ அதனையே அடைய வேண்டுமென்று உணர்தலும் வேண்டும். எமது சிந்தனைகளும், உணர்வுகளும் ஒன்றுபடும்போதே எம்மிடையே உடன்பாடான சிந்தனை எழுகின்றது எனலாம்.
கற்றலுக்காக நாம் ஏன் உடன்பாடான சிந்தனையை வளர்த்துக் கொள்ளல் வேண்டுமென்ற ஒரு வினாவை முன்வைத்தால் அதற்கான விடை பின்வருமாறு அமைகின்றது. நாம் கற்றல் தொடர்பாக கொண்டிருக்கும் மனப்பாங்கே எமது கற்றலின் வெற்றியை தீர்மானிப்பதில் அதிகளவு செல்வாக்கு செலுத்துகின்றது எனலாம். மனப்பாங்கு என்பது திட்டமான முறையிலான செயற்பாடொன்றிற்கு அல்லது அவதானமொன்றிற்கான ஆயத்தமாகும் நிலையாகும்.
எமது உணர்வுகள், நம்பிக்கைகள், அறிவு என்பன யாவும் எமது உள்ளார்ந்த சிந்தனைகளின் வெளிப்பாடே ஆகும். நாம் உடன்பாடாக இயங்குதலும், எதிர்மறையாக செயற்படுதலும் அல்லது துடிப்புடன் செயலாற்றுதலும் முதலானவை எமது உள்ளார்ந்த உணர்வுகளின் வெளிப்பாடே ஆகும். மனிதர்களை எடுத்து நோக்கும்போது அவர்களை ஒருவரிலிருந்து ஒருவரை வேறுபடுத்தும் பிரதான காரணி அவர்களது மனப்பாங்கு ஆகும். சில மனிதர்கள் கற்றல் மகிழ்ச்சிகரமான அனுபவம் என்கின்றனர். வேறு சிலரோ கற்றல் கசப்பானது, கடினமானது என்கின்றனர். இங்கு இவர்கள் கற்றல் தொடர்பாகக் காட்டும் உடன்பாடான மனப்பாங்கு கற்றலை தொடர்வதில் உள்ளார்ந்த ஊக்கத்தையும், கற்றல் தொடர்பாக வெளிக்காட்டும் எதிர்மறை மனப்பாங்கு கற்றல் தொடர்பான வெறுப்புணர்வையும் வெளிக்காட்டுகின்றது.
கற்பது என்பது ஒரு சாதாரண கடமையாகவோ அல்லது எதிர்கால தொழிலுக்காகவோ என்றிருப்பவர்கள் கற்றலை ஒரு சாதாரண நிலையிலேயே நோக்குகின்றனர். கற்றல் என்பதை ஒரு கடமையாக கருதுவதை விட கற்றல் என்பதை ஒரு மகிழ்ச்சிகரமான செயற்பாடு என்ற உடன்பாடான மனப்பாங்கை உருவாகுதல் கற்றலில் வெற்றியை ஈட்டித்தரும் ஒரு விடயமாக அமையும்.
கற்றல் தொடர்பான உடன்பாடான மனப்பாங்கு எம்மிடையே உருவாக்குவதற்கு பல்வேறு காரணிகள் துணைபுரிகின்றன. அவற்றுள் முக்கியமானது எமது உள்ளார்ந்த உரையாடல்கள் ஆகும். எமது கற்றல் தொடர்பாக நாம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், சமூகம் என்பவற்றிலிருந்து பல்வேறு பின்னூட்டல்களைப் பெறுகின்றோம். கற்றலின் முக்கியத்துவம் தொடர்பாக நாம் பல்வேறு வழிகளில் உணர்த்தப் படுகின்றோம். இவற்றை அடிப்படையாகக் கொண்டு நாம் உள்ளார்ந்த உரையாடல்களை ஏற்படுத்திக்கொள்ளல் வேண்டும். எமது உள்ளார்ந்த உரையாடல்கள் கற்றல் தொடர்பான ஊக்கத்தை துாண்டுவதாக ஒழுங்கமைக்கப்படல் வேண்டும். எமக்குக் கிடைத்த பின்னூட்டல்களை உடன்பாடாக நோக்குதல் வேண்டும். எமக்குக் கிடைத்த பின்னுாட்டல்களை நாம் பக்கச் சார்பாக அல்லது நம் சார்பாக மட்டும் நோக்கின் எமது உள்ளார்ந்த உரையாடல்கள் ஆக்கபூர்வமானதாக அமைய மாட்டாது.
