2020 ஆண்டுடன் நிறைவு பெறும் கலைத்திட்ட சீராக்க செயன்முறை குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விடயங்கள்
1. கலைத்திட்ட சீர்திருத்தம் ஒவ்வொரு எட்டு வருடங்களுக்கு ஒரு முறை இடம் பெற வேண்டும் என தேசிய கல்வி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. அதன் படி 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கலைத்திட்டத்தினை அடுத்து 2015 ஆம் ஆண்டு கலைத்திட்ட சீராக்கம் இடம் பெற்றது
2. 2007 ஆம் ஆண்டு கலைத்திட்ட கட்டமைப்பு சார் மாற்றங்கள் இடம் பெற்றாலும் கூட 2015 ஆம் ஆண்டு பாரிய மாற்றங்கள் எதுவும் இடம் பெறவில்லை. கலைத்திட்ட வடிவமைப்பாளர்கள் பழைய கலைத்திட்டத்தின் உள்ளடக்கத்தில் சுமார் 30 வீதமான பகுதிகளை மாத்திரமே மாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் படி பழைய உள்ளடக்கத்துடன் சுமார் 30 வீத மாற்றங்களுடம் புதிய கலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
3. புதிய கலைதிட்ட சீர்திருத்தத்துக்கு தலைமை தாங்கும் தேசிய கல்வி நிறுவகம் இச்சீர்திருத்தத்தை என அடையாளப்படுத்தியது. இதனை கலைத்திட்ட நியாயிப்பு என தமிழ்படுத்த முடியும்.
4. இடை நிலை வகுப்புகளுக்கான கலைத்திட்ட சீர்திருத்த அமுலாக்கம் பின்வரும் ஒழுங்கில் இடம் பெற்றது.
2015 – தரம் 10 மற்றும் தரம் 6
2016 – தரம் 11 மற்றும் தரம் 7
2017 – தரம் 8
2018 – தரம் 9
5. ஆரம்ப வகுப்புகளுக்கான கலைத்திட்டம் ஒரு வருடம் பிற்படுத்தப்பட்டு பின்வரும் ஒழுங்கில் அமுலானது
2016 – தரம் 1
2017 – தரம் 2
2018 – தரம் 3
2019 – தரம் 4
2020 – தரம் 5
6. உயர் தரத்திற்கான பாடத்திட்ட சீராக்கம் பின்வருமாறு அமைந்திருந்தது
2009 தரம் 12 க்கும் 2010 இல் தரம் 13க்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அதற்கேற்ப
2017 – இல் தரம் 12க்கும் 2018 இல் தரம் 13க்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
(ஊடகம் முதலான சில பாடங்கள் ஒரு வருடம் பிற்படுத்தப்பட்டது)
7. இதன் படி, கலைத்திட்ட சீராக்க செயன்முறை எதிர்வரும் 2020 ஆம் வருடத்துடன் முற்றுப் பெறுகின்றது.
8. கலைத்திட்ட மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாடுகளில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் பின்வரும் தயாரிப்பு ஏற்பாடுகள் அதற்கு முன்னைய வருடமே நிறைவு செய்யப்பட்டுள்ளன.
பாடத்திட்டம் தயாரித்தல், ஆசிரியர் வழிகாட்டி, பாடநூல், ஆசிரியர் பயிற்சிகள், துறை சார்ந்தோரை தெளிவூட்டல் என்பன மேற்கொள்ளப்பட்டன.
9. புதிய கலைதிட்ட சீராக்கம் கல்வி மறுசீரமைப்பாகவும் பாரிய மாற்றங்களுடனும் அறிமுகப்படுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் காணப்படுகின்றன. 2023 இல் புதிய கல்வித் திட்டம் மற்றும் அதற்கேற்ற கலைத்திட்டத்தை அறிமுகப்படுத்த கல்வித் துறை சார் நிறுவனங்கள் உழைத்துக் கொண்டுள்ளன.
இரண்டாம் நிலைக் கல்விக்காக செலவிடும் காலத்தை ஒரு வருடமாக குறைத்தல் (தரம் 10 இல் சாதாரண தரப் பரீட்சை, தரம் 12 இல் உயர் தரப் பரீட்சை) மற்றும் சாதாரண தரப் பொதுப் பரீட்சைக்கான பாடங்களை குறைத்தல் என்பன இதன் பிரதான அம்சங்களாக நோக்கப்படுகின்றன.
அத்தோடு தரம் 10 இல் நடைபெறும் சாதாரண தரப் பரீட்சை தடைதாண்டல் பரீட்சையாக அல்லாமல் உயர் தரத்தில் துறை ஒன்றை தெரிவு செய்வதற்கான பரீட்சையாக கருதுவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
10. கலைத்திட்ட சீராக்கத்தின் இடையே 13 வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வி தொடர்பான பரீட்சார்த்த அமுல்படுத்தல் நடைபெற்றது. 23 பாடங்கள் உயர் தரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. தொழிலுலகுடன் நேரடியாக தொடர்பு பட்ட வகையிலும் என்விகியு – தேசிய தொழில் தகைமை உடன் தொடர்புபடுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டன.
ஜெஸார் ஜவ்பர்.
2019.11.28