ICT. பாடமும் தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கான வாய்ப்பும்.
(க.பொ.த உயர்தர மாணவர்களுக்கானது)
நீங்கள் கல்விப்பொதுத் தராதர உயர்தரத்தில் (A/L) எந்த பிரிவில் கல்விகற்றாலும் உங்களுடைய கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பெறுபேற்றின் அடிப்படையில்(O/L) தகவல் தொடர்பாடல் தொழினுட்ப கற்கைக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா??
பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்படுவதற்கான தகுதிகள் மற்றும் தகுதியின்மைகள் பற்றிய பூரண விளக்கம் மற்றும் வழிகாட்டல்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் எங்களுடைய மாணவர்கள் தங்களுடைய உயர் கல்விக்கான வாய்ப்புக்களை இழப்பது என்பது ஒரு துர்அதிஷ்டமான நிலையே ஆகும்.
இந்த வகையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான தெரிவுகளின் போது குறிப்பாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டுமெனில் மாணவர்களாகிய நீங்கள் எத்தகைய தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அதற்கான தெரிவு ஒழுங்குகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் இப்பதிவின் ஊடாக தெளிவுபடுத்தலாம் என நினைக்கின்றேன்.
உயர்கல்வி வாய்ப்புகளுக்கான உங்களுடைய தகுதிகளையும் தகுதியின்மைகளையும் (A/L) உயர்தரம் படிக்கும் போதே இனங்கண்டு அவற்றை சீர்செய்தால் உங்களின் உயர்கல்வி வாய்ப்புகளை பிரகாசமாக்கிக் கொள்ள முடியும். இல்லையேல் மயிரிழைகளில் உங்களுடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம். இல்லையேல் மயிரிழையில் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் நீங்கள் தவறவிடலாம்.
அந்த வகையில் தேசிய கல்வியற் கல்லூரிகளில் ஆங்கில மொழிமூல தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தை அல்லது கற்கையை நீங்கள் பின்பற்றி ஓர் ஆசிரியராக வெளிவர விரும்பினால் கீழ்வரும் தகுதிப்பாடுகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
கீழ்வரும் ஒழுங்குகளின் அடிப்படையில் தெரிவுகளுக்கான முன்னுரிமை வழங்கப்படும்.
தெரிவு – 01
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தில் குறைந்த பட்சம் திறமைச்சித்தி (B) உட்பட மூன்று பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில மொழிப் பாடத்தில் குறைந்த பட்சம் திறமைச் சித்தி(B) அல்லது ஆங்கில இலக்கியத்தில் சாதாரண சித்தியுடன் (C) சித்தியடைந்து இருத்தல் வேண்டும்.
தெரிவு – 02
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தில் சாதாரண சித்தியுடன் (C) மூன்று பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்து இருத்தல் மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தில் குறைந்த பட்சம் திறமை சித்தியுடன் (B) மற்றும் ஆங்கில மொழிப் பாடத்தில் குறைந்த பட்சம் திறமைச் சித்தி (B) அல்லது ஆங்கில இலக்கியப் பாடத்திற்கு சாதாரண சித்தியுடன் சித்தியடைந்து இருத்தல் வேண்டும்.
தெரிவு – 03
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் பௌதிக விஞ்ஞான பாட துறையில் மூன்று பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்து இருந்த அதேவேளை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்திற்கு குறைந்தபட்சம் அதிதிறமைச்சித்தி (A) மற்றும் ஆங்கிலப் பாடத்திற்கு குறைந்தபட்சம் திறமைச்சித்தியுடன்(B) அல்லது ஆங்கில இலக்கியபாடத்தில் சாதாரண சித்தியுடன் (C) சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.மேலும் 12ஆம் தரத்தில் பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சையில் சித்திபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு Z புள்ளி தொடரொழுங்கு அடிப்படையில் குழுவிற்காக தெரிவு செய்யப்படுவதற்கான முன்னுரிமை உரித்தாகும்.
தெரிவு – 04
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான பாட துறையில் மூன்று பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்து இருத்தல் மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்திற்கு குறைந்தபட்சம் அதி திறமைச் சித்தி(A) மற்றும் ஆங்கில பாடத்தில் குறைந்த பட்சம் திறமைச்சித்தியுடன் (B) அல்லது ஆங்கில இலக்கிய பாடத்தில் சாதாரண சித்தியுடன் (C) சித்தி பெற்றிருத்தல் வேண்டும். மேலும் 12ஆம் தரத்தில் பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சையில் சித்திபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு Z புள்ளி தொடரொழுங்கு அடிப்படையில் இக்
தெரிவு – 05
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கலை, வணிகம், தொழில் நுட்பவியல் மற்றும் வேறுபாடத்துறைகளிலாயினும் ஏதேனும் மூன்று பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்து இருத்தல் மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்திற்கு விசேடசித்தி(A) மற்றும் ஆங்கிலப் பாடத்திற்கு குறைந்தபட்சம் திறமைச்சித்தியுடன்(B) அல்லது ஆங்கில இலக்கியப் பாடத்திட்டத்தில் சாதாரண சித்தியுடன்(C) சித்தி பெற்றிருத்தல் வேண்டும் மேலும் 12ஆம் தரத்தில் பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சையில் சித்திபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு Z புள்ளி தொடரொழுங்கு அடிப்படையில் இக் குழுவிற்காக தெரிவு செய்யப்படுவதற்கான முன்னுரிமை உரித்தாகும்.
குறிப்பு
மாணவர்களாகிய நீங்கள் மேலே குறிப்பிட்ட தகுதியை தீர்மானிக்கும் பாடங்களுக்கான பெறுபேறுகளை உங்களால் முடிந்த அளவிற்கு உச்ச அளவில் எடுத்து வைப்பது மிகப் பொருத்தமானதாக அமையும் ஏனெனில் இனிவரும் காலங்களில் சிலவேளைகளில் குறித்த தகுதியை தீர்மானிக்கும் பெறுபேறுகள் மாற்றி அமைக்கப்படலாம்
மேலதிக தகவல்கள் ஏதும் தேவைப்படின் தொடர்பு கொள்ளுங்கள். என்னால் இயன்ற அளவிற்கு உங்களின் சந்தேகங்களை தீர்த்து முறையான வழிகாட்டல்களை மேற்கொள்ள முயற்சிப்பேன்.
தொடர்ந்து வரும் பதிவுகளில் தொழிநுட்பப் பிரிவு மாணவர்களுக்கான தேசிய கல்வியற் கல்லூரி வாய்ப்புக்கள் எவ்வாறு காணப்படுகின்றன அதற்கான தகுதிகள் மற்றும் தகுதியின்மைகள் எவை என்பதை பற்றி எழுதலாம் என சிந்திக்கின்றேன்.
S.j.Aathy
Mu/vidyananda college.
2019-01-25 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகையை அடிப்படையாகக் கொண்டது.