A/L தொழினுட்பவியல் மாணவர்கள் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியை உடையவர்களா?
பிறரும் பயன்பெற பகிர்ந்து விடுங்கள். ஆசிரியர்களாக இருப்பின் இத்தகவல்களை மாணவர்களுக்கு கொண்டு போய் சேருங்கள்.
க.பொ.த உயர்தர தொழினுட்ப பிரிவு மாணவர்கள் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதி உடையவர்களா? என்று கேட்டால் பதில் ஆம் என்பதாக இருந்தாலும் அதனை முழுமைப்படுத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகள் காணப்படுகின்றன. அந்த நிபந்தனைகளை முற்கூட்டியே நிவர்த்தி செய்வதன் மூலம் விண்ணப்பிக்கும் வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
விண்ணப்பிப்பதற்கும் தெரிவு செய்யப்படுவதற்குமான தகுதிகள் மற்றும் தகுதியின்மைகள் பற்றிய பூரண விளக்கம் மற்றும் வழிகாட்டல்கள் இல்லாத எங்களுடைய மாணவர்கள் தங்களுடைய உயர் கல்விக்கான வாய்ப்புக்களை இழந்து கொண்டு உள்ளார்கள் என்பது கவலைக்குரிய ஒரு விடயமாகும்.
இந்த வகையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான தெரிவுகளின் போது குறிப்பாக தொழினுட்பவியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் எத்தகைய தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அதற்கான தெரிவு ஒழுங்குகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் இப்பதிவின் ஊடாக தெளிவுபடுத்தலாம் என நினைக்கின்றேன்.
(1)உயிரியல் முறைமைகள் தொழினுட்பவியல் மாணவர்களுக்கு!!
தொழில்நுட்பவியல் பிரிவில் உயிரியல் முறைமைகள் தொழினுட்பவியல் மற்றும் தொழினுட்பத்திற்கான விஞ்ஞானம் மற்றும் விவசாய விஞ்ஞானம் ஆகிய மூன்று பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி அடைந்திருந்தால் பாடநெறி இலக்கம் 22 ஐச் சேர்ந்த விவசாய மற்றும் உணவு தொழினுட்பம் எனும் படத்திற்காக தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடியும். இருப்பினும் உயிரியல் முறைமைகள் தொழினுட்பவியல் பிரிவில் மூன்றாவது பாடத்தெரிவாக விவசாய விஞ்ஞானம் எனும் பாடத்தைத் தெரிவு செய்யாது வேறு பாடத்தை தெரிவு செய்த மாணவர்கள் இக்கற்கை நெறிக்கு விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாக இருக்கும் அதேவேளை நீங்கள் உங்களுடைய O/L பரீட்சையில் விஞ்ஞானமும் தொழினுட்ப பாடத்திற்கு குறைந்தபட்சம் திறமை சித்தியை (B) பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் ஆதலால் O/L பரீட்சையில் விஞ்ஞான பாடத்திற்கு குறைந்தது திறமை சித்தி (B) இல்லையேல் மீண்டும் ஒருமுறை அப் பாடத்தை முயற்சி செய்து திறமை சித்தியை பெற்று வைப்பதன் மூலம் தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதியுடையவராகிக் கொள்ள முடியும்.
(2) பொறியியல் தொழினுட்பவியல் மாணவர்களுக்கு!!
தொழினுட்பவியல் பிரிவில் பொறியியல் தொழினுட்பவியல் மற்றும் தொழினுட்பத்திற்கான விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பவியல் பாடத் துறைக்கான மூன்றாவது பாடமாக அங்கீகரிக்கப்பட்ட பாடங்களில் ஒரு பாடம் உள்ளடங்கலாக ஒரே அமர்வில் நீங்கள் சித்தி அடைந்திருந்தால் பாடநெறி இலக்கம் 24(A)
ஐச் சேர்ந்த வடிவமைப்பும் கட்டிட தொழினுட்பமும் பாடநெறி இலக்கம் 24(B)ஐச் சேர்ந்த வடிவமைப்பும் பொறியியல் தொழினுட்பமும் மற்றும் பாடநெறி இலக்கம் 24(C)ஐச் சேர்ந்த வடிவமைப்பும் இலத்திரனியல் தொழினுட்பமும் எனும் பாடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இருப்பினும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில்(O/L) விருப்பத் தெரிவு பாடங்களான வடிவமைப்பும் கட்டிட தொழினுட்பமும் அல்லது வடிவமைப்பும் இயந்திரவியல் தொழினுட்பமும் அல்லது வடிவமைப்பும் இலத்திரனியல் தொழினுட்பமும் அல்லது வடிவமைப்பும் தொழினுட்பவியல் போன்ற பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்திற்கு சாதாரண சித்தியுடன்(C) சித்தியடைந்து இருந்தால் மட்டுமே நீங்கள் விண்ணப்பிப்பதற்கான முழுத் தகுதியையும் பெறுவீர்கள்.
