பாடசாலை உள்ளகக் குழுக்களுடன் தொடர்பான சமகாலப் பிரச்சினைகள்
(Current Issues relating to Internal Committees in Schools)
————————————————————————–
A.M.Mahir (LLB , MDE , SLAuS)
உள்ளடக்கம்
- அறிமுகம்
- பாடசாலை முகாமைத்துவக் குழு
- பாடசாலை முகாமைத்துவக் குழு தொடர்பான சமகாலப் பிரச்சினைகள் / பிழையான நடைமுறைகள்.
- பாடசாலை பெறுகைக் குழு
- தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு
- பாடசாலை பெறுகைச்செயற்பாடுகள் தொடர்பான பிழையான நடைமுறைகள் / சமகாலப் பிரச்சினைகள் ஆகியவற்றுடன் தொடர்பானது)
முன்னைய பகுதியில் பாடசாலைக்கு வெளியேயான இரு பிரதான பாடசாலைச் சங்கங்கள் தொடர்பாக பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதன. இத்தொடரில் பாடசாலைக்குள்ளேயான சில பிரதான குழுக்கள் தொடர்பாக எடுத்து நோக்கப்படுகின்றது.
• பாடசாலை ஒன்றில் காணப்படும் குழுக்களை இரு வகைகளாகப் பார்க்க முடியும். ஒன்று உத்தியோகபூர்வமாக அமைக்கப்பட வேண்டிய குழுக்கள். மற்றையது ஒரு குறிப்பிட்ட செயற்திட்டத்தை/ வேலைத்திட்டத்தை/ நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளவதற்காக தற்காலிகமாக அமைக்கப்படக்கூடிய குழுக்கள்.
• கட்டாயம் அமைக்கப்படவேண்டிய குழுக்களுள், பாடசாலை முகாமைத்துவக் குழு (School Management Committee -SMC), பெறுகைக் குழு (Procurement Committee – PC) தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு (Technical Evaluation Committee – TEC ) ஆகிய மூன்றும் மிகப் பிரதானவையாகும். இதற்கு மேலதிகமாக ஒழுக்காற்றுக் குழு (Disciplinary Committee). உள்ளக மதிப்பீட்டுக் குழு, கட்டாயக் கல்விக் குழு, பாட அபிவிருத்திக் குழு போன்றவையும் கட்டாயம் அமைக்கப்பட வேண்டிய குழுக்களாகும்.
• மேற்குறிப்பிட்ட மூன்று மிகப் பிரதானமான குழுக்களின் அமைப்பு, செயற்பாடுகள் தொடர்பாக பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட பண்புரீதியான, அளவுரீதியான, கட்டமைப்பு ரீதியிலான அபிவிருத்திக்கான திட்டமிடல்கள் மற்றும் பெறுகைச் செயற்பாடுகள் தொடர்பான சுற்றுநிருபம் மற்றும் கைநூலில் (சுற்றறிக்கை இலக்கம் 26/2018 மற்றும் 19/2019) தெளிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இங்கு சுருக்கமாக அவ்விபரங்களை குறிப்பிடுவது பொருத்தமானதாக அமையும்.
பாடசாலை முகாமைத்துவக் குழு (School Management Committee – SMC )
————————————————————————————————–
• பாடசாலை முகாமைத்துவக் குழு -அதிகூடியதாக 12 அங்கத்தவர்களைக் கொண்டதாக வருடாந்தம் அமைக்கப்படல் வேண்டும். அதிபர் பதவிவழித் தலைவர் ஆவதோடு, இதன் அங்கத்தவர்கள், பிரதி, உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், பாட இணைப்பாளர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பொருளாளர், பாடசாலை அபிவிருத்திச் சங்க ஆசிரிய உறுப்பினர்கள் ஆகியோரிலிருந்து பொருத்தமான வகையில் தெரிவுசெய்யப்படல் வேண்டும்.
• பாடசாலை அபிவிருத்திச் சங்க பொருளாளர் தவிர்ந்த அங்கத்தவர்களில் ஒருவர் குழுவின் செயலாளராக நியமிக்கப்படல் வேண்டும். முகாமைத்துவக் குழுவின் அங்கத்தவர்களில் ஒருவர் ஆவணங்களைப் பேணுவதற்காக செயலாளராக நியமிக்கப்படல் வேண்டும்.
• பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினால் தயாரிக்கப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்ட திட்டங்களை பாடசாலையில் அமுல்படுத்தி அதன் நோக்கங்களை அடைவதே இக்குழுவின் பிரதான கடமையாகும்.
• தங்களுக்குள்ள அதிகார வரையறைக்குள் இருந்து, அத்திட்டங்களை அமுல்படுத்தத் தேவையான தீர்மானங்களை எடுத்து தேவையான முன்னெடுப்புக்களை வெற்றிகரமாக மேற்கொள்வதில் இக்குழுவின் பங்களிப்பு மிக அவசியமானது.
