கல்வி நிருவாக முகாமைத்துவ நடைமுறைகளுக்கு தமிழில் ஒரு “அகராதி”
– அன்பு ஜவஹர்ஷா –
2021 ஆம் ஆண்டு விபரப்படி இலங்கையில் உள்ள 10146 அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள் என்ற வகையில் 241054 ஆளணியினரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபடுகின்றவர்கள் என்ற வகையில் ஆசிரியர் ஆலோசகர்கள் மேற்பார்வையாளர்கள் வேறு திணைக்களத்துடன் தொடர்புபட்டவர்கள் வகையில் எல்லாமாக சேர்த்து இரண்டரை லட்சம் ஆளணியினர் பாடசாலைகளோடு தொடர்புள்ளவர்களாக உள்ளார்கள். அரச சேவையில் இது தனி ஆளணியாக ஆறில் ஒரு பங்கு என்ற வகையில் பெரிய தனித்தொகுதி ஆகும்.
2021.08.30 முதல் வரைவிடப்பட்ட சேவையாகப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவை, இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை என்பவற்றோடு இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை உட்பட கணக்காய்வு சேவையும் இந்த தொகுதிக்குள் அடங்குகின்றன.
தொழில்வாண்மைத்துறை என்ற பகுதிக்குள் வரும் வைத்தியசேவை போன்று மேல் சொல்லப்பட்ட வரைவிடப்பட்ட சேவை வகுதியினரும், கல்வித்துறை தொழில்நுட்பவியலாளர்களே. அத்தோடு பூரணமாக ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் தொழில் வாண்மையாளர்களே.
கல்வித் தத்துவங்களிலும் முகாமைத்துவ இலக்கங்களிலும் உள்ள விடயங்கள் கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் வழிகாட்டுகின்றன என்ற கருத்தில் மறுப்பு இருக்க முடியாது. ஆனாலும், இப் பணியியை குறையின்றி செவ்வனே செய்வதற்கு இற்றைப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உதவிகளும் அவற்றை கையாள்வது தொடர்பாக அறிவும் அவசியமாகும்.
கொழும்பு, சென்னை குமரன் வெளியீடாக வெளியாக்கியுள்ள தேசிய கணக்காய்வு திணைக்களத்தில் கணக்காய்வு அத்தியட்சகராக நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஏ.எம் மாஹிரின் ஐந்தாவது நூலாக “பாடசாலை அதிபர் ஆசிரியர் தாபன முகாமைத்துவமும் நடைமுறைகளும்” என்ற நூல் 569 பக்கங்களுடன் 28 அத்தியாயங்களின் உள்ளடக்கங்களோடு 11 பின்னிணைப்புக்களுடன் வெளிவந்துள்ளது.
ஊடகவியலாளர், எழுத்தாளர், ஆசிரியர், ஆசிரியர் ஆலோசகர், கல்வி வள நிலையப் பொறுப்பாளர், தொழிற்சங்கவாதி, புலனாய்வு அலுவலர், பயிற்சி வளவாளர் என்று 55 வருட கால தினமும் இற்றைப்படுத்திக் கொண்டு இருக்கும் எனது அவதானிப்பில் (அன்பு ஜவஹர்ஷா ஆகிய நான்) இந்த நூல் பாரிய தாக்கத்தையும், தேவையையும், நிவாரணத்தையும் தந்துள்ளதாக இனம் காண முடிகின்றது.
போட்டிப் பரீட்சைகளுக்கு விண்ணப்பம் கோரப்படும் போது அட்டைகளை மாற்றி அவசரமாக தயாரிக்கப்படும் அல்லது தேவையாயின் பொருட்டு வாசிப்போடு மறந்துவிடும் கல்வித் தத்துவங்கள், முகாமைத்துவ இலக்கியங்கள், இற்றைப்படுத்தப்படாத தகவல் தொகுப்புக்கள் இவைகளிடையே வர்த்தக நோக்கமற்ற நூல் என்று இதைக் குறித்து காட்டும் போது விலையை மட்டுமே கணித்து அப்படியான வெளியீடா என்ற வினாத் தோன்றலாம். ஆனால், வெளியீட்டு நிறுவனம் அதை நோக்கமாகக் கொண்டு இருப்பதை குறை காண முடியாது. இந்த நூலாக்க முயற்சியில் கடந்த ஆறு மாத காலமாக நூலாசிரியரின் தேடல், அர்ப்பணிப்பு, உள்ளடக்கம், காத்திரம் போன்றவற்றை பார்க்கும் போது இதை வர்த்தக நோக்கம் கொண்ட படைப்பாக இனம் காண முடியாதுள்ளது.
தலைப்பில் உள்ள அதற்கு “அகராதி” என்ற பதம் தொடர்பாகவும் இந்த நூலின் பொருத்தப்பாடு சம்பந்தமாகவும் சில வாசகங்கள் இருந்தாலும் இந்த நூல் பற்றிய அறிமுக ஆய்வு ஒன்றை எழுத எனக்கு பல தூண்டல்கள் உள்ளன.
கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகள், பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள், தேசிய கல்வி நிறுவனம் உட்பட கற்றல், கற்பித்தலுக்கு வழிகாட்டும் அமைப்புகளில் இருந்து கல்வித்துறை ஆளணியினர் பெற்றுக்கொள்ளாத பல தொழில்நுட்ப விடயங்களும் உத்திகளும் நிறைய உள்ளன. தமிழில் மட்டுமல்ல பெரும்பாண்மை மொழியில் கூட இருந்து வரும் விசாரிப்புகளில் இதை கண்டுகொள்ள முடிகின்றது.
பாடசாலை ஆளணியினர் தாபன விடயங்கள் தொடர்பாக விளக்கங்களையும் உத்தியோகத்தர்கள் அதனை நடைமுறையில் பிரயோகிப்பது தொடர்பான அறிவையும் பெறுவது மிக முக்கியமானதாகும். ஆசிரியர் – அதிபர் உறவு, அதிபர் – மேற்பார்வையாளர் உறவு என்ற விடயங்கள் பாடசாலைகளில் நிருவாக முகாமைத்துவ நடைமுறைகள் செய்வதற்கு மிக அவசியமானதும், அத்திவாரமானதாகும்.
தாபன விடயங்களில் எனது ஈடுபாட்டையும் கடந்த பல ஆண்டுகாலமாக எனது ஆக்கங்களையும் 10 ஆண்டு காலமாக முகநூல்களில் எனக்கு வரும் வினவல்களையும் வைத்துப்பார்க்கும் போது அதிபர் ஆசிரியர்களுக்கு இந்நூலின் முக்கியத்துவம் பற்றி விதைந்துரைக்க முடியும். லீவு விண்ணப்பம், அலுவலக கடிதங்கள், வருடாத சம்பள ஏற்றப் படிவங்கள், சம்பள முறைமைகள் உட்பட தாபன விடயங்கள் தொடர்பாக ஆசிரியர்கள் மட்டுமல்ல கல்வித்துறை சாந்தோர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் உண்டு. அந்த வகையில் 28 தலைப்புகளில் நூலாக்கப்பட்டுள்ள விடயங்கள் இதுவரை வெளியாகி உள்ள எந்த நூலிலும் உள்ளடக்கப்படாத தகவல்கள் என்று சொல்லலாம்.
பாடசாலை அலுவலக முகமைத்துவமும் நிர்வாக மேற்பார்வையும், ஆசிரியர் லீவு, அலுவலக நேரங்கள், புகையிரத ஆணைச்சீட்டு, சுயவிபரக் கோவை, இடமாற்றம், பாடசாலைப் பதிவேடுகள், வினைத்திறன் தடை தாண்டல் பரீட்சைகள், அரச கரும மொழிக் கொள்கை, ஓய்வு பெறும் நடைமுறை உட்பட கல்விசார் ஊழியர்கள் தமது தொழில் எந்தவித வழுவும் இன்றி சிறப்பாக செய்ய சிறந்த வழிகாட்டலாக இந்த நூலை கொள்ள முடியும்.
தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னான பீடாதிபதி எம்.ஐ.எம் நவாஸ் தனது அணிந்துரையில் பின்வரும் கருத்தை தெளிவாக குறிப்பிடுகின்றார். “தவறான தகவல்கள் அல்லது பிழையான ஆலோசனைகள் பெற்று செயல்படுகின்ற பொழுது ஏற்படுகின்ற தவறுகளினால் முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்ற சவால்களை தவிர்ப்பதற்கு இந்நூல் உதவியாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை” என்ற கருத்து பாடசாலை அதிபர் ஆசிரியர் தாபன முகாமைத்துவ நடைமுறையில் இனம் காணப்பட்ட விடயங்களே தீர்வாக இது அமையும் என்ற எண்ணத்தை வலியுறுத்துகின்றது.
ஆசிரியர், அதிபர்களுக்கு மேற்பார்வை மற்றும் கணக்காய்வு என்ற விடயங்களுக்காக அலுவலர்கள் பாடசாலைக்கு வரும்போது பெரும்பயம் உண்டாகிறது. வழிகாட்டுவதும் தவறுகளை; சரி செய்ய பரிகாரம் செய்வதும் தான் இவர்களின்; பணியாகும். உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர்கள் பாடசாலைக்கு வந்து விட்டால் பலருக்கு கிலி கொள்ளத் தொடங்கிவிடும். இது ஒரு பிழையான பயமாகும்.
