ஒரு சிறந்த சிந்தனையாளராக, அறிஞராக, கல்வியியலாளராக, பல்கலைக்கழக பீடாதிபதியாக, எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக,பதிப்பாசிரியராக, சிறந்த பேச்சாளராக பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவராக பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள் இன்று காலமானார். தமிழ் கூறும் நல்லுலகுக்குப் பேரிழப்பு.
இவர் 1944.12.23ம் திகதி பதுளை மாவட்டத்தில் பிறந்தா அவர், தன்னுடைய பாடசாலைக் கல்வியை 1950 –1960 களில் பதுளை ஊவா கல்லூரி, தெல்லிப்பளை மஹஜன கல்லூரி போன்றவற்றில் கற்றதுடன், உயர் கல்வியை 1967இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்றார். கல்விமாணி பட்டத்தையும்,1977 – 1978ல் ஜப்பான் ஒசாக்கா அயல்மொழிப் பல்கலைக்கழகத்தில் ஜப்பானிய மொழி, பண்பாட்டு சான்றிதழையும் 1978 – 1980 களில் ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார்.
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்கள் நல்லாட்சி அரசில் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவில் உறுப்பினராகவும், மனித உரிமை ஆணைக்குழுவில் கல்வித்துறை சார்ந்த நிபுணத்துவ ஆலோசகராகவும் இருந்ததுடன், கொழும்பு பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத்தில் உறுப்பினராகவும், திறந்த பல்கலைக்கழக கல்விப்பீட சபையில் உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.
கல்வித்துறையில் மிகுந்த பங்காற்றியுள்ள இவர், இறுதியாக கொழும்பு பல்கலைக்கழக கல்விபீடத்தின் தலைவராகக் கடமையாற்றினார். மேலும் இவர் 1968ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் போதனாசிரியராக கடமையாற்றியதுடன் 1969ம் ஆண்டு மத்திய வங்கியில் மொழிபெயர்ப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து 1970ம் ஆண்டு முதல் 1972ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெலிகம அரபா மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து 1973ம் ஆண்டு முதல் 1974ம் ஆண்டு வரையில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளராக கடமையாற்றியதுடன் அதே காலப் பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளோமாவிற்காக பாடங்கள் எழுதும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். அத்துடன் 1975ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் கொழும்பு பல்கலைக்கழக கல்விபீடத்தின் உதவி விரிவுரையாளராக பதவி உயர்வு பெற்று 1986ம் ஆண்டு வரையில் சேவையாற்றினார்.
1986ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தரம் 1 முதுநிலை விரிவுரையாளராக பதவியுயர்வு பெற்று 1995ம் ஆண்டு வரையில் அப்பதவியில் சேவையாற்றினார். 1995ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்று வேவையாற்றினார். பின்னர் 2007ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்விபீடத் தலைவராக தெரிவு செய்யப்பட்டு 2010ம் ஆண்டு ஓய்வு பெறும் வரையில் அப்பதவியில் நீடித்து கல்வித்துறைக்கு பாரிய சேவையாற்றியுள்ளார்.
மேலும் இலங்கை இந்தியர் வரலாறு, கல்வியியல் கட்டுரைகள், புதிய நூற்றாண்டுக்கான கல்வி, கல்விச் செயற்பாட்டில் புதிய செல்நெறிகள், உயர் கல்வியில் புதிய செல்நெறிகள், கல்விச் சிந்தனையில் புதிய செல்நெறிகள், இலங்கையில் தமிழர் கல்வி, அபிவிருத்தியும் கல்வியும், கல்வியியல் சிந்தனைகள், மலையக கல்வி_ சில சிந்தனைகள், கல்வி ஒரு பன்முக நோக்கு ஆகிய நூல்களையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
மேலும் இலங்கையின் கல்வி வளர்ச்சி, இலங்கையில் கல்வி, கல்வியும் மனித மேம்பாடும், கல்வித் திட்டமிடல், கல்வியும் மனிதவள விருத்தியும் ஆகிய நூல்களின் இணையாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். அத்துடன் திருப்பம், அகவிழி மற்றும் சார்க் நாடுகளுக்கான கல்வியியல் ஆராய்ச்சி சஞ்சிகைகளின் ஆலோசகராக செயற்பட்டதுடன் மொத்தமாக 30 தமிழ் மற்றும் ஆங்கில மொழி நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
அத்துடன் பல்வேறு ஆராய்ச்சி மாநாடுகளில் கலந்து கொண்டு ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார். அந்த வகையில் லிபியா நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் கேர்ணல் கடாபியின் பசுமை நூலுக்கு ‘முற்போக்குக் கல்விச் சிந்தனை’ என்ற ஆய்வுக் கட்டுரையை எழுதினார்.
இது தவிர இந்தியா, ஜப்பான், மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் நடைபெற்ற கல்வி தொடர்பான மாநாடுகளில் இலங்கையின் உயர் கல்வி, தேசிய கல்வி, மலையகக் கல்வி பற்றிய ஆய்வேடுகளை சமர்ப்பித்து சர்வதேச புகழைப் பெற்றுக் கொண்டார்.
பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள் யாழ் மற்றும் கிழக்கிலங்கை பல்கலைக்கழகங்களில் வருகைதரு விரிவுரையாளராகவும் தேசிய கல்வி ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிபுணர் குழு, அரசகரும மொழி ஆணைக்குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும் கடமையாற்றியிருந்தார்.
மேலும் தனது கல்விச் சேவையில் ஐக்கிய அமெரிக்கா அலபாமா ஓபோன் பல்கலைக்கழகம், ஜப்பான் ஹிரேஷிமா பல்கலைக்கழகம் என்பவற்றின் வருகைதரு பேராசிரியராகவும் தேசிய கல்வி நிறுவகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம், இலங்கை பத்திரிகை நிறுவனம் என்பவற்றின் விரிவுரையாளராகவும் சேவையாற்றியுள்ளார்.
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் 1978ம் ஆண்டு ஜப்பானிய அரசாங்கத்தின் புலமைப் பரிசில் பெற்றதுடன் 1998ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் புலமைப் பரிசிலையும் பெற்றுக் கொண்டார். அத்துடன் ஊவா மாகாண ஆளுநரின் கல்விப் புலமையாளர் விருது, ஊவா மற்றும் மத்திய மாகாண சாஹித்திய விழாக்களில் ‘கல்விமான்’ விருது, மேல் மாகாண சாஹித்திய விருதுகளையும் பெற்று பெருமை சேர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் சமூகத்துடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்த பேராசிரியர் சந்திரசேகரன் 1980 களில் முஸ்லிம்களின் உயர் கல்வி பற்றி விரிவான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.