உதாரணமாக எமது ஆசிரியர் எமது கற்றல் தொடர்பாக முன்வைத்த விமர்சனங்களை நாம் நடுநிலையாக நின்று நோக்கும்போதே நமக்கு எமது கற்றல் தொடர்பான பலம், பலவீனங்கள் நன்றாகத் தெரிய வரும். எமது பலம், பலவீனங்கள் தொடர்பாக நாம் உள்ளார்ந்த உரையாடல்களை உருவாக்கும் போது அது கற்றல் தொடர்பாக எமக்கு உடன்பாடான மனப்பாங்கினை உருவாக்கும். எதிரிடையாக ஆசிரியர் முன்வைத்த விமர்சனங்களை நாம் சரியான கோணத்தில் பார்க்காவிடின் கற்றல் தொடர்பாக எதிரான மனப்பாங்கே உருவாக வழி ஏற்படும். உடன்பாடான மனப்பாங்கினை உருவாக்கும் வழிமுறைகள்
உடன்பாடான மனப்பாங்கினை வளர்த்துக் கொள்ள எம்மிடையே நாம் மூன்று பழக்கங்களை உருவாக்கிக்கொள்ளல் வேண்டும்.
1. அர்ப்பணிப்புடன் செயற்படல் –
2. கூட்டுப் பொறுப்புடன் இயங்குதல்
3. சவால்களை உருவாக்குதல்
அர்ப்பணிப்புடன் செயற்படல்
எதனையும் சரியாக செய்தல் வேண்டும். அக்கறையுடன் செய்தல் வேண்டும். ஒன்றை செய்வதற்காக சில தற்காலிக சந்தோசங்களை இழக்க தயாராகுதல் வேண்டும் என்ற நிலை அர்ப்பணிப்புடன் செயற்படல் ஆகும். சில விடயங்களைத் தவிர்ப்பதால் நான் நன்றாகப் படிக்கின்றேன் என்ற உடன்பாடு ஏற்படும் நிலையில் எமது கனவுகள் நனவாகும் சாத்தியம் ஏற்படுகின்றது.
• கட்டுப்பாட்டுடன் இயங்குதல்
கற்றல் தொடர்பான உடன்பாடான மனப்பாங்குடன் இயங்குவதற்கு வளர்த்துக்கொள்ளப்பட வேண்டியதொரு பழக்கம் கட்டுப்பாட்டுடன் இயங்குதல் ஆகும். எமது உளம் முக்கியமான விடயங்களில் மட்டும் குவிக்கப்படுவதை நாம் உறுதிசெய்து கொள்ளப் பழகுதல் வேண்டும். பொதுவாக கட்டுப்பாட்டுடன் இயங்குவதற்கு பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துதல் அவசியமாகும். அவையாவன:
*இலக்குகளை அமைத்து முன்னுரிமை அடிப்படையில் தொழிற்படல்
*பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக பல்வேறு உபாயங்களைப் பயன்படுத்துதல் *ஓய்வாக இருப்பதற்குப் பழகிக்கொள்ளுதல்
*வெற்றியைக் கொண்டாடுதல்
*நமக்கு நாமே நேர்மையாக இருத்தல்
*மனச்சாட்சியுடன் பரிச்சயமாகி செயற்படுதல் என்பனவாகும்.
சவால்களை உருவாக்குதல்
கற்றலில் எம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்வதற்கு சவால்களை உருவாக்கவும், ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருத்தல் வேண்டும். சவால்கள் சரியான முறையில் நோக்கப்பட்டால் அது எம்மிடையே உடன்பாடான மனப்பாங்கினை உருவாக்கத் துணை செய்யும். எமக்கு நாமே ஆர்வமூட்டிக் கொள்வதற்கும், மாற்றங்களை இலகுவாக ஏற்படுத்திக் கொள்வதற்கும் சவால்கள் எம்மைத் துாண்டுகின்றன. கற்றல் தொடர்பான சவால்கள் பின்வருமாறு அமைகின்றன. அவையாவன:
*தினம் தினம் கற்றல் தொடர்பான விடயங்கள் மாற்றமடைதல்.