ஒவ்வொரு பாடசாலைக்கும் செல்வதற்கு இந்த ஆளணியினர் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இவர்களது வினவல்கள் மூலம் பலவிதமான பயன்களைப் பெற முடியும். இந்தத் துறையில் உயர் பதவியில் இருக்கும் நூலாசிரியரின் அத்துறை அனுபவமும், ஆற்றலும் இந்த நூலை ஒரு பொக்கிஷமாக்கி உள்ளது எனலாம்.
பின்னிணைப்புக்களில் இடம்பெற்றுள்ள படிவங்கள், பாடசாலைகளின் கணக்காய்வுகளில் அவதானிக்கப்பட்ட பொதுவான விடயங்கள், முக்கிய சுற்றறிக்கைகளின் இலக்கங்களுடன் உள்ள அட்டவணைகள் (122 சுற்றறிக்கைகளை பற்றியது), உடன்படிக்கைகள், கற்கை விடுமுறை விண்ணப்பப்படிவம், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவையின் கடமை பட்டியல், பொருள்கோடல்கள் போன்றவை இந்த நூலில் கனதியை மிக அதிகரித்து முழுமைப்படுத்துகின்றது. சுமார் 3000க்கும் மேற்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளிலும் இருக்க வேண்டிய நூலாக இதனைச் சொல்லலாம். அதனால் தான் “அகராதி” என்று தலைப்பிட்டேன். அணிந்துரையில் முன்னாள் பீடாதிபதியவர்கள் குறிப்பிட்டது போல சரியான தகவல்கள் பெற இந்த நூல் சிறந்த ஆவணமாகும். சில மேற்பார்வை அதிகாரிகளும் தம்மை இற்றைப்படுத்திக் கொள்ளாத சில கணக்காய்வு உத்தியோகத்தர்களும் பாடசாலைகளில் முரண்பாடுகளை உண்டாக்குகின்றனர்.
அதேபோல் தம்மை இற்றைப்படுத்திக் கொள்ள மறுக்கும் சில அதிபர்களினாலும் பாடசாலை நிர்வாகத்தில் சிக்கல்கள் உண்டாகின்றன. இத்தகைய கல்வித்துறை அகராதி கைவசம் இருந்தால் இலகுவாக பாடசாலை விடயங்களை கையாளலாம். குறிப்பாக லீவு விடயங்கள் தொடர்பாகவே அதிக முரண்பாடுகள் உண்டாகின்றன. இன்று பல அதிபர்களை விட ஆசிரியர்கள் இத்தகைய விடயங்களில் மிகத் தெளிவுடன் உள்ளார்கள். கடந்த மாதம் வரை இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள் ஆதாரத்துடன் இந்த நூலில் உள்ளது மிகப் பயன் தரும் செயற்பாடாகும்.
குறிஞ்சி மலர் எப்போதாவது பூக்கும். ஆனால் இப்படி ஒரு முழுமையான நூல் இனிவருவது சாத்தியமல்ல. அதனை ஆக்கியோனின் தொழில்சார், கல்விசார் தகவல்களை இங்கு குறிப்பது முக்கியமாகின்றது.
நூலாசிரியர் காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்டவர், காத்தான்குடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது இளமாணிப் பட்டத்தையும் (BA), இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அபிவிருத்தி பொருளியலில் முதுமாணிப் பட்டத்தை (MDE) அதி விசேட சித்தியுடனும் (Merit) பெற்றவர். மேலும் இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணிப் பட்டத்தையும் (LLB) பெற்றவர். கல்வி நிர்வாகம், கல்வி முகாமைத்துவம் மற்றும் நிதி முகாமைத்துவம் போன்ற துறைகளில் ஒரு சிறந்த வளவாளராகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்;. தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் (கணக்காய்வாளர் தலைமை அதிபதித் திணைக்களம்) கணக்காய்வு அத்தியட்சகராக நீண்டகாலமாக கடமையாற்றி வரும் இவர் கணக்காய்வு, அரச நிதி முகாமைத்துவம் போன்றவற்றில் நீண்ட அனுபவங்களை கொண்டவர். கணக்காய்வு, அரச நிதி முகாமைத்துவமும் நிதி முறைமையும் மற்றும் பாடசாலை நிதி முகாமைத்துவம் என்பன இவரது ஏனைய நூல்களாகும்.
கணக்காய்வு அத்தியட்சகராக இல்லாது கல்விப் புலத்திற்கு கைகொடுக்கும் நண்பனாக இந்நூலை இத்தகைமையாளர் பகிர்ந்துள்ளார்
பாடசாலைகளுக்கு துணைபுரியும் சேவையைச் சேர்ந்த இத்தகைய வளவாளரின் ஐந்தாவது பிரசவத்தை கையில் எடுத்து சீராட்டி பயன்பெற வேண்டியது கல்விப்புலத்தாரின் கடமையென்றே இக்குறிப்பை முடிக்கத் தோன்றுகின்றது.
நூலை கொழும்பில் பெற்றுக் கொள்ள -எமது வட்சப் இலக்த்தை தொடர்பு கொள்ளுங்கள்