கழிப்பறை சுவரில் எழுதுவது, போலியான கணக்கைக்கொண்டு முகப்புத்தங்களில் பிறரை விமர்சிப்பது, தனது வகுப்பறையின் மேசை முழுவதும் கிறுக்குவது, ஆசிரியரின் மோட்டார் வண்டியின் வாகன சீட்டினை பிளேட்டால் வெட்டுவது, அடுத்தவர் மோட்டார் வண்டியில் மின்னல் வேக பயணம் செய்து விபத்துக்கு உள்ளாவது, பியர்,மதுப்பாவனை, சிகரட் என பழகி பெற்றோரை துடிக்க வைப்பது வீட்டிலேயே காசு திருடி தொலைபேசி வாங்குவது, சினிமா பாணியில் முடியை கத்தரிப்பது, சீருடைகளை ஒருவிதமாக தைத்து அணிவது( ஒட்டலாக/ இறக்கமாக) என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதேவேளை பெண்பிள்ளைகளின் தவறுகள் வேறொருவிதமானவை.
பள்ளிக்கூடத்தில் கொஞ்சம் கெடுபிடியாக இருந்தால் இப்படியெல்லாம் நடக்காது, ஆசிரியர்கள் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும், ஆசிரியர்கள் இப்ப தங்கடபாடு, இப்போது பாடசாலைகளில் இறுக்கமில்லை, பள்ளியில் தானே பெரும்பாலான நேரம் இருக்கிறார்கள் ஆசிரியர்கள்தான் எல்லாத்துக்கும் காரணம் என்பது பெற்றோர்கள் சேர்ந்த சமூகத்தின் வாதம்.
இதெல்லாம் எங்களின் வேலை அல்ல நாங்கள் பாடம் நடத்துவதா? அல்லது இதெல்லாத்தையும் பார்ப்பதா பள்ளிக்கு வந்தால் பாடம் நடத்தலாம் , வராதபோது என்ன செய்வது .பெற்றோர்கள் தான் இப்படி செல்லம் கொடுத்துக் கொடுத்து கெடுக்கிறார்கள். இது எல்லாம் அவர்கள் தான் பார்க்கவேண்டும். திட்டினால் அடித்தால் உடனே சண்டைக்கு வருகிறார்கள். அரசாங்கம் வேறு சிறுவர் உரிமை மீறல், மனித உரிமை மீறல் நடவடிக்கை என மிரட்டுகிறது. நமக்கேன் வம்பு என்பது ஆசிரியரின் வாதம்.
மாணவர்களின் இத்தகைய நடத்தைக்கு காரணம் பள்ளியில் ஒழுக்கமின்மை என பெற்றோர்களும் வீட்டில் கட்டுப்பாடு இல்லாததே காரணம் என ஆசிரியர்களும் கூறுகையில் உண்மையான காரணம் எது என்பதையும் அதற்கான தீர்வுகள் எவை என்பதையும் ஆராய மறந்துவிடுகின்றோம்.
உண்மையில் இத்தகைய மாணவர்களின் தவறுகளுக்கு அவர்களின் மூளையின் ஒரு பகுதியான முன் மூளை புறணி (prefrontal cortex) தான் காரணம் என்பது மருத்துவ உளவியலாளர்கள் மற்றும் நரம்பியல் மருத்துவர்களின் கருத்து ஆகும்.
நெற்றிப் பொட்டும் அதற்கு மேலுமான மூளையின் முன்பகுதியான முன் மூளை புறணி தான் மூளையை பொறுத்தவரை கடைசியாக வளர்ச்சியுற்று முற்று பெரும் பாகமாகும்.
முன் மூளை புறணியின் இறுதிக் கால வளர்ச்சி என்பது பள்ளிப் பருவம் முழுவதும் தொடர்ந்து 19 – 20 வயதில் முடிவு பெறுகிறது. முன்மூளை புறணிதான் ஒருவர் பெரியவர் பருவத்திலா சிறார் பருவத்தில் உள்ளாரா என்பதை தீர்மானிக்கும் முக்கிய பாகம் என்பது டாக்டர் ரீட்டா கார்ட்டர் (book – Mapping of the mind) போன்ற வல்லுனர்களின் கண்டுபிடிப்பாகும்.
அடுத்தவர்களின் நோட்டுப் புத்தகத்தை கிழிப்பதிலிருந்து வகுப்பறையில் உள்ள சுவிச் போட்டை( Switch board) உடைப்பது என யாவுமே இன்னமும் முதிர்ச்சியடையாத முன் மூளை புறணியின் (prefrontal cortex) வேலைதான்.
இவ்வாறு முதிர்ச்சியடையாத மூளையின் பாகத்தை கொண்டிருக்கும் மாணவர்களின் நடத்தைமீறல் / தவறான நடத்தைகள் இயற்கையானது தான் எனக் கொண்டால்! ஏன் அவ்வாறு முன் மூளைப் புறணி செயற்படுகின்றது அதற்கான தீர்வுகள் தான் என்ன? என்ற கேள்வி எழுவது இயல்பே!!.