*தினமும் திறமையாகச் செயற்படலும் கடந்து போனவற்றை நினைத்து
கவலைப்படாமல் இருக்க வேண்டிய நிலை
*கற்றலுக்கான நல்ல சந்தர்ப்பங்களை தேடி அறிதல்
*புதிய விடயங்களை முயற்சித்துப் பார்த்தல்
*கற்றலுக்கான பல்வேறு வாய்ப்புக்களில் சிறந்ததை பயன்படுத்துதல்
*புதிய மனிதர்களை சந்திக்க வேண்டியிருத்தல்
*உடல், உள நிலைமையை நன்றாக பராமரித்தல் என்பனவாகும்.
மேற்கண்ட சவால்களை விருப்புடன் ஏற்று நடக்கும்போது கற்றல் தொடர்பான உடன்பாடான மனப்பாங்கு எளிதில் உருவாகி விடுவதோடு கற்றல் தொடர்பான சுய ஆர்வமும் விருத்தியாகும்.
அர்ப்பணிப்பு, கட்டுப்பாடு , சவால்கள் என்பனவற்றை நாம் எமது பழக்கங்களாக உருவாக்கிக் கொள்ளும்போது எமது சுயமதிப்பு நல்ல நிலையை அடைந்து உடன்பாடான சிந்தனைப் பழக்கம் இயல்பாகவே எமக்குள் தோன்றும்.
கற்றல் தொடர்பான உடன்பாடான மனப்பாங்கினை உருவாக்குவதற்கான ஆலோசனைகள்
கற்றலில் நாம் வெற்றி பெற சிறப்பான பழக்கங்களும், உள முகாமைத்துவமும் எம்மிடையே உருவாக்கப்படல் அவசியமென இதுவரை நோக்கினோம். இனி கற்றல் தொடர்பான சில பழக்கங்களை விருத்தியாக்கும் வழிமுறைகளை நோக்குவோம். அவையாவன:
நாம் தினமும் சந்திக்கும் வகுப்பறைக் கற்றல்கள் ஏதாவது ஒரு விதத்தில் முக்கியமானவை. அங்கு ஏதாவது ஒரு புதிய விடயத்தினைக் கற்றுக்கொள்ள முடியும் என்ற விருப்பத்துடன் அவ் வகுப்பறைச் செயற்பாடுகளில் முடிந்த வரை ஒன்றிணைய முயற்சித்தல் வேண்டும். வகுப்பறையில் ஆசிரியருடனும், ஏனைய சகபாடிகளுடனும், நல்ல மனோ நிலையில் இணைந்து செயற்படுவதற்கு முன்வரல் வேண்டும்.
மிகச் சுவையான விடயங்களை ஒவ்வொரு கற்றலிலும் பெற முடியும். எமக்கு தெரிந்த விடயங்களை மேலும் விருத்தியாக்கிக் கொள்வதற்கு விரிவுரைகள் எமக்கு உதவும். எமக்குள் உள்ள ஆற்றல்களை, திறன்களை, அறிவை நாமே மதிப்பிட்டுக் கொள்வதற்கு விரிவுரைகள் உதவும் என்ற பெரு விருப்புடன் விரிவுரைகளுக்கு சமுகமளித்தல் வேண்டும்.
