நஞ்சற்ற விவசாயம் பெருக வீட்டுத்தோட்டம் செய்க!
மொழி அழிந்தால் அதைச்சார்ந்த இனம் மட்டுமே அழியும். ஆனால் விவசாயம் என்ற ஒன்று அழிந்தால் இந்த உலகமே அழியும் என்ற முதுமொழியை நினைவில் வைத்துக் கொண்டு.இன்றைய சூழ்நிலையில் முழு நாடும் அமைதியாக இருக்கின்றது, சாலைகள் சாந்தமாக்கப்பட்டுள்ளது, மனிதக் காதுகள் வாகன இரைச்சலிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது, ஆலயங்கள், மசூதிகள், விகாரைகள், தேவாலயங்கள் கதவடைக்கப்பட்டுள்ளது, இயற்கையன்னை நிம்மதியாக உறக்கம் கொள்கிறாள்,வனவிலங்குகள் சாலையில் உற்சவ ஊர்வலம் நடத்துகின்றன. உறவுகள் பற்றி மனிதன் சிந்திக்கின்றான், உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்றான்,நேரமில்லை என்றவனுக்கு அதிக நேரம் என புலம்பித் திரிகின்றான். இவையெல்லாம் யாரும் எதிர்பாராத ஒன்றுதான். சிலருக்கு வரம், இன்னும் சிலருக்கு சாபம்.
ஆம் உண்மையில் இவை அனைத்தம் கொவிட்-19 என்கிற கொரோனாவின் அன்பளிப்பு என்றால் எத்தனை பேர் ஏற்றுக்கொள்வீர். ஆமாம் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் உலகையே ஆட்டிபடைக்க ஒரு அசுரன் வருவான் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை இன்று இவன் தன் சுயரூபத்தைக் காட்டி பல இலட்ச உயிர்களை தனக்கு இறையாக்கி விட்டான்.
இன்று அனைவரையும் வீட்டுக்குள் முடக்கிய கொரோனா அவன் மட்டும் வெளியே நடமாடுகிறான். இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் எமது வீட்டுத்தோட்டத்தில் எமக்கு நாமே ஒரு தோட்டத்தை அமைப்போம் நஞ்சற்றை உணவை உட்கொள்ள முய்ற்சி செய்வோம்.
இக்காலம் அனைத்து மட்டத்தினரினதும் மனதில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் விவசாயம். விவசாயம் என்கின்ற பொழுது பாரியளவு விவசாயமல்ல அன்றாடம் எமக்கு தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்துக்கொள்வது தான்.
விவசாயம் என்பது தொழில் அல்ல அது எம் மனதோடு ஒன்றித்தது. ஒரு தாய் தன் பிள்ளைக்கு பாலூட்டுவதைப் போன்றதாகும்.வீட்டுத் தோட்டம் குறிப்பாக வீட்டு வளவில் உள்ள குறிப்பிட்ட இடத்தினை பதப்படுத்தி வீட்டுத் தேவைக்கும் அயலவருடன் பகிர்ந்துக் கொள்ளவும் விளைச்சல் செய்வதையே குறிக்கும். இது ஒரு வகையில் மன ஆறுதல், இன்பம், நுகர்ச்சி எனப்பவற்றை மனதிலே ஏற்படுத்தும்.
நாம் பயிரிட்ட ஒரு பயிர் அதன் விளைச்சளை தருகின்ற பொழுது எம் மனதில் ஒரு புதுவித ஆனந்தத்தை ஏற்படுத்தும். இவ்வாறான ஒரு தோட்டத்தை எம்மால் அமைத்துக்கொள்ள இது தான் சரியான நேரம். வீணே நேரத்தை செலவிடாது எம்மால் முடிந்த சிறியதொரு வீட்டுத்தோட்டத்தை செய்வோம்.
தோட்டம் அமைப்பது என்பது ஒரு வித கலையாகும்.அதை எல்லோருக்கும் எளிதில் வந்துவிடாது. ஆனால் எல்லோராலும் முடிந்த ஒரு விடயம். ஆகவே முயற்சி செய்தால் நாமும் வெற்றி பெறலாம். தோட்டம் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் எங்களுக்கு இடமில்லையே என்று கவலை கொள்ள வேண்டாம் தொட்டிகளிலும் வைத்துக்கூட தோட்டம் செய்யலாம்.