முதலில் மூளையின் இந்த பகுதி பற்றிய உண்மைகளை நாங்கள் நோக்குவோம்.
இது நீண்டநாள் குறிக்கோள்களை உருவாக்குதல். அதற்கு எதிரான குறுகிய கால சபலங்களை நிறைவேற்றுதல். சட்டங்கள் தர்ம நியாயங்கள் குறித்து அறிதல் அதற்கு எதிராக அவற்றை மீறி திருப்தி அடைதல். அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெறுதல் அல்லது அதற்கு எதிராக அதை துரத்தும் மனநிலை என இவை அனைத்துக்குமே முன் மூளைப் புறணி பொறுப்பேற்கும் அதேவேளை செயலூக்கம், சேர்ந்து குழுவில் பகிர்தல், கண்காணிப்பு, மீளாய்வு ,சூழலுக்கு ஏற்பத் தன்னை பொருத்திக் கொள்ளுதல் என முன்மூளைபுறணியின் வேலை விரிவடைகிறது.
10 வயது முதல் 19 வயது வரை இந்த மூளை வளர்ச்சி அடைந்து வரும் நிலை தொடர்வதால் அவர்கள் பல்வேறு நடத்தை சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள்.
இந்த வளர்ச்சிப் படிநிலையில் முன்மூளை புறணி (prefrontal cortex) அவர்களை அங்கீகாரம் மற்றும் பாராட்டுதலை நோக்கி இயக்குகின்றன.
எதற்கெடுத்தாலும் சூப்பர், சூப்பர், அருமை என யாராவது தன்னை அங்கீகரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என எண்ணுகிறது.
நல்ல விஷயம் என ஏற்கப்பட்ட செயல்பாடுகளுக்காக தொடர்ந்து சூப்பர், அருமை என பாராட்டுப்பெறும் ஒரு மாணவர் அந்த செயல்பாடுகளை தக்க வைக்கிறார் அதே சின்ன சின்ன வெற்றிகளுக்கு அங்கீகரிக்க ஆள் இல்லாத போதும் முன் மூளை புறணி அவரை பிறரது கவனத்தை தூண்டிட இயக்குகிறது. வகுப்பில் கத்துவது முதல் சுவரில் எழுதுவது என எல்லாமே ஒரு வகை கவனஈர்ப்புக்கு தான்.
ஆசிரியர் பெற்றோர்களால் சரியான அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்காத போது.. தவறான நடத்தைகளுக்கும் வீரதீர சாகச செயற்பாடுகளுக்கும் (மோட்டார் வண்டியை வேகமாக செலுத்துதல்) சக நண்பர்கள் வழங்கும் கவன ஈர்ப்பும் அங்கீகாரமும் அப் பருவத்தில் உள்ளோருக்கு இனிக்கிறது.
அதனாலயே அவர்கள் அதை நாடுவதற்கு முயற்சிக்கிறார்கள்.
சிலவேளைகளில் ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று எனக்கே தெரியவில்லை? என வருத்தப்படுவது, யதார்த்தத்தை எதிர்கொள்ள அஞ்சி ஊரை விட்டு ஓடுவது, தற்கொலை போன்ற விபரீத முடிவுக்கு வருவது என அச் செயற்பாடுகள் திசை மாற்றம் நிகழ்கிறது.
எனவே மாணவர் அல்லது பிள்ளைகள் தவறு செய்வது மருத்துவ முறைப்படி பார்த்தால் கூட இயற்கையானதுதான் மாணவர்களுக்கு அந்த வயதில் தேவை கட்டளைகள் அல்ல அச்சுறுத்தல்கள் அல்ல அடியும் உதையும் அல்ல ஏராளமான பாராட்டுக்களும் அவர்களின் நடத்தைக்கான அங்கீகாரங்களுமே.
இதுவே அவ் முன்மூளை புறணியின் எதிர்பார்ப்பு அவ் எதிர்பார்பை நிறைவேற்றவே மாணவர்கள் அல்லது பிள்ளைகள் அவர்களது மூளையால் செயற்படுத்தப்படுகிறார்கள்.
பாராட்டுக்களும் அங்கீகாரங்களுமே மனிதர்களை மனிதர்களாக்கும். சிறிய சிறிய நல்ல செயற்பாடுகளுக்கும் அங்கீகாரத்தையும் பாராட்டுதலையும் அள்ளிக் கொடுங்கள். அதற்காக ஏங்கித் தவிக்கும் மனங்களே தவறான செயற்பாடுகளையாவது மேற்கொண்டு அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற முயற்சிகின்றன.அவையே தவறான நடத்தைகளுக்கு வித்திடுகின்றன.
S.J.Aathy
Child psychology.
Mu/vidyananda college.