பயணமொன்று செல்லும்போது சிறிய சுமையையாவது தூக்கிச் செல்ல உங்கள் குழந்தைகளுக்கு அனுமதிக்காத நீங்கள், எவ்வாறு வருடத்தில் 10 மாதங்களுக்கு பல கிலோ எடையுடைய பாரத்தை தூக்கிச் செல்ல அனுமதிக்கின்றீர்கள்?
காலத்துடன் போராடும் நீங்கள், உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு பல கிலோ சுமையுடைய பாடசாலைப் பையை முதுகில் சுமத்தி அனுப்புகின்றீர்கள். அது அவர்கள் கற்கும் புத்தகங்களைக் கொண்ட பையாகும். புத்தகப் பையின் மீதுள்ள கௌரவம் அநேகமானோரின் மனதுக்கு பெரிய பாரமாகத் தோன்றுவதில்லை. ஆனால் உண்மை என்னவென்றால் உங்கள் பிள்ளைகள் காலையும் மாலையும் தங்களால் சுமக்க முடியாத புத்தகப்பையை சுமந்து கொண்டே பயணம் செய்கின்றார்கள்.
இலங்கையில்தான் நிலைமை இவ்வாறுள்ளது. ஆனால் வெளிநாடுகளில் பிளளை காலையில் பாடசாலைக்குச் செல்வதும் மாலையில் வீடு திரும்புவதும் சிரமமின்றியேயாகும். கல்வியை சுமையாகக் கொள்ளாமல் கற்க அந்நாட்டில் போதியளவு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
பாடப் புத்தகங்கள், குறிப்புப் புத்தகங்கள், பேனா, பென்சில், சாப்பாடு, தண்ணீர் என பாடசாலைப் பையில் காணப்படுவதோடு சில வேளையில் மேலதிக வகுப்புக்கான புத்தகங்களும் புத்தகப் பையில் அடங்குகின்றன. இவையெல்லாம் அந்தக் குழந்தையின் பாரத்தை விட அதிகமான பாரமாகும்.
சாதாரணமாக ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு முகங்கொடுக்கும் மாணவர்கள் தொடக்கம் சாதாரண தரம் வரை கல்வி கற்கும் மாணவர்களே இந்த சிரமத்துக்கு ஆளாகுகின்றார்கள். அந்தக் காலங்களில்தான் அதிகளவு பாடங்களை கற்க வேண்டியிருப்பதோடு மேலதிக வகுப்புகளுக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அவர்களின் புத்தகப்பைகள் அண்ணளவாக 9 கிலோ கிராம் நிறையுடையதாக இருக்கின்றன. அவற்றில 37வீதமானவை பாடப் புத்தகங்களாகும். 30வீதமானவை அப்பியாசக் கொப்பிகள், குறிப்புகள் என்பனவாகும். மீதியுள்ளது புத்தகங்கள் அல்லாத ஏனையவை ஆகும்.
எவ்வாறாயினும் அதிக சுமையுடன் கூடிய புத்தகப்பை மாணவர்களின் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்தகப் பைகளின் நிறை குறித்து சர்வதேச தர நிர்ணயம் காணப்படுகின்றது. அந்த தர நிர்ணயத்துக்கு அமைய மாணவனின் உடல் எடைக்கேற்ப 10வீதத்துக்கும் குறைவாகவே புத்தகப்பையின் எடை காணப்பட வேண்டும். இது குறித்து கவனமெடுக்கையில் சிறுவர்கள் கொண்டு செல்லும் புத்தகப்பையின் நிறையை பெரியோர்களின் நிறையுடன் ஒப்பிடவும் முடியாதுள்ளது.
