கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்னிருந்த காலத்திற்கும், அதற்கு பின்னர் சடுதியாக தோன்றிய விரும்பத்தகாத காலத்திற்கும் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது. நிச்சியமற்றதன்மையால் அமைந்த (uncertainty) தொங்குநிலை வாழ்வொன்று தற்போது அமைந்துள்ளது. அதனால் மக்களின் மனநிலையிலும், மனப்பாங்கிலும் பாரியதொரு மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காணலாம்.
இந்த கையறு நிலை வாழ்வால் மனஅழுத்தம் (stress), பதகளிப்பு (Anxiety), பீதி நோய் (panic) போன்ற உளவியல் நோய்கள் ஏற்பட்டு, அவை மனச்சோர்வு (Depression) மனவடு (Trauma) நெருக்கீட்டிற்கு பின்னரான மன வடு (Post Traumatic Stress Disorder) போன்ற மன நோய்களுக்கு இட்டுச் செல்ல வாய்ப்பு உண்டு. எமது பராமுகத்தால் சாதாரண நிலையிலிருப்பது அசாரண நிலையைப் பெற்று விடும் என்பதில் எவ்வித சந்தேகம் இல்லை.
தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையால் மன, உடல் ரீதியாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவது என்பது ஒரு சாதாரண விடயமாக உள்ளது. பெரியவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் போலவே பல்வேறு மன நெருக்கீடுகளுக்கு பிள்ளைகள் உட்படுவது ஓர் இயல்பான விடயமாக உள்ளது. குழம்பிப் போன நிலை, பயம், பீதி, துக்கம், பதட்டம், அச்சம் போன்றன சாதாரணமாகவே சிறார்களில் வெளிப்படும் விடயங்கள் ஆகும்.
சில பிள்ளைகள் பெற்றோர்களை சுதந்திரமாக இயங்கவிடாமல் ஒட்டிக் கொண்டும் பற்றிப் பிடித்துக் கொண்டும் இருப்பதை சிலவேளைகளில் நாம் அவதானிக்கலாம். இன்னும் சில பிள்ளைகள் தமது வயதிற்கு ஏற்ப முதிர்ச்சி நிலையைக் காட்டாமல் இருப்பார்கள். இன்னும் சிலர் தங்களுக்கு மிகுந்த அவதானம் தேவை என்பதை உணர்த்துவார்கள்.
பெற்றோர்கள் தங்களுக்கு உடலியல் சௌகரியங்களை (physical comfort) ஏற்படுத்தித் தர வேண்டும என்று சிலர் கூடுதலாக எதிர்பார்ப்பார்கள். இயல்பாக வாழாத எத்தனையோ குழந்தைகளையும் நாம் காண நேரிடுகின்றது. தற்போதைய அச்சுறுத்தல் மிகுந்த காலத்தில் மேற்போந்த நிலைகளை அவர்களிடம் சற்று கூடுதலாகவே காணலாம். இன்னும் ஒரு வயதினர் வித்தியாசமான நடத்தைக் கோலங்களைக் காட்டுவர். அத்துடன் வெறுப்பு, கோபம், சண்டை, வாக்குவாதம், சொல்வதற்கு முரணாக நடத்தல் போன்ற மனநிலைகளையும, நடத்தைக் கோலங்களையும் கூடுதலாக வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களை தற்கால சூழ்நிலையில் நாம் வீட்டில் அதிகம் காணலாம்.
கொரோனா வைரஸ் பற்றிய செய்திகளையும், விபரங்களையும் அறியும் ஆர்வத்தில் எட்டு முதல் பன்னிரெண்டு வயது வரையுள்ள பருவத்தினர் கூடுதலாக அக்கறை காட்டுவார்கள். அவர்களின் வாழ்வின் ஆதார நிலைகளையும், உத்தரவாத சூழ்நிலைகளையும் பற்றி பல்வேறு வகையில் அவர்கள் சிந்திப்பார்கள் என்பதால் அவ்வாறான நிலை தோன்றுகின்றது.
ஆறு வயதிற்குட்பட்டவர்களுக்கு உலகம் பற்றி சரி அல்லது பிழை (black and white) என்ற எண்ணம் தனித்தனியாக அமைந்ததாகவே இருக்கும். அதற்கிடையே இருக்கும் சாம்பல் (கருப்பும் வெள்ளையும் சேர்ந்தால் ஏற்படும் நிறம்) நிறப் பகுதி பற்றிய அறிவு அவர்களுக்கு இருக்காது. எனவே அவர்கள் ஆழமாக சிந்திக்கவோ, கேள்விகள் கேட்கவோ மாட்டார்கள். அதனால் அவர்களின் தேவைகளும் உணர்வு நிலைகளும் வித்தியாசமாகவே இருக்கும். அவர்கள் வினவும் இந்த பேரிடர் பற்றிய கேள்விகளுக்கு சுருக்கமாகவே அவர்களுக்கு விடையளிப்பது புத்திசாலித்தனமானது.