இவ் வீட்டுத்தோட்டத்திலே, சுவையான சத்துள்ள, இரசாயனத்தன்மையற்ற, காய்கறிகளை உற்பத்தி செய்வது மட்டுமல்ல பழயை பொருட்களை மீள்சுழற்சி செய்யக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
இவ்வாறு வீட்டுத் தோட்டம் செய்வதன் மூலம் நாம் பல பயன்களை பெறமுடியம்,சுத்தமான, சுகாதாரமான உணவை பெறல், விரு ம்பிய நமக்கு ஏற்ற உணவு வகை களை பயிரிடல், ஈடுபாடு, உடலுக்கு நல்லதொரு உடற்பயிற்சி, மண் வளம் மிக அவதானத்தோடு பேணுதல். பீடைநாசினி, இரசாயன பொருட்களை பயன்படுத்தல் போன்றவற்றை தவிர்த்தல்.உளரீதியில் மாற்றம், நடத்தையில் மாற்றம், திறனில் மாற்றம், ஒற்றுமை போன்ற பல விடயங்களைப் பொற்றத்தருகின்றது.
கூரைத்தோட்டம் செய்வோம்
இது ஒரு மாற்றுமுறை தோட்டச் செய்கையாகும். எந்த வித கட்டிட கூரையிலும் பயிர் வளர்த்தல் முறையாகும்,இது அழகிற்காக மட்டுமின்றி முறையாக பன்படுத்தினால் உணவுக்காவும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் ஆணிவேர் கொண்ட செடிகளை பயிரிடுவது முறையானதல்ல என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பயிர் செய்கையின் வகைகள்
இந்த விடுமுறை காலத்தில் நாம் பல பயிர்ச் செய்கையை மேற்கொள்ள முடியும் அந்தவகையில், வீட்டுத்தோட்டம்,சேதனபயிர்ச் செய்கை, ஒருங்கிணைந்த பயிர்செய்கை அதாவது குறிப்பிட்ட ஒரு இடத்தில் பலதரப்பட்ட பயிர்செய்கை முறைகளையும் ஒண்றிணைத்து மேன்மைக்குட்படுத்தல். பசுமைக்குடில் பயிர்ச்செய்கை அதாவது கட்டடங்களில் உள்ளே பயிர்கள் வளர்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளே பயிர்கள் வளர்த்தல், மண்ணற்ற பயிர் செய்கை இது மண்ணில்லாமலே பயிருக்குத் தேவையான நீர், ஊட்டச்சத்து என்பவற்றை வழங்கி பயிர் செய்தல், கற்கள், மரங்கள் போன்றவற்றில் தேவையான வளங்களை அளித்து பயிர்களை வளர்க்கலாம். மற்றும் கொள்கலன் பயிர்ச்செய்கை அதாவது சிறு பயிர்களை இடக்குறைப்பாடுள்ள சூழலில் கொள்கலனில் வளர்த்தல் என்பனவாகும். இவைகள் எம்மால் சாதாரணமாக செய்யக்கூடிய பயிர்வளர்த்தல் முறையாகும்.
வீட்டுத்தோட்டத்தில் இயற்கை உரத்தை பயன்படுத்துதல்
வீட்டுத்தோட்டம் பொதுவாக இயற்கை உரங்களை பயன்படுத்தி வேளாண்மை செய்வது மிக பொருத்தமானதும்.இலகுவானதும், செலவீனமற்றதுமாகும்.இதுவே நஞ்சற்ற உணவை பெற்றக்கொடுக்கும். நோய்காவிகளிலிருந்து எம்மை காக்கும். அந்தவகையில் இயற்கை உர வகைகளை பின்வருமாறு காட்டலாம்.
விலங்கு எரு அல்லது தொழு உரம் அதாவது விலங்குகளிலிருந்து பெறப்படும் கழிவுகள் அல்லது கால்நடை வளர்ப்பு வேளாண்மையில் கால்நடைகளிலிருந்து பெறப்படும் கழிவுகள் அவற்றிக்கான தொழுவங்களிலிந்து பெறப்படும் கழிவுகளும் இயற்கை உரமாக பயன்படுத்தலாம்.
பசுந்தாள் உரம் அதாவது ஒரு பயிர்செய்கையின்போது பயிர்களால் மண்ணிலுள்ள ஊட்டக்கூறுகள் பயன்படுத்தப்பட்டு மண்ணின் வளம் குறைகையில் அதனை ஈடு செய்வதற்காக வேறொரு பயிரை அந்த நிலத்தில் பயிரிட்டு பயிர் வளர்ந்த பின்னர் அதே நிலத்தை பதப்படுத்தி பயிர் செய்தலாகும்.
கூட்டெரு அதாவது மக்கவைக்கப்பட்ட உயிர்சார் பொருள்களை குறிக்கும் ஒரு குறிப்பிட்ட வகை உரமாகும்.
இதில் தொழு உரம் அல்லது எரு மற்றும் பசுந்தாள் உரம் போன்ற கரிம அல்லது சேதன சேர்வைகள் கலந்திருக்கும்.
ஜயகுமார் ஷான், மொனறாகலை – தினகரன்