• உதாரணமாக, வருடாந்த அபிவிருத்தித் திட்டத்தில் உள்ள கல்விச் சுற்றுலாக்களை மேற்கொள்ளுதல் எனும் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக, சுற்றுலா எங்கு, எவ்வாறு, எப்போது யார் யார், எத்தனை நாட்கள் செல்வது போன்ற விடயங்களை ஆராய்ந்து தீர்மானம் எடுத்து அதற்கு பொருத்தமான உப குழுக்களை அமைத்து பொருத்தமான வழிகாட்டல் மூலமும், தேவையான உதவிகளை பெற்றுக்கொடுப்பதன் மூலமும் வெற்றிகரமான கல்விச் சுற்றுலாக்களை ஒழுங்கமைக்க முடியும்.
• இவ்வாறாக பாடசாலையின் அனைத்து வருடாந்த அமுலாக்கல் திட்டங்களையும், வேறு மேலதிக செயற்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவது இக்குழுவின் கடமையும் பொறுப்புமாகும்.
பாடசாலை முகாமைத்துவக் குழு (School Management Committee -SMC) தொடர்பான சமகாலப் பிரச்சினைகள் / பிழையான நடைமுறைகள்.
———————————————————————————————————————
• பல பாடசாலைகளில் SMC பெயரளவில் மட்டுமே காணப்படுகிறது.
• அதிகமான பாடசாலைகளில் SMC அங்கத்தவர்களின் எண்ணிக்கை 12 ஐ விட அதிகமாகக் காணப்படுகிறது.
• அவ்வாறே SMC இல் பாடசாலையின் ஏனைய குழுக்களின் தலைவர்கள் அங்கத்துவம் வகித்து வருகின்றனர். (உதாரணம் : ஒழுக்காற்றுக்குழுத் தலைவர், பரீட்சைக்குழுத் தலைவர் போன்றவர்கள்)
• இன்னும் பல பாடசாலைகளில் SMC எதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படை விடயங்கள் தொடர்பாகக் கூட அதன் உறுப்பினர்களுக்கு தெளிவானதொரு விளக்கம் இல்லை.
• தான் SMC இன் ஒரு அங்கத்தவர் என்று தெரியாத நிலையில் பலர் அதில் அங்கத்துவம் வகித்து வருகின்றனர்.
• கணக்காய்வுகளில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தேவைப்படும் SMC தீர்மானங்களை பொய்யாக எழுதி, ஒருவரே அனைத்து அங்கத்தவர்களினதும் கையொப்பங்களை வெவ்வேறு பேனைகளைப் பயன்படுத்தி இட்ட சம்பவங்களும் அவதானிக்கப்பட்டுள்ளன.
• SMC தீர்மானங்களின் கூட்டறிக்கைகளில் கணக்கறிக்கை விபரங்களை குறிப்பிடுதல்.
• SMC இன் முக்கியத்துவம் பற்றி பாடசாலை சமூகத்தினருக்கு போதிய விளக்கம் வழங்கப்படாதிருத்தல்.
• அதிபரானவர் SMC ஊடாக எடுக்கப்பட வேண்டிய பல தீர்மானங்களை, தன்னிச்சையாக அல்லது தனக்கு நெருக்கமானவர்களுடன் மாத்திரம் கலந்துரையாடி நடைமுறைப்படுத்தல்.
• SMC இல் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், அன்றைய தினம் சமூகமளிக்காத ஏனைய அங்கத்தவர்களுக்கு தெரிவிக்கப்படாமலிருத்தல்.
• SMC இல் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு மாற்றமாக பாடசாலை செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல். (உதாரணமாக பாடசாலை மட்ட பரீட்சைகளை / புதிய மாணவர் அனுமதி நடாத்த தீர்மானிக்கப்பட்ட திகதிகளை தன்னிச்சையாக மாற்றுதல் )
• SDEC இன் அனுமதிக்கப்பட்ட திட்டங்களை அமுல்படுத்துவதே SMC இன் கடமையாகும். எனவே SDEC இன் கூட்டம் நடைபெற்ற பின்னரே அது தொடர்பாக SMC இல் கலந்துரையாடப்படல் வேண்டும். ஆனால், அநேக பாடசாலைகளில் இந்நடைமுறை தலைகீழாக நடைபெற்றுவருகின்றது. அதாவது SMC இல் செயற்திட்டங்களை தீர்மானித்து, SDEC ஐ அதனை பாடசாலையில் செயற்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்ற நிலைமைகள் காணப்படுகின்றன.
• SMC அங்கத்தவர்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னுரிமைகள் பற்றி போதிய கவனம் செலுத்தாதிருத்தல். (உதாரணமாக மலசலகூட சுத்திகரிப்புத் திட்டம் தேவைப்பாடாக இருக்க, பூந்தோட்டங்களை அழகுபடுத்தும் திட்டத்தில் நேரத்தையும், பணத்தையும் வீண்விரயம் செய்தல்)
• SMC அங்கத்தவர்களுக்கென பாடசாலையில் அலுவலகம் ஓன்று ஒதுக்கப்படல்.
• SMC தீர்மானங்களிலும், செயற்திட்ட நடைமுறைப்படுத்தலிலும் பணிப்பகிர்வுகள் பொருத்தமாக இடம்பெறாதிருத்தல் அல்லது பாரபட்சம் காட்டுதல். (உதாரணமாக பழிவாங்கலை நோக்காகக் கொண்டு குறிப்பிட்ட ஆசிரியர் அல்லது கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கு அவர்களுக்கு பொருத்தமில்லாத அல்லது இயலாத பொறுப்பு ஒன்றை வழங்கி நெருக்கடிகளை ஏற