ஆழமாக பதில் கூற அவசியமில்லை. ஆனாலும் அதற்கு பதிலளிக்காமல் இருந்தால் அவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். ஆயினும் ஏழு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு Black and white பகுதிகள் மட்டுமல்ல அந்த சாம்பல் நிறப்பகுதியும் (சரி, பிழை என்பது ஒன்றோடொன்று கலந்த நிலை) அவர்களுக்கு விளங்கத் தொடங்கியிருக்கும். அதனால் அவர்களுக்கு கொரோனோ வைரஸ் அனர்த்த நிலை குறித்து கொஞ்சம் வித்தியாசமான பார்வை இருக்கலாம். எனவே, அவர்களுக்கு அது குறித்து என்ன தெரியும் என்பதையும் அது பற்றி பேசும் போது என்ன உணர்வு நிலைகளை அவர்கள் பெறுகிறார்கள் என்பது பற்றியும் முதலில் நாம் விளங்கிக் கொண்டே,அவர்களுக்குரிய போதுமான வழிகாட்டல்களையும், விபரங்களையும் வழங்க வேண்டியுள்ளது.
பொதுவாக எதிர்பாராத விதத்தில் தோன்றும் அனர்த்த நிலையால் தோன்றும் பிரச்சினைகளின் போது உளநெறுக்கீடு என்பது அதிகமாக இருக்கும். அப்போது குழந்தைகள் பல உளத் தாக்கங்களுக்கு உட்பட்டு வித்தியாசமான நடத்தைக் கோலங்களை வெளிப்படுத்துவர். இது சிலவேளை குறுகிய கால உளப்பிரச்சினைகளைத் தோற்றுவித்த போதிலும் அவற்றின் விளைவால் நீண்டகால உளப் பிரச்சினைகள் தோன்றலாம். சாதாரண நிலையிலிருந்து அசாதாரண சூழ்நிலையால் சில உளநோய்கள் கூர்மையடையும் சாத்தியங்கள் அதிகமாகவே உண்டு.
குழந்தைகளின் உளப் பாதிப்புகளை உறுதியாக அறுதியிட்டு கூற முடியாது. அவர்களது வயது, உடல் வளர்ச்சி, அறிவாற்றல் முதிர்ச்சி போன்றவற்றில் அவர்களது உளத் தாக்கங்கள் தங்கியுள்ளன. அவர்களது எண்ணங்கள் மற்றும் மனப்பாங்குகளுக்கு ஏற்பவும் நாளுக்குநாள் மாறும் நிலமைகளுக்கு அமையவும் நிகழ்வுகளை உள்வாங்கும் அவர்களது திறன்களுக்கேற்பவும் அவர்களது உளப் பாதிப்புகள் வித்தியாசப்படலாம்.
பிள்ளைகளுக்கு கிடைக்கும் சூழல் அவர்களுக்கு சாதமாகவே அமைய வேண்டும். அவர்களுக்குரிய அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதோடு அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு என்பனவும் அதி முக்கியமான விடயங்களாகும். அவை கிடைக்காமல் செல்லும் போது அவர்கள் மன நெருக்கீட்டிற்குட்படுவது தவிர்க்க முடியாது.
பெற்றோர்கள் பதற்றப்பட்டு, மன உளைச்சலுக்குள்ளாகி, பிள்ளைகள் முன்னிலையில் விளைவுகளை யோசிக்காமல் முரணாக நடந்து கொள்ள வாயப்புண்டு. அதனாலயே கொரோனா பற்றிய உரையாடல்களின் போது மனவெழுச்சிகளிலும் உடல் மொழிகளிலும் வித்தியாசமான நிலைகளை காண முடிகின்றன. எனவே, இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் கதைக்கும், பரிமாறும் விடயங்களுக்கு செவிதாழ்த்தும் போது பிள்ளைகளின் ஆழ் மனங்களில் மோசமான பல எதிர்மறை தாக்கங்கள் ஏற்படும் சாத்தியம் உண்டு. அவர்கள் அவற்றை வீணாக மேலும் அசைபோடுவதன் மூலம் காலப் போக்கில் பல்வேறு மனப்பாதிப்புகளுக்கு அவர்கள் உள்ளாகலாம். பொதுவாக அசாதாரண சூழ்நிலையில் ஏற்படும் மனத்தாக்கம் சாதாரணமாக இருந்தாலும் அவற்றுக்கு நாம் வழங்கும் பதிலுக்கு (Response) ஏற்ப மனதில் பல ஆழமான வடுக்களை அது வேரூன்றச் செய்ய முடியும்.
கீழ் குறிப்பிடும் நான்கு விடயங்களில் குழந்தைகளின் மனத்தாக்கங்களை பெற்றோர்கள் அவதானிக்கலாம்.
(1) உணர்ச்சி வெளிப்பாடுகள் (கவலை,பயம்,கோபம், சினம்,அழுகை)
(2) மெய்ப்பாட்டு அறிகுறிகள் (நித்திரையின்மை, பயங்கர கனவுகள், படபடப்பு,)
(3) நடத்தைக் கோளாறுகள் (சண்டை, கீழ்ப்படியாமை, தொல்லை, எதிர்மாறாகச் செயற்படுதல்)
(4)சிந்தனைக் கோளாறுகள் (கவனக்குறைவு, ஞாபகமறதி, கிரகிக்கும் தன்மை குறைவு)
பெற்றோர்கள் மேற்போந்த விடயங்கள் குறித்து முறையான அறிவுகளைப் பெற்றிருப்பது இன்றியமையாதது. அவர்கள் அது குறித்து பராமுகமாக இருந்தால் குழந்தைகள் பல்வேறு மன உளைச்சல்களுக்கு ஆளாகி, எதிர்காலத்தை சூனியமாக்கி விடும் அபாக்கிய நிலை ஏற்படலாம்.
