அவசர நிலைமைகளின்போது குறிப்பாக தன்னுடைய உறவினரின் (மனைவி, குழந்தை) திடீர் சுகயீனம் அல்லது விபத்து போன்றவற்றின் போது எவ்வாறு விடுமுறை எடுப்பது? இது சுகயீன வீடுறையா? அல்லது சமயோசித விடுமுறையா?
பொதுவாக விடுமுறை என்பது முதலில் சலுகை என்பதை நினைவில் நிறுத்திக்கொண்டு விடைக்கு செல்லலாம் என நினைக்கிறேன்.
பொதுவாக அரச சேவையாளர்களின் விடுமுறை தொடர்பில் தாபன விதிக்கோவையின் XII ஆம் அத்தியாயத்தில் விளக்கப்படுகின்றது. இவற்றில் உள்ள சில விடயங்கள் திருத்தங்களுக்கும் உள்ளாகி சுற்றுநிருபங்களாக வெளியிடப்படும். அவ்வாறு வெளியிடப்படும்போது புதிய சுற்றுநிருபத்தின் நடைமுறையை பின்பற்றுவது கட்டாயமானதாகும்.
பொதுவாக விடுமுறையை எந்த வகைக்குள் அடக்குவது என்பதை பார்த்தால், அவசர நிலைமை குறிப்பாக விபத்தோ அல்லது திடீர் சுகயீனமோ குறிப்பிட்ட விண்ணப்பதாரிக்கு (அரச அலுவலர்) ஏற்பட்டால் அது சுகயீன விடுமுறையாக கருத்திற்கொள்ளப்படும்.
ஆனால், தன்னுடைய மனைவி, குழந்தைகள், உறவினர்களுக்கு ஏற்பட்டு அவர்களுடைய சிகிச்கையின் நிமித்தம் குறிப்பிட்ட விண்ணப்பதாரி விடுமுறை எடுக்க வேண்டுமானால் அது அவருடைய அமைய விடுமுறையாகவே கருத்திற்கொள்ளப்படும்.
பொதுவாக அமைய விடுமுறையை எடுப்பதற்காக தாபன விதிக்கோவையில் சொல்லப்படுகின்ற ஒரு விடயம் விடுமுறையை எடுப்பதற்கு 7 நாட்களுக்கு முன்னர் முன்கூட்டியே அறிவித்து அனுமதி பெறப்பட்டிருக்கவேண்டும் என்பதாகும். உரியவர் விண்ணப்படிவத்தையும், பதில்வேலைக்குரிய ஒழுங்குகளையும் முன்கூட்டியே வழங்கியிருக்கவேண்டும். இதுவே பொதுவான நடைமுறையாகும்.
ஆனால், உறவினரின் சுகவீனம் என்பது, பெரும்பாலும் முன்கூட்டியே எதிர்பாத்து ஏற்படும் ஒன்றல்ல. திடீரென ஏற்படும் ஒரு நிகழ்வாகும். அதேபோன்றுதான் உறவினரின் மரணமும் திடீரென ஏற்படும் நிகழ்வுகளாகும். இந்த நிலைமைகளில் என்ன செய்யலாம்?
இத்தகைய நிலைமைகளின்போது விடுமுறையை அறிவிப்பதற்கு பொதுநிருவாக சுற்றறிக்கை இலக்கம் 24/2013 இல் ஒரு அலுவலர் அவசர நிலைமை ஒன்றின் காரணமாக கடமைக்கு சமூகமளிக்க முடியாது போனால், அதனை SMS, TELEMAIL, EMAIL or Telephone Call ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றின் மூலம் அறிவித்த பின்னர் கடமைக்கு திரும்பும் நாளில் உரிய விண்ணப்பப் படிவத்தினை வழங்கவேண்டும். என்று குறிப்பிடுகின்றது.
எனவே, அவசர நிலைமை என ஏற்றுக்கொள்ளப்படிக்கூடிய நிலைமைகளின்போது நீங்கள் இவ்வாறு திணைக்களத் தலைவருக்கு அறிவிப்பதன்மூலம் அதனை நீங்கள் ஒரு அமைய விடுமுறையாக பெற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறை காணப்படுகின்றது.
நான்கூறிய சுற்றுநிருப விடயங்களிலும் பார்க்க ஏதும் விடயங்கள் இருந்தால் இங்கே பதிவிடுங்கள். ஏனையோருக்கும் பயனானதாக இருக்கும்.
– இனியவன் ஓய்வுபெற்ற அதிபர்.