நாம் கற்கும் பாடத்தின் ஒவ்வொரு அத்தியாயமும், எமது எண்ணக்கரு விருத்திக்கு படிப்படியாக உதவும். ஏற்கெனவே நாம் கற்றுள்ளவற்றின் தொடர்ச்சியாக புதிய அத்தியாயம் அமையும். புதிய அத்தியாயம் எமக்கு கற்றலில் மேலும் புதிய மாற்றங்களை உருவாக்க உதவும். இந்த மனப்பாங்கோடு ஒவ்வொரு அத்தியாயத்தையும் நாம் அணுகுதல் வேண்டும். சில அத்தியாயங்கள் மகிழ்ச்சிக்குரியவை. சில அத்தியாயங்கள் சலிப்பைத் தருபவை என்றவாறு நாம் மனதிற்குள் உருவாக்கும் படங்கள், கற்றல் தொடர்பான எதிர்மறையான மனப்பாங்குகளையே எம்மிடம் உருவாக்கும். மாணவர்களில் சிலர் பாடங்கள் தொடர்பாகவும் சலிப்பான பாடங்கள், சுவையான பாடங்கள் என்று பிரித்து கற்க முனைகின்றனர். இந் நிலை அவர்களது அடைவு மட்டத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும். ஆகவே இத்தகைய பழக்கங்களை விட்டு விலகிவிடுதல் நன்று.
ஒவ்வொரு நண்பனும் எமக்கு புதிய புதிய விடயங்களைக் கற்றுத் தருவர். ஒவ்வொரு நண்பரிடமிருந்து கற்றலுக்கான புதிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற உணர்வுடன் நண்பர்களுடன் இணைந்து கற்றலில் ஈடுபடல். நாம் சில நண்பர்களை மட்டும் தெரிவுசெய்து அவர்களுடன் மட்டும் இணைந்து கற்பதை மட்டுப்படுத்துவதால் புதிய புதிய விடயங்களையும், கற்கும் முறைகளையும் எம்மால் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விடுகின்றது.
மறுகோணத்தில் பார்க்கும்போது நாம் நண்பர்களுடன் இணைந்து கற்கும் போது நாம் கற்றவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். இவ்வாறு நாம் கற்றவற்றை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் போது எமது கற்றலின் ஞாபக விருத்தி அதிகரிப்பதோடு நாம் கற்றுள்ளவை தொடர்பாக நண்பர்களின் மதிப்பீடுகளையும், பிரதிபலிப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இதனால் எதிர்கால கற்றலுக்கான மனவரைப்படம் எம்முள் உருவாக்கப்படும். எமது உள்ளார்ந்த கலந்துரையாடலுக்கான தலைப்புகளும் எமக்கு கிடைக்கும்.
கற்றலின் போது வினாக்களை எழுப்பிக் கற்றல் ஒரு சிறந்த பழக்கமாகும். வினாக்களை நாம் எம்முள்ளேயே எழுப்பிக் கொள்ளலாம். அத்துடன் ஆசிரியர் அல்லது விரிவுரையாளர்களிடமும் எழுப்பலாம். ஆசிரியர் அல்லது விரிவுரையாளர்களிடம் எமது வினாக்களை முன்வைப்பதால் மேலதிக கற்றல் எழுவதோடு எமது கற்றல் தொடர்பான சந்தேகங்களையும் தீர்த்துக்கொள்ள முடியும். நல்ல ஆசிரியர்களிடம் மாணவர்கள் முன்வைக்கும் வினாக்களுக்கு மிக விரிவாகவும், விளக்கமாகவும், உதாரணங்களுடனும் விடையளிக்க முற்படுவர். இவ்வாறான ஆசிரியர்களிடம் கற்கும் மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள் எனலாம். ஆகவே ஆசிரியர்களிடம் வினாக்களை வினவும் பழக்கமானது கற்போருக்கு நிறைந்த பயனை அளிப்பதாக அமையும்.
உடன் பாடான மனப்பாங்கு விருத்திக்கு மிக அவசியமானது கற்றலுக்கான இலக்குகளை பட்டியல்படுத்தி வைப்பதாகும். கற்றலுக்கான இலக்குகள் தெளிவாக தெரியும் போது கற்பதற்கான உடன்பாடு இலகுவாக உருவாகும். உதாரணமாக, ஒரு விடயத்தினைக் கற்பதால் உடனடியாக ஏற்படும் நன்மைகள், வேறு ஒரு விடயத்தினைக் கற்பதற்கு உதவியாக அமையும் தன்மை என்று பிரித்து பார்ப்பதினால் கற்றலின் பயன் தெளிவாக எமக்குத் தெரியும்.
Also Read – 21 ஆம் நூற்றாண்டின் திறன்களும் பாடசாலைத் தலைவர்களும்