ஆதிகாலத்தில் இருந்து கல்வியானது மனித குலத்தில் பின்னிப்பிணைந்து வளர்ச்சி கண்டு வருகின்றது. மனிதனது கூட்டுவாழ்க்கை, வளர்ச்சி,செயன்முறை ஆகிய அனைத்திலும் கல்வி செல்வாக்குச் செலுத்துகின்றது.
இன்று உலக அரங்கில் பழைமையில் பெருமளவு ஊறியிருந்து நவீனமாக்கிக் கொள்ளும் செயன்முறைக்கு கல்வி பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றது. இவை அனைத்தும் கல்வியின் சமூக செயலாகவே அமைகின்றன. சமூகத்தில் பல பிரச்சினைகளுக்கும் கல்வி விடைகாணும் தன்மை கொண்டது. அதன்படி கல்வியில் மாணாக்கரை முழுமையான இயல்புடையவர்களாக உருவாக்குவதே கல்வியின் தலையாய நோக்கமாகும்.
கல்வியும் சமூகமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன என்பதனை ஜே.எம்.கில்டர் என்பவர் முதன் முதலில் வெளிப்படுத்தினார். இதனை மையமாகக் கொண்டு தற்கால கல்வித் திட்டங்கள் அமைந்துள்ளன.
கல்வியினால் சமுதாயத்தை சிறப்பாக உருவாக்க முடியும். கல்வி மனித சமூகத்தை பக்குவப்படுத்தும் கருவியாகும். இளைய தலைமுறையினரை வழிநடத்துவதிலும் சமுதாயத்தில் தன்னுடைய பங்களிப்பினை செய்ய வைப்பதிலும் கல்வி முதன்மை இடத்தினைப் பெறுகின்றது.
இதனை ஜி.கே.செஸ்தெர்டோன் எனும் தத்துவ அறிஞரும் உறுதிப்படுத்துகின்றார்.மனிதனின் நாகரிக வளர்ச்சிக்கு கல்வித்துறை அவசியமாகின்றது. விஞ்ஞான ரீதியான கல்வியின் உச்ச நிலையே தற்போதைய நவீன வசதிகள் கொண்ட உலகமாகும். அதன் இயல்புக்கேற்ப சமூகத் தேவைகளை நிறைவு செய்வதற்கு அனைத்து மனிதர்களுக்கும் கல்வி கருவியாக உள்ளது.
அந்த வகையில் கல்வியானது சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. அது சமூக அறியாமை இருளை நீக்குகின்றது. சமூகத்திலுள்ள மூடநம்பிக்கைகளை நீக்கி அறிவை வழங்கும் சாதனமாகக் காணப்படுகின்றது.
உலகில் மனிதன் தனியாகப் பிறப்பதுமில்லை தனியான வாழ்வதுமில்லை. அனைவரும் ஒன்றிணைந்து சமூகமாகவே வாழ்கின்றனர். எமது சமுதாயத்தினை நோக்கினால் பன்மைச்சமூகமாக வாழ்கின்றோம். இப்பன்மைச்சமூகம் முறிவின்றி சுமுகமாக இயங்குவதற்கு கல்வி அவசியமாகின்றது. கற்பதனால் மனிதன் பண்பாடடைகின்றான். சாதி, மதபேதமின்றி ஒன்றிணையத் தூண்டுவது கல்வி.
சமூகத்தையும் மனிதனையும் இணைக்கும் செயற்பாட்டில் அது பெரும் பங்கினை பெறுகின்றது.சமூகமயமாக்கலை ஏற்படுத்தும் தலைசிறந்த நிறுவனம் பாடசாலை ஆகும். பாடசாலை பல்வேறு வளங்களைக் கொண்டுள்ளது. மனிதவளம்,பௌதிக வளம், நிறுவன வளம், தொழில்நுட்ப வளம் என அனைத்தையும் பாடநூல் உள்ளடக்கியுள்ளது.
இவ்வாறான வளங்கள் அனைத்தும் மாணவர்களின் ஆளுமை விருத்தி, சமூகத் தொடர்புகளுக்கான இயலுமை உள்ளவர்களாக உருவாக்குவதனை மையமாக கொண்டிருப்பதனை இனங்காண முடியும். பாடசாலையானது குடும்பத்திற்கு அடுத்தபடியாக மாணவர்களின் சமூகமயமாக்கல் செயற்பாட்டில் பிரதான நிறுவனமாக அமைகின்றது.
ஏனெனில் அதிகமானவர்களுக்கு வீட்டு வாழ்க்கைக்குப் பின்னர் மிகத் தாரளமான சமூகமயமாக்கல் முகவராக ஆசிரியர்கள் இருக்கின்றனர்.சமூக மேம்பாடுகள் பற்றிய கல்வியை ஆசிரியர் வழங்குவதன் மூலம் கல்வியினூடாக மாணவர்கள் சமூகத்தினுள் இலகுவாக பிரவேசிக்க முடிகின்றது.
பிள்ளை பாடசாலைக் கற்றலில் தான் பெற்ற அறிவைக் கொண்டு சூழலில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. பாடசாலைக் கற்றலில் மாணவர்கள் அரசியல் தொடர்பான விடயங்களை கற்கும் போது அது தொடர்பான தெளிவு சமூகத்திற்கு சென்றடைகின்றது. இது போன்று பாடசாலையில் விவசாயம்,வாழ்க்கைத் தேர்ச்சி,தொழில்நுட்பவியல் என அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. இவை அனைத்தினதும் இறுதி எல்லை சமூகமாகவே உள்ளது.
ஒருவரை தனிமனித உணர்வு உள்ளவராகவும் சமூக வாழ்க்கைக்கு உரியவராகவும் மாற்றுகின்ற பணியை சமூகமயமாக்கல் செய்கின்றது. இந்த பணியை செய்கின்ற நிறுவனங்களில் கல்விச் செயற்பாட்டின் முன்னணியான பாடசாலை தீவிரமாக மேற்கொள்கின்றது. பெற்றோர்,குடும்பம், வீட்டுச் சூழலுக்கு அப்பால் சமூகத் தொடர்பினை உருவாக்கும் சக்கி பாடசாலைக்கு உண்டு. ஆகவே கல்வியும் சமூகமும் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளன. இதற்கு பாடசாலை பெரும் பங்காற்றுகின்றது.
சமூகமும் கல்வியும் இரட்டைப் பிறவிகளாகும். இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பினைக் கொண்டு காணப்படுகின்றன. சமூகத்தில் காணப்படும் உறுப்பினர்களின் நடத்தை, எண்ணம், இலக்கு என்பன கல்வியின் மூலமே தீர்மானிக்கப்படுகின்றது.
மாற்றமடையும் சமூகத்திற்கு ஏற்ப மாறுவதற்கும் எம்மை அதற்கேற்ப இசைவாக்கம் கொண்டவர்களாக முகாமைத்துவம் செய்வதற்கும் கல்வியே அடிப்படையான எண்ணக் கரு ஆகும். ஆகவே கல்வியினை முழுமையாக பெறுவோம் சமூகத்தினை கட்டியெழுப்புவோம்.
யோ. அகல்யா
கிழக்குப் பல்கலைக்கழகம்
கிழக்குப் பல்கலைக்கழகம்