கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணம் மீண்டும் இறுதி இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
கிழக்கு மாகாணம் இறுதி இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ள நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் எம்மிடம் இருக்கும் தரவுகளின் படி கிழக்கு மாகாணம் 2014 ஆம் ஆண்டு முதல் இறுதி இடத்தையே பெற்று வந்துள்ளது.
இதனை மேலும் இலகுவாகப் புரிந்து கொள்ளுவதற்கு தமிழ் மொழி மூலமான கல்வியைப் பெற்று அதன்மூலம் பரீட்சைக்கு தோற்ற மாணவர்களை உள்ளடக்கிய வடக்கு மாகாணத்தோடு கிழக்கு மாகாணத்தை ஒப்பிட்டு நோக்குவோம்.
சில வேளைகளில் இந்த ஒப்பீடு பொருத்தமற்றதாக இருக்கலாம். ஏனென்றால் கிழக்கு மாகாணத்தைப் விட வடக்கு மாகாண யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மீள உயிர் பெற்று வருகின்ற கல்வி முறையையும் மக்கள் வாழ்க்கையையும் கொண்ட மாகாணமாகும்.
பல பாடசாலைகள் தற்பொழுதும் மிக மேசமான வளப் பற்றாக்குறையோடு இயங்கி வருகின்றன. எனினும், நமது வசதிக்காக வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் நாங்கள் ஒப்பிட்டு நோக்குவோம்
2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை கிழக்கு மாகாணம் தொடர்ச்சியாக இறுதி இடத்தை அல்லது 9 ஆவது இடத்தைப் பெற்றுவந்துள்ளது. அதேநேரம் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் 2014-2015 ஆம் ஆண்டுகளில் மூன்றாம் இடத்தையும் 2016ஆம் ஆண்டு 5-ஆம் இடத்தையும் 2017ஆம் ஆண்டு முதலாம் இடத்தையும் 2018ஆம் ஆண்டு 6-ஆம் இடத்தையும் பெற்றிருப்பதை புள்ளிவிபரங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தலாம்.
அத்தோடு, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நோக்கும் போது, 2019ஆம் ஆண்டு பழைய பாடத்திட்டத்தின்படி வடக்கு கிழக்கு மாகாணம் கடைசி இடத்தைப் பெற்றது. அதேவேளை புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஐந்தாம் இடத்தைப் பெற்றிருந்தது. இவ்வருடம் மீண்டும் புதிய பாடத் திட்டத்திலும் பழைய பாடத் திட்டத்திலும் இறுதி இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.
அதேநேரம் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் 2019ஆம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் இரண்டாமிடத்தையும் பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் 8-ஆம் இடத்தையும் பெற்றிருந்தது 2020 ஆம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6-ஆம் இடத்தையும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 8-ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.
முடிவாக, 2013 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை கிழக்கு மாகாணம் தொடர்ச்சியாக உயர் தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாகாண ரீதியான தரப்படுத்தலில் இறுதி இடத்தை பெற்று வந்துள்ளது.
துரதிஷ்டம் என்னவென்றால், பலவருடங்களாக கல்வியிலே மிகவும் பின்தங்கி இருந்தும் கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகளோ, சமூக ஆர்வலகர்களோ பெரிதாக கரிசனை செலுத்தியதாக தெரியவில்லை. கல்வி அடைவை அதிகரிக்க குறிப்பிடத்தக்க எந்த ஒரு திட்டங்களும் தீட்டப்பட்டதாகவோ நடைமுறைப்படுத்தப்படுவதாகவோ தெரியவில்லை.
மிக கரிசனை செலுத்தி நோக்கப்பட வேண்டிய, ஆபத்தை கிழக்கு மாகாண பொறுப்பாளர்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பாளர்களோடு இனணந்து மிக இயல்பாக நாம் அனைவரும் கடந்து கொண்டிருக்கிறோம் என்பதை வருத்தத்தோடு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
2014 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுவரை க.பொ.த உயர் தரப் பெறுபேறுகளின் படி, ஒவ்வொரு மாகாணத்தினதும் அடைவுகள் தொடர்பான பகுப்பாய்பு (மூலம்: பரீட்சைகள் திணைக்களத்தின் அறிக்கைகள்)