கல்வியமைச்சின் கல்வி வெளியீடுகள் திணைக்களம் நிறை கூடிய பாடப் புத்தகங்களை பல பகுதிகளாகப் பிரித்துள்ளது. அதன் காரணமாக 6,7,8ம் தரங்களில் 12 தொடக்கம் 13 புத்தகங்கள் பாவிக்கப்படுகின்றன. அனைத்து பாடப் புத்தகங்களும் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டாலும் நிறை அதிகமாகவே காணப்படுகின்றன. சரியான நிறைக்கு கொண்டு வரவேண்டுமென்றால் இன்னும் மூன்று பகுதிகளாகவாவது பிரிக்க வேண்டும். அது அதிக செலவை ஏற்படுத்துவதாகும்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் அதிகாரிகள் பாடப் புத்தகம் மாணவர்கள் வீ்ட்டில் பாவிக்க வேண்டிய புத்தகமாகும். அது வகுப்புகளில் வைத்து கற்பிக்க வேண்டியதல்ல. ஆசிரியர்கள் தங்களுடைய ஆசிரியர் கைநூலை பயன்படுத்தி கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.
மாணவர்கள் தங்கள் சுயகற்கையின் போது வீடுகளில் அவற்றைப் பாவிக்கலாம். ஆனால் இன்று பாடங்களுக்குத் தேவையான புத்தகங்களை கொண்டுவராவிட்டால் அநேகமான ஆசிரியர்கள் ஏன் புத்தகத்தைக் கொண்டு வரவில்லை எனக் கேட்கின்றார்கள்.
வெளிநாடுகளில் பாடப் புத்தகங்கள் மூலம் கல்வி கற்பதே இல்லை. பிள்ளைகள் பாடசாலைக்கு புத்தகம் கொண்டு செல்வதேயில்லை. அங்கு புத்தகங்களை வைக்க பாதுகாப்பான ராக்கைகள் காணப்படுகின்றன. முன்னர் இலங்கையிலும் அந்த முறையைப் பின்பற்றுமாறு சுற்று நிருபங்கள் அனுப்பப்பட்ட போதும் அவை சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இலங்கையில் கல்விமுறையானது செய்முறைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல. பரீட்சையை அடிப்படையாகக் கொண்டதாகும். அதனால் இலங்கைப் பாடசாலைகளில் பாடப்புத்தகங்களை மாத்திரமல்ல அதிகளவு பயிற்சிப் புத்தகங்களையும் கொண்டுவர வேண்டியுள்ளது.
கடந்த காலங்களில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண கல்வியமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து பாடசாலை மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் புத்தகப்பையொன்றை அறிமுகம் செய்தன. அதற்கான பங்களிப்பை வழங்கியவர் இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன ஆவார்.
சாதாரணமாக சிறந்த பாடசாலைப் பையாக நாம் பரிந்துரை செய்வது Book pack எனப்படும் தோளில் சுமந்து செல்லும் பையாகும். இந்தப் பை மூலம உடம்புக்கு குறைந்தளவே பாதிப்புண்டாகும். ஆனால் அந்தப் பை தோள்பட்டையை விட உயரக் கூடாது. கீழ்ப் பகுதி பிருட்டத்தைத் தாண்டக் கூடாது.
அதேபோல் பாடசாலைப்பை பல பகுதிகளாக பிரிக்கப்பட வேண்டும். நல்ல அகலமாக இருப்பதோடு குஷன் செய்த தோள்பட்டை பட்டிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அவ்வாறு காணப்பட்டால் கழுத்திலுள்ள இரத்த நாளங்களும் நரம்புகளும் குறைந்தளவே அழுத்தத்துக்கு உள்ளாகும். கடந்த காலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 70% மாணவர்கள் தங்களுக்கு உடல் வேதனை உள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.
புத்தகப் பையின் சுமை காரணமாக மாணவர்கள் மோசமான சுகாதாரப் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். விசேடமாக தலைவலி, தசைநார் மற்றும் எலும்புகளில் வலி, முள்ளந்தண்டு வளைவு போன்றவை அவற்றில் சிலவாகும். சாதாரணமாக குழந்தையின் உடல் தோற்றம் 10-, 12 வயதுகளில் உறுதியாகி விடும். ஆகவே அந்தக் காலங்களில் தவறான நிலையில் உடல் காணப்பட்டால் அதுவே நிரந்தர தோற்றமாக மாறிவிடும் அபாயமுள்ளது.
சுபாசினி ஜயரத்ன
(சிலுமின)
(சிலுமின)