சிக்மன்ட் ப்ரய்ட் இடத்தில் பல்வேறுபட்ட நரம்பியல் தொடர்பான நோய்களை கூறிக் கொண்டு சிலர் வந்த போதிலும் அவர் அவற்றை உணரவில்லை. அவற்றிற்கு அவர்களது குழந்தைக் காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளே காரணமாக இருக்கலாம் என அவர் ஊகித்தார். அவர்களின் ஆழ்மனங்களில் தங்களது பெற்றோர்கள் பற்றிய பிழையான மனப்படம் ஒன்று குழந்தை காலம் முதல் இருந்து வந்துள்ளதை அவர் அவதானித்தார். எனவே, பெற்றோர்கள் மிகவும் அவதானமாக இருப்பது சிறந்தது. தற்போது ஏற்பட்டிருக்கும் அறுந்து போன நிலையில் பெற்றோர்களின் புரிதலும் நடத்தை கோலங்களும் சீராக இருப்பது அவசியம்.
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடனான நெருங்கிய பிணைப்பின் காரணமாகவே பிள்ளைகளின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றும் உள,சமூகத் தூண்டுதல் (Psycho Social Stimulation) என்பது நிகழுகின்றது. பெற்றோர்கள் மனப்பாதிப்புகளுக்கும், உளப்பிரச்சினைகளுக்கும் உட்பட்டிருந்தால் அத்தகைய தூண்டுதலை குழந்தைகளுக்கு வழங்க முடியாது.எனவே, குழந்தைகளின் பராமரிப்பாளர்கள் அது தொடர்பான அறிவையுடையவர்களாக இருத்தல் வேண்டும்.
இத்தகைய தனிமைப்படுத்தல் (Quarantine) காலத்தின் வீட்டிற்குள்ளே முடங்கிப் போயுள்ள குழந்தைகளை முறையாக பெற்றோர்கள் கையாள வேண்டிய தேவையுள்ளது. சடுதியாக ஏற்பட்ட இந்த அசாதாரண சூழ்நிலையால் பல்வேறுபட்ட உளப்பாதிப்புகளுக்கு அவர்கள் உட்படுவதை விட்டும் தடுக்க சில நடவடிக்ககைளை மேற்கொள்வது பெற்றோர்களின் கடமையாகவுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நேரடியாக உட்பட்டு மரணம் சம்பவித்த வீடுகளிலும் Quarantine இலுள்ள வீடுகளிலும் அச்சுறுத்தல் அதிகமாக காணப்படுவதால் locked down இலுள்ள பல ஊர்களிலும் வாழும் குழந்தைகள் தங்களது வாழும் சூழ்நிலைகளுக்கேற்பவும் நிகழ்வுகளின் தாக்கத்தின் தன்மைகளுக்கேற்பவும் வித்தியாசமான உள நெருக்கீடுகளுக்கும் பலவிதமான நோய்க் குணக்குறிகளுக்கும் உட்படலாம். எனவே, பெற்றோர்கள் பிரச்சினைகளின் சூழலையும் அதன் தாக்கத்தையும் கவனத்திற் கொண்டே குழந்தைகளது மீலொழுங்கு நடவடிக்கைகளிலும் உடல், உள பாதிப்புகள் ஏற்படா வண்ணம் பாதுகாப்பு அரண் அமைக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டும்.
ஆட்டம் காணும் ஓர் அசாதாரண சூழ்நிலை வாழ்வில் ஏற்படும் போது அதை எவ்வாறு எதிர்கொள்ளவது என்பதை பிள்ளைகளுக்கு கற்றுத் தரக்கூடிய நல்லதொரு சந்தர்ப்பமாகவே பெற்றோர்கள் இதனைப் பார்க்க வேண்டும்.
அரசாங்கமும், சுகாதார சேவையும், பொலிஸ் இராணுவ பிரிவுகளும் எவ்வாறு இந்த கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையாக உழைக்கின்றனர் என்பதை குழந்தைகளுக்கு புரியும் வகையில் தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள் அதன்மூலம் ஒரு பாதுகாப்பை உணர வேண்டும்.
ஊரடங்குச் சட்டம் என்பது எல்லோரதும் பாதுகாப்பிற்கே ஒழிய எம்மை முடக்கி வைப்பதற்கல்ல. அது ஒரு பாதுகாப்புக் கவசம். அதனால் நாம் பாதுகாப்புச் சூழலில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். அதனால் குழந்தைகள் ஓர் உறுதிப்பாட்டை (Assurance) உணர்வரகள்.
