உள்நாட்டு கல்வித் தரம் மேம்படுத்தப்பட வேண்டும்
ஒரு நாடு அபிவிருத்தியடைய வேண்டுமாயின் அந்நாட்டில் அரசியல், பொருளாதார, சமூக ரீதியான விருத்தி ஏற்பட வேண்டும். அந்த வகையில் பொருளாதார அபிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் பிரதான காரணியாக கல்வி விளங்குகின்றது. கல்வி செயற்பாடுகளின் ஒழுங்கமைப்பில்தான் ஒரு நாட்டின் அபிவிருத்தி தங்கியுள்ளது.
இந்நிலையில் யுனெஸ்கோ ‘ஒவ்வொரு நாடும் மொத்த தேசிய வருமானத்தில் 4 வீதம் முதல் 5வீதம் வரையான நிதியை கல்விக்காக ஒதுக்க வேண்டும்’ என்கிறது.
மனிதன் தனது நாட்டிலுள்ள வளங்களை வசதிக்கேற்ப மாற்றயமைத்தும், குறைந்த வளத்தைக் கொண்டு அதிக இலாபத்தை ஈட்டியும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான அறிவை கல்வி மூலமே பெற்றுக் கொள்கின்றான். இயற்கை வளத்தைப் பயன்படுத்துவதிலே மனிதன் எத்தகைய ஆற்றலும், வளர்ச்சியும், வேகமும் கொண்டுள்ளான் என்பதைப் பொறுத்தே ஒரு நட்டின் வளர்ச்சி அமைகிறது. அந்த வகையில் நாட்டின் பொருளாதார விருத்தியில் கல்வி பாரியளவில் துணை புரிகின்றது.
ஒரு நாடு முன்னேற்றப் பாதையில் செல்லும் போது பொருளாதாரத்தில் புதிய தொழில் வாய்ப்புகள் பெருகும். அத்தொழிலில் வாய்ப்புகளுக்கேற்ப புதிய அறிவு, திறன் மனப்பாங்கு உள்ள மனிதவளம் தேவைப்படுகின்றது. அதனால் பொருத்தமான தேர்ச்சியுடைய மனித வளத்தை உருவாக்கும் வகையில் நாட்டின் கல்வி முறையை பரந்ததாக்கி கொள்வதன் ஊடாக தேர்ச்சியுடைய மனித வளத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.
இன்றைய சூழலில் தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு நாடும் தனது நாட்டின் பொருளாதார விருத்திக்கேற்ப தொழிற்கல்வி முறையை முன்னிறுத்தி வருகின்றன. இன்றைய கல்விச் சூழலில் இணையக் கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. இதன் மூலம் பொருளாதார ஒன்றிணைப்பை மேற்கொள்வது இலகுவாக அமையும். அதாவது உலக மக்களுடன் பணப் பறிமாற்றங்களை மேற்கொள்ளவும், வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் அதற்கான நுட்பங்களை கைக்கொள்வது பற்றி அறிந்து கொள்ளவும் நவீன தொழினுட்பங்களை கையாளுவதற்கான முறைகளை அறிந்து கொள்வதற்கும் கணினி மற்றும் இணையம் சார்ந்த கற்றல் உறுதுணையாக உள்ளது.
இளைஞர், யுவதிகள் தத்தமது நாடுகளில் கல்வியைக் கற்று தொழிலில் ஈடுபடும் போதுதான் பொருளாதார விருத்தியைக் கட்டியெழுப்ப முடியும். அறிவுசார் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கம், தனியார்துறை, மற்றும் பல்கலைகழகத்துறை சார்ந்த பொருளாதார, சமூக, விஞ்ஞான, வரலாற்று நிபுணர்களின் ஆலோசனையின் கீழ் கல்விச் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது. இதன் மூலம் தமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பொருத்தமான கல்விச் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு அதன் அடிப்படையில் கல்வி வழங்கப்படும் போது பொருளாதாரத் துறையில் வளர்ச்சி ஏற்படும். இதன் மூலம் தொழிலுக்குரிய அடிப்படை அறிவு, திறன், வழிகாட்டல்களை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லக் கூடியதாக இருக்கும். கல்வி கற்றுக் கொண்டே தொழில் வாய்ப்பில் ஈடுபடல் மற்றும் தொழில் புரியும் போது கற்றல் என்ற செயற்பாடு மேற்கொள்ளப்படுவதும் வரவேற்கத்தக்க விடயமாகும்.
இதனால் கல்விச் செலவும் குறைக்கப்படும் அதேவேளை, பொருளாதாரம் வளர்ச்சி நிலையை நோக்கி நகர்த்தப்படும். இவ்வாறான ரீதியில் பொருளாதார அபிவிருத்தியில் கல்வியின் பங்களிப்பு காணப்படுகின்றது. இலங்கை தற்போது கல்வி மூலம் மனிதவள அபிவிருத்தியில் சிறந்து விளங்குவதை அவதானிக்கலாம். எனினும் தற்போது ‘அபிவித்தி அடைந்து வரும் நாடு’ என்ற கட்டமைப்பிலேயே உள்ளது. எனவே அபிவிருத்தி நிலையை நோக்கிச் செல்ல பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் முகமாக கல்விச் செயற்பாடுகளை சீரமைக்கும் அவசியப்பாடு எமது அரசுக்கு உண்டு.
கல்வி எதிர்கால தூரநோக்கு சிந்தனையைக் கொண்டதாக அமையும் போது பொருளாதார அபிவிருத்தி ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.அப்போதுதான் கல்வியானது நாட்டின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாகத் திகழும்.
சந்திரகுமார் புனிதமலர்
(2ம் வருடம்,கல்வியியல்
சிறப்புக்கற்கை, கல்வி
பிள்ளை நலத்துறை,
கிழக்கு பல்கலைக்கழகம்)
(2ம் வருடம்,கல்வியியல்
சிறப்புக்கற்கை, கல்வி
பிள்ளை நலத்துறை,
கிழக்கு பல்கலைக்கழகம்)
(Thinakaran)