ஆனாலும் எங்களுடைய மாணவர்களில் பலர் O/L இல் தொழினுட்பவியல் பாடங்களைத் தெரிவு செய்யாது அதற்கான எந்தவித பெறுபேறுகளும் இல்லாது A/L இல் தொழினுட்ப பிரிவை தெரிவுசெய்து கற்கும்போது அவர்கள் தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்புகளை இழக்கின்றார்கள். ஆதலால் இதுவரை O/L இல் திறமைச் சித்தி (C) பெறுபேறு இல்லாது கல்வி கற்கும் தொழினுட்ப பிரிவு மாணவர்கள் மீண்டும் ஒரு தடவை O/L பரீட்சைக்கு விண்ணப்பித்து தொழினுட்பவியல் பாடங்களில் ஏதாவது ஒன்றுக்கு குறைந்தது சாதாரணதர சித்தியை பெற்று வைப்பதன் மூலம் தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் தகுதியை பெற முடியும். இல்லையேல் பொறியியல் தொழினுட்ப பிரிவு மாணவர்களுக்கு தேசிய கல்வியியற் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு மறுக்கப்படும்.
(3) பொறியியல் தொழினுட்பவியல்
பாடத்துறைக்கான மூன்றாவது பாடமாக தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் பாடத்தை தெரிவுசெய்த மாணவர்களுக்கானது !!
தெரிவு – 01
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தில் குறைந்த பட்சம் திறமைச்சித்தி (B) உட்பட மூன்று பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில மொழிப் பாடத்தில் குறைந்த பட்சம் திறமைச் சித்தி(B) அல்லது ஆங்கில இலக்கியத்தில் சாதாரண சித்தியுடன் (C) சித்தியடைந்து இருத்தல் வேண்டும்.
தெரிவு – 02
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தில் சாதாரண சித்தியுடன் (C) மூன்று பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்து இருத்தல் மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தில் குறைந்த பட்சம் திறமை சித்தியுடன் (B) மற்றும் ஆங்கில மொழிப் பாடத்தில் குறைந்த பட்சம் திறமைச் சித்தி (B) அல்லது ஆங்கில இலக்கியப் பாடத்திற்கு சாதாரண சித்தியுடன் சித்தியடைந்து இருத்தல் வேண்டும்.
மேலும் பாடநெறி இலக்கம் 23 ஐச் சேர்ந்த தொழினுட்பக்கலையும் கைப்பணியும் எனும் பாடநெறி தெரிவுக்கு செய்யப்பட வேண்டுமாக இருந்தால் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் எவையேனும் மூன்று பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி அடைந்து இருக்கும் அதேவேளை க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் கலையும் கைப்பணியும் பாடத்திற்கு குறைந்தபட்சம் சாதாரண சித்தியுடன் (C) சித்தி பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.
இல்லையேல் இப்பாட நெறிக்கும் நீங்கள் விண்ணப்பிக்கும் வாய்ப்பை இழப்பீர்கள்.
தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கான இறுதி வாய்ப்பு பாடநெறி இலக்கம் 20 ஐச் சேர்ந்த உடற்கல்வி எனும் பாடநெறி இதற்கு தெரிவுக்கு செய்யப்பட வேண்டுமாக இருந்தால் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் எவையேனும் மூன்று பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி அடைந்து இருக்கும் அதேவேளை க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் விஞ்ஞான பாடத்திற்கு குறைந்தபட்சம் சாதாரண சித்தியுடன் (C) அங்கீகரிக்கப்பட்ட தடகள மெய்வல்லுனர் விளையாட்டுக்கள் , ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுக்கள் சம்பந்தமான அடைவுகளை அல்லது திறமைகளை பெற்றிருத்தல் அவசியம் ஆகும்
இல்லையேல் இப்பாட நெறிக்கும் நீங்கள் விண்ணப்பிக்கும் வாய்ப்பை இழப்பீர்கள்.
சிந்தித்து செயற்படுங்கள்.
மேலதிக தகவல்கள் ஏதும் தேவைப்படின் தொடர்பு கொள்ளுங்கள். என்னால் இயன்ற அளவிற்கு உங்களின் சந்தேகங்களை தீர்த்து முறையான வழிகாட்டல்களை மேற்கொள்ள முயற்சிப்பேன்.
S.j.Aathy
Mu/vidyananda college.
2019-01-25 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகையை அடிப்படையாகக் கொண்டது.