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். நாளை என்ன நடக்கும் என்பதை அவன் மட்டுமே அறிவான். வாழ்க்கையின் அனைத்து விவகாரங்களிலும் அவன் மீதே நாம் நம்பிக்கை (தவக்குல்) வைக்க வேண்டும். இந்த தவக்குல் உணர்வை குழந்தைகளுக்கு ஊட்டும் அரிய சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. வாழ்வில் ஆபத்தில்லாத நிலை (Risk free) என்பது எதிலுமில்லை. எதிர்பாராத எந்த நிகழ்வும் திடீரென நடக்கலாம். ஆனால் அதற்காக பயந்து ஓடி ஒழிய முடியாது. அது அல்லாஹ்வின் தீர்மானத்தில் உள்ளது. அவற்றிற்கு முகம் கொடுப்பது அல்லது அவற்றை தைரியமாக எதிர்காள்வதே எமது பணி. ஒரு கார் ஓட்டுவதென்றாலும் அப்படியே. எமது தூரத்தை அடைவோம் என்று உறுதியாக எமக்கு கூற முடியாது.
வளைவு, நெழிவு, மேடு, பள்ளமாகவே வாழ்வு என்பது இருக்கும். அதனூடே நாம் பயணிக்க வேண்டும். அதற்கு ஓர் இயங்கியல் அவசியம். பல ஸ்தம்பித நிலைகள் ஏற்பட்டாலும் நாம் ஸ்தம்பிதம் அடைய முடியாது. அவ்வாறு அமைந்தால் உலகத்தில் ஓர் அடைவை நோக்கி நாம் நகர முடியாது. அமையும் எச்சூழலிலும் அர்த்தமுள்ள வாழ்வையே (meaningful life) நாம் வாழப் பழக வேண்டும். வெறுமெனே காலங் கடத்தும் வாழ்வால் உலகில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. இது போன்ற சிந்தனைகளை வயதைக் கருத்திற் கொண்டு, குழந்தைகளுக்குப் புரியும் பாஷையில் பெற்றோர்கள் உணர்த்த வேண்டும்.
சில விடயங்கள் எமது கட்டுப்பாட்டுக்குள் (Control) உண்டு. அதில் பல சுதந்திரங்களும் தெரிவுகளும் எமக்கு உள்ளன. அவ்வாறான நிலையிலும் நன்மை பயக்கும் விடயங்களை மட்டும் தேர்ந்து நாம் திறம்பட செய்ய வேண்டும். எமது கட்டுப்பாட்டிற்குள் எவை இல்லையோ அவற்றை நிலமைக்கேற்ப சமாளிக்க ஒரு பயிற்சி பெறல் வேண்டும். எனவே, தங்களது சக்தியையும் அறிவையும் ஆற்றலையும் மீறிய இந்த அனர்த்த சூழலை ஒரு பயிற்சிப்பட்டறையாகக் கருதி பெற்றோர்களும் வாழத் துணிவதோடு, தங்களது குழந்தைகளையும் அதற்கேற்றவாறு பயிற்சியளிக்கவும் கரிசனை காட்ட வேண்டும்.
பெற்றோர்கள் தாங்கள் வெளிப்படுத்தும் மனவெழுச்சிகளை முகாமை செய்வதில் தவறிழைக்கக் கூடாது. பெற்றோர்கள் தங்களது மனஅழுத்தத்தை, பதகளிப்பை தங்களின் பிள்ளைகளுக்கு முன்னால் வெளிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு நிகழும் போது குழந்தைகள் அனுதாபப்படுவார்கள்; கவலை அடைவார்கள். எனவே, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன்நிலையில் சாந்தமாகவும் அமைதியாகவும் (Calm & Cool) இருப்பது அவர்களை மகிழ்விக்கும்.
பிள்ளைகள் அழுது, கோபப்பட்டு தங்களது உணர்வுகளையும் மனவெழுச்சிகளையும் வெளிப்படுத்தும் போது அவற்றிற்கு இடமளிக்கப்படல் வேண்டும். அவற்றைத் தடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக பெற்றோர்கள் அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருப்பது இன்றியமையாதது. பிள்ளைகள் முரண் நிலைகளைக் காட்டும் போது அவர்களது பார்வை வேறு திசையின்பால் (Re direct) ஒருமுகப்படுத்தப்படும் போது அவர்கள் இயல்பான நிலைக்கு (normal ) வருவார்கள்.
பல்வேறு வகையான உடலியல் செயற்பாடுகள் (Physical Activity) மற்றும் உடற்பயிற்சிகளில் (Exercises) பிள்ளைகள் ஈடுபட தேவையான சூழலையும் வசதிகளையும் அவர்களுக்கு செய்து கொடுக்கப்படல் வேண்டும். Sense of playfulness குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டுக்கள் (உதாரணமாக ஒழிந்து விளையாடும் விளையாட்டுக்கள், கேரம், லூடோ, ஸ்னேக்ஸ் லெடர், Chess) வெளியே விளையாடும் விளையாட்டுக்கள் என பல விளையாட்டுக்கள் உள்ளன. கிராம விளையாட்டுக்களின் வித்தியாசமான தன்மைகள் பிள்ளகளை மிகவும் கவரக் கூடியதாக உள்ளதால் அவற்றையும் அறிமுகப்படுத்தி உற்சாகப்படுத்தினால் அவர்கள் ஆர்வப்படுவார்கள். பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னரே வீட்டுச் சூழலில் விளையாடும் வெளிக்கள விளையாட்டிற்கு அனுமதியளிக்கப்படல் வேண்டும். பிள்ளைகள் பிரச்சினைகளை மறந்து, ஒன்றில் மூழ்கியவர்களாக அவர்களது அவதானத்தை முழுமையாக செலுத்தி மகிழ விளையாட்டுக்களே துணை புரிகின்றன.
பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக பிள்ளைகள் தங்களது நண்பர்கள், சகபாடிகள், ஆசிரிய ஆசிரியைகளின் நேரடித் தொடர்பை இழந்திருப்பார்கள். எனவே, அவர்கள் வெறுமையையும், சோம்பலையும் அதிகம் உணர்வார்கள். அதனால் அவர்களைத் தொடர்பு கொள்ளவும், அவர்களோடு கதைக்கவும், சிரித்து மகிழவும் வாய்ப்புகள் வழங்கப்படல் வேண்டும். அதற்கு சமூக வலைத்தளங்களையும் ஒன்லைன் வசதிகளையும் பயன்படுத்தி, முகம் பார்த்துப் பேச குறிப்பிட்ட நேரம் அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, சமூக உறவாடல்களை மேம்படுத்தவும் நட்பை வலுவூட்டவும் உதவ வேண்டும்.
ஆக்கத் திறன் செயற்பாடுகள், ஓவியம் வரைதல் (Creative form and Art form) மற்றும் கலைத்துவ நடவடிக்கைகளுக்கான சூழலை பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் அவர்களின் மனவெழுச்சிகளை வெளிப்படுத்த ஒரு களம் அமைந்து விடுகிறது.
சாந்தமாகவும் (Relax) அமைதியாவும் (Calm) இருக்க மூச்சுப் பயிற்சிகளையும் சாந்தப்படுத்தும் வழிமுறைகளையும் பிள்ளைகளுக்கு பயன்படுத்தலாம். மூச்சை உள்ளிழுத்து (Inhale) சில கணங்கள் தக்க வைத்து (Holding the breath) மீண்டும் மூச்சை வெளித் தள்ளுவதன் (Exhale) மூலம் அந்த பயிற்சியை செய்யலாம். குறிப்பிட்டவாறு 07 தடவைகள் செய்யலாம். பதற்றம் அடையும் போது இயல்பான நிலைக்கு எம்மை கொண்டு வர இந்த பயிற்சி பெரிதும் உதவுகின்றது.
பருவ காலங்களைப் போல் பல நிலைகளில் மாறி மாறி வரும் யதார்த்தத்தையே உலக வாழ்வு கொண்டுள்ளது. அதில் பல கஷ்டங்களையும் அசௌகரியங்களையும் எதிர்நோக்குவது இயல்பானது. அவ்வாறானதொரு நிலை அமைந்தால் எவ்வாறு சமாளித்து வாழ்வது? எப்படி கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வது ? என்ற படிப்பினைகள் பிள்ளைகளுக்கு மிகவும் அவசியம். அவர்கள் சௌகரியங்களை மட்டுமே அனுபவித்து வாழ்ந்து பழகினால் கஷ்டங்களை எதிர்நோக்க முடியாமல் தடுமாறிப் போய்விடுவர்கள். எனவே, தேவைகளைக் குறைத்து, சமாளித்து வாழ வேண்டிய பல சந்தர்ப்பங்கள் வாழ்வில் அமைவதால் இது போன்ற அசாதாரண சூழ்நிலையில் அந்த வாழ்வின் அனுபவங்களை உணரச் செய்ய வேண்டும்.
ஆன்மீக ரீதியான செயற்பாடுகளே மனிதனை தளம்பலின்றி வாழச் செய்யும். எத்தகைய சூழலிலும் அல்லாஹ்வைச் சார்ந்திருப்பதிலேயே நம்பிக்கையும், உறுதியும் வரும். ஏற்பட்டிருக்கின்ற கஷ்ட நிலமைகளை மாற்றம் பெறச் செய்பவனும் அவனே. காலையில் எழுந்து, இரவு தூங்கும் வரையுள்ள காலப் பகுதியில் கூட நாம் நினைத்த வாழ்வு கிடைக்காமல் போய்விடும் சந்தர்ப்பங்கள் ஏராளம். அதனால் நிலமைக்கேற்றவாறு எம்மை நாம் ஒழுங்குபடுத்திக் கொள்ளல் வேண்டும். அனர்த்த சூழ்நிலை மாறுவதற்காக இறைவனிடம் பல்வேறு வணக்க வழிபாடல்கள் மூலம் தஞ்சமடைய வேண்டும். தொழுகை, குர்ஆன் திலாவத், திக்ர், காலை மாலை மஃசூறாத் ஓதல், முடியுமெனில் நோன்பு பிடிப்பது போன்ற விடயங்களில் ஈடுபடுவது முக்கியமானது. அவற்றை பிள்ளைகள் ஒழுகி நடக்கவும் மார்க்க விழுமியங்களைப் பேணவும் பெற்றோர்கள் முன்மாதிரியாக வாழுதல் அவசியம்.
குழந்தைகளின் நாளாந்த செயற்பாட்டு ஒழுங்குமுறையில் (Routine) சடுதியாக ஏற்பட்ட மாற்றத்தினால் அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளது. அதனை அவ்வாறே விட்டு விட்டால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் வருவது தவிர்க்க முடியாது போய்விடும். எனவே, தற்காலிக நாளாந்த ஒழுங்குமுறையொன்று (Temporary Routine) அவர்களுக்கு அவசியம். அவர்களோடு அது பற்றி கலந்துரையாடி, அவர்களது விருப்பங்களும் உள்வாங்கப்பட்டு அதனை அமைத்துக் கொடுக்க முடியும் அல்லது அவர்களுக்கே அதனை அமைக்கக் கூறி, தேவையான வழிகாட்டல்களைப் பெற்றோர்கள் வழங்க முடியும.
போஷாக்கான ஆகாரங்களையும், இலகுவில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளையும் உண்பது அவசியம். அதற்கான சந்தர்ப்பங்களை இந்த சூழ்நிலையில் பயன்படுத்திக் கொள்ளலாம். இலைக்கஞ்சி, பயறு, கௌபி போன்றவற்றை பிள்ளைகள் சாப்பிடுவது குறைவு. பிள்ளைகள் நொறுக்குத் தீனிகளுக்கும், செயற்கையான, இரசாயன மூலப் பொருட்கள் கலப்படம் செய்யப்பட உணவு வகைகளுக்கும், துரித உணவுகளுக்கும் (Fast Food) பெரும்பாலான பிள்ளைகள் பழக்கப்பட்டுள்ளார்கள். பல பெற்றோர்களும் தங்களது இலகுத்தன்மையையும் செளகரியங்களையும் கருத்திற் கொண்டு அதில் பராமுகமாக உள்ளனர். இச் சந்தர்ப்பத்திலாவது அந்த தவறைத் உணர்ந்து கொள்வதோடு, அதன் பாதிப்புக்களை பிள்ளைகளுக்கும் உணர்த்துவதோடு, தாமும் முன்மாதிரியாக இருப்பது அவசியம். அத்துடன் விட்டமின் சீ பழங்களையும் மறக்கறிகளையும் அவர்களுக்கு வழங்க வேண்டும். பிள்ளைகள் தண்ணீர் குடிப்பது குறைவு. ஆகவே, தண்ணீரையும் அதிகம் அருந்த அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.
கவிதை, கதை எழுதுதல், குழந்தைகளுக்குரிய படம் பார்த்தல், குழந்தைகளுக்கு பொருத்தமான மெல்லிய பாடல்களை இன்புறுதல் மற்றும் கதை கேட்டல் அல்லது சொல்லுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் குழந்தைகளின் ரசனைத் தன்மையை மெருகூட்டலாம். இத்தகைய ஓர் அசாதாரண நிலையில் அந்த ரசனைத் தன்மையைக் அனுபவிப்பதற்குரிய சூழல் பிள்ளைகளுக்கு மிகவும் அவசியம். ஆனால் பல விடயங்களில் அநாவசியாமாக முறையற்ற விதத்தில் காலத்தை வீணடிக்கவோ, விடயங்களில் எல்லை மீறி செயற்படவோ அவர்களை அனுமதிக்கக் கூடாது.
வீட்டுச் சூழலிலுள்ள இயற்கை வளங்களை ரசிக்கவும், குருவி, அணில், பறவைச் சத்தங்களைக் கேட்கவும் பிள்ளைகளுக்கு ஆர்வமூட்டலாம். பூமரச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றவும், வீட்டுத் தோட்டம் இருந்தால் அதைப் பராமரிக்கவும் அல்லது குறைந்தது வீட்டிற்குக் கொண்டு வரும் காய்கறிகளின் விதைகளைப் பயிரிடவும், அவற்றின் தளிரிலைகள் துளிர்த்து வளர்வதை அவதானிக்கவும் பிள்ளைகளைத் தூண்டலாம்.
முடியுமெனில் தண்ணீர் விளையாட்டுக்களில் குழந்தைகள் ஈடுபட (Water Activities) அனுமதி வழங்குதல் அவசியமாகும். Water balloon போன்ற விளையாட்டுக்களை குழந்தைகள் அதிகம் விரும்புவார்கள். பிள்ளைகள் தண்ணீர் விளையாட்டுக்களால் குதூகலம் அடைவதோடு, மனங்களில் ஈரத்தையும் இதத்தையும் பெறுவார்கள்.
அக்கறை காட்டுதல் மற்றும் பகிர்தலை (Caring and Sharing) பிள்ளைகளுக்கு மத்தியில் அதிகம் தூண்ட வேண்டும். மற்றவர்களுடனான நல்ல உறவையும் பிணைப்பையும் ஏற்படுத்தவும், ஏனையவர்களைப் புரிந்து, அணுசரித்து செயற்படவும் பிள்ளைகள் அதன் மூலம் பலதை கற்றுக் கொள்வார்கள்.
செய்ய வேண்டிய செயற்பாடுகளின் பட்டியல் (To do list) ஒன்றை பிள்ளைகள் தயாரிக்க வேண்டும். ஒவ்வொரு நாளுக்குமுரிய வேலைகள் எவை என்பதை தீர்மானித்து, அதன்படி செயலாற்றுவதன் மூலம் குறிப்பிட்ட நாளை திட்டமிட்டுப் பயன்படுத்தி அடைவுகளைப் பெற குழந்தைகள் சந்தர்ப்பத்தைப் பெறுவார்கள். அவ்வாறு தயாரித்த நிகழ்ச்சி நிரல் கையிலுள்ள போது எப்படியவாது அதனை செய்ய மனசில் ஓரு தூண்டல் ஏற்படும்.
குறிப்பிட்ட நாளைத் தொடங்குவதற்கு முன் நேர்மறையான உறுதி மொழி (Positive Affirmation) ஒன்றை பிள்ளைகளுக்கு கூற வைக்கலாம். “இன்றைய நாள் ஒரு பரிசு” .”இன்றைய நாள் மிக நல்ல நாள்” என்று பிள்ளைகளுக்கு ஓரளவு சத்தத்தில் கூற பயிற்றுவிக்க முடியும். அதன் மூலம் அபார சக்தியையும் ஓர் உற்சாகத்தையும் அவர்கள் நிச்சயம் பெறுவார்கள்.
தமக்கு கிடைத்ததைக் கொண்டு திருப்திப்படவும், அவற்றைத் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்தவும் பிள்ளைகளை ஆர்வமூட்ட வேண்டும். அத்தோடு பெற்றோர்களுக்கும், மற்றவர்களுக்கும் நன்றிகளைப் பகிர்ந்து கொள்ளவும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதன் மூலம் நன்றி பாராட்டும் பண்பு (Gratitude) வளர்கின்றது. ஏனெனில், உணவுகளை வழங்கவும், எங்களை நேசிக்கவும் ஒரு குடும்பம் எமக்கு உள்ளது. ஒரு கூரையின் கீழ் நிம்மதியாக நாம் வாழ்கிறோம். ஆனால் எத்தனையோ குடும்ப அங்கத்தவர்கள் இந்தப் பிரச்சினையின் காரணமாக சிதறி, கையறுந்த நிலையில் அங்குமிங்கும் வாழ்கின்றனர். நாம் அவ்வாறல்ல. வீட்டில் பாதுகாப்பாக உள்ளோம். அவற்றை அமைத்துத் தந்த எல்லாம் வல்ல இறைவனை புகழவும் அவனுக்கு நன்றி செலுத்தி வாழவும் பிள்ளைகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
அரட்டையடித்தல், பரிகாசம் செய்தல், விநோதம் அடைதல் (Humor, Funny) போன்ற விடயங்களில் ஈடுபடுவதன் மூலம் குழந்தைகள் அதிகம் மகிழ்ச்சியடைவார்கள். பிள்ளைகள் அவற்றை உரிய முறையில் பெற பெற்றோர்கள் அவர்களோடு கூடி மகிழ்ந்து அவகாசங்களை வழங்க வேண்டும்.
ஏதோவொன்றை வாசித்து பெறும் அறிவின் மூலமாகவோ புதிய அனுபவத்தின வாயிலாகவோ மற்றவர்களுடனான சம்பாஷனணயின் விளைவாகவோ தொழில்நூட்ப சாதனங்களின் ஊடாகவோ புதிய விடயங்களைக் கற்க பிள்ளைகளை ஆர்வமூட்டப்படல் வேண்டும். பொதுவாக புத்தக வாசிப்பு இன்று அருகிவிட்டது. அதன்பால் ஈடுபட கவர்ச்சிகரமான ஓர் உற்சாகமூட்டல் அவசியப்படுகிறது.
சாதாரணமான குழந்தைகளுடனான அன்புப் பரிமாற்றத்திற்கும் பிணைப்பிற்கும் ஒரு பிள்ளையை கட்டியணைத்தல் (Hugs) ஒரு நாளைக்கு எட்டு முறையாவது இடம்பெறல் வேண்டும். மனவழுத்தத்திற்பட்ட குழந்தைகளை பன்னிரெண்டு தடவைகளாவது ‘கட்டியணைத்தல்’ அவசியம். பிள்ளைகள் அவ்வாறான மனவழுத்தத்திற்குட்பட்டிருந்தால் அவர்களுக்குரிய அந்த அரவணைப்பும் தழுவலும் மிகவும் முக்கியமானது.
ஏற்கனவே சில நடத்தை ஒழுங்கீனங்களுக்கும் உளவியல் பாதிப்புகளுக்கும் உட்பட்டிருக்கும் துரு துரு குழந்தைகளோ (ADHD – Attention Deficit Hyperactivity Disorder) ,விஷேட தேவையுடைய குழந்தைகளோ (Children with Special Needs) இந்த அசாதாரண சூழ்நிலையால் மேலும் பாதிப்பிற்குள்ளாகலாம். ஏற்கனவே பல்வேறு மனப்பாதிப்பிற்குட்பட்டிருந்த குழந்தைகளும் இந்த அனர்த்த சூழ்நிலையால் மேலும் பாதிப்படையலாம். எனவே, ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் குழந்தைகளது மனப் பாதிப்புகளை கருத்திற் கொண்டு, மிகவும் கவனமாக அவர்களை கையாளுவது இன்றியமையாதது.
அதே போன்று கையைக் கழுவாவிட்டால் கொரானோ வைரஸ் தொற்றலாம் என அஞ்சி, அடிக்கடி கைகழுவலில் பிள்ளைகள் ஈடுபட முடியும். கை கழுவும் செயலை தேவைக்கு மேலதிகமாக அடிக்கடி செய்யத் தூண்டப்படும் போது அல்லது அதில் எல்லை மீறிச் செயற்படும் போது எண்ண மீள்சுழற்சி (OCD – Obsessive- Compulsive Disorder) நோய்க்கு அவர்கள் உட்படலாம். இது பற்றி பெற்றோர்கள் அவதானமாக இருத்தல் வேண்டும்.
சிறுவர் துஷ்பிரயோகங்களில் உள்ளடங்குகின்ற உடல்ரீதியாகக் காயப்படுத்தல், கைவிடுதல், அடக்குமுறைகளுக்கு உட்படுத்தல், அரவணைக்காதிருத்தல் போன்ற நடவடிக்ககைளாலும், பெற்றோர் பிள்ளையின் முன்னிலையில் வாக்குவாதப்படுதல், சண்டை பிடித்தல் போன்ற முரண்பட்ட செயற்பாடுகளாலும் பிள்ளைகளின் மனங்கள் பாதிக்கப்படலாம். ஏனெனில் மேலெழுகின்ற அசௌகரிய எண்ணங்கள் மூலமாகவும் எதிர்மறையாக சிந்தனைகளைத் தோற்றுவிக்கும் விடயங்களாலும் பல்வேறு உளக் குழப்பங்களுக்கு பிள்ளைகள் ஆளாக நேரிடுவது இயல்பானது.
பிள்ளைகளுடன் நல்ல முறையில் கதைப்பது (Social interaction) அளவளாவது மற்றும் அவர்களுக்கு செவிதாழ்த்துவது (Listening )அவர்களின் மனவழுத்தத்தைக் குறைக்கும். இந்த விடயங்களில் பெரும்பாலும் பெற்றொர்கள் மிகவும் பொடுபோக்காகவே உள்ளனர். இந்த செயற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றால் பிள்ளைகள் நல்ல மனநிலைகளை அடைவார்கள்.
வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு, வயதில் மூத்தவர்களுக்கு பணிவிடை செய்யும் செயற்பாடுகளில் ஈடுபடச் செய்வது சிறந்த செயலாகவுள்ளது. முடியுமான வகையில் அவர்களைக் கவனிப்பது, அவர்களுக்கு பணிவிடை செய்வது ஓர் ஆத்ம திருப்தியை குழந்தைகளில் ஏற்படுத்தும். குழந்தைகளது அவ்வாறான நற் செயலுக்காக அவர்கள் பாராட்டப்படல் வேண்டும்.
குழந்தைகள் தங்களது நேர முகாமைத்துவத்தை (Time management) ஒழுங்குபடுத்திக் கொள்ள இத்தகைய தருணத்தில் பயிற்சி பெற முடியும். நேரம் என்பது மூலதனம். அதனை முறையாகக் கையாளுவதன் மூலம் மேம்பாட்டு நிலைகளையும் அடைவுகளையும் பெற முடியும். அதனை செயலுருப்படுத்த ஒரு பெறுமதியான சந்தர்ப்பமாகவே இது அமைந்துள்ளது என்பதை பிள்ளைகள் உணர்ந்து, செயலாற்ற வேண்டும்.
உடன் பிறந்தவர்கள் (siblings) இருந்தால் அவர்களுடனான குழுச் செயற்பாடுகளில் குழந்தைகளை ஈடுபடச் செய்ய வேண்டும். குழுச் செயற்பாடுகள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் உண்டாக்கும்.
மேற்போந்த விடயங்களை பெற்றோர்களின் வசதிகளுக்கும், சாதகமான சூழலுக்கும் ஏற்ப நடைமுறைப்படுத்த முடியும். அத்துடன் குழந்தைகளின் வயதையும் இயல்புகளையும் கருத்திற் கொள்வதும் முக்கியம். மாறாக அவர்களது விருப்பத்திற்கு முரணாக அவர்களை வற்புறுத்தி, அவர்களின் சுதந்திரங்களைப் பறித்து மேற் கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்த பணிக்கக் கூடாது. அவர்கள் குறிப்பிட்ட விடயங்களில் அக்கறை காட்டாத போது குழந்தைகளில் விருப்பம் தூண்டப்படும் வகையில் சில கவர்ச்சிகரமான செயற்பாடுகளை திட்டமிட்டு செய்வது முதற் பணியாக அமையும் என்பதை பெற்றோர்கள் கருத்திற் கொள்ள வேண்டும். மேற்கூறிய விடயங்களை, கையாளும் உளவியல் வழிமுறைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்த இயலுமெனில் பிள்ளைகளின் உடல், உள ஆரோக்கியம் செழிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.