பாடசாலை ஆரம்பமாகும் நேரம் முடிவடையும் நேரத்தை அதிபர்கள் வசதிக்கேற்ப தீர்மானித்துக் கொள்ளமுடியும் என முன்னர் கூறப்பட்டாலும் பின்னர் நேரங்கள் கல்வியமைச்சால் தீர்மானிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் ஓட்டோவில் வருவதானால் ஓர் ஓட்டோவில் இரு மாணவர் மாத்திரம் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
பாடசாலைக்கான உணவுச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டிருக்க வேண்டும். மாணவர்கள் தமக்குத் தேவையான தின்பண்டங்களை வீட்டிலிருந்தே பாதுகாப்பாக கொண்டு வர வேண்டும். உண்ணும் போது மாணவரிடையே பகிர்ந்து உண்ணுதலை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக பெரிய பாடசாலைகளில் ஒலிபெருக்கி வசதிகள் உள்ளதால் காலை ஒன்றுகூடல்களை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக மாணவர்கள் ஒன்றுகூடுதல்களை முற்றாகத் தவிர்க்க வேண்டும். சில காலம் விளையாடுதலையும், புறக்கிருத்திய ஒன்றுகூடல் நிகழ்வுகளையும் தவிர்க்க வேண்டும்.
கட்டாயம் குடிநீர் வசதியை, மலசலகூட வசதியை அதிபர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உள்ளுராட்சி மன்றத்தின் உதவியையும் பெற்றுக் கொள்ள முடியும். நீர்த்தாங்கி இல்லாத பாடசாலைகள் வலயக்கல்விப் பணிப்பாளர்களுடாக மாகாண கல்விப்பணிமனைக்கு விண்ணப்பித்தால் அவற்றை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தேவையான அறிவுறுத்தல்களை ஆங்காங்கே பதாதைகளைத் தொங்க விடுவதன் மூலம் விழிப்புணர்வை மேற்கொள்ள முடியும்.
மதியஉணவு பெற்று வந்த மாணவர்களுக்கு 1000 ரூபா உலருணவுப் பொதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை ஆரம்பமானதும் அச்செயற்பாடும் முன்னெடுக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தீவிரமான பரவலுக்குரிய வைரசாகும். எனவே ஒரு மாணவனுக்கு தொற்று ஏற்பட்டால் விளைவு விபரீதமாகி விடும். எனவே அனைவரும் இதுவிடயத்தில் ஒத்துழைக்க வேண்டும்.
பாடசாலை ஆரம்பித்தல், நடத்துதல் தொடர்பாக சுகாதாரத்துறையினரின் ஆலோசனை அவ்வப்போது பெற்றுக் கொள்ளப்படும். தேவையான போது அவர்களை அழைத்து தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.
பிரதேசத்திற்குப் பிரதேசம் தேவைகள் வேறுபடலாம். எனவே அந்தந்த பிரதேச சுகாதார அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அறிவுறுத்தல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைககள் மற்றும் பாடசாலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது செயற்பட வேண்டிய முறைகள் தொடர்பாக விபரமான ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் 15/2020 வழிகாட்டிக் கையேட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சகல பாடசாலகளின் அதிபர்களும் பொதுச் சுகாதார மருத்துவர் அலுவலகத்துடன் நேரடித் தொடர்புகளைப் பேண வேண்டுமென்பதுடன் ஏதேனும் அவசர சந்தர்ப்பங்களின் போது தமது பிரதேசத்தின் மருத்துவ உத்தியோகத்தர்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு விரைவாக செயற்பட வேண்டும்.
விசேட நிலைமைகளின் போது 1390 அழைப்பினை ஏற்படுத்தி தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வி.ரி.சகாதேவராசா – மேலதிக கல்விப் பணிப்பாளர்
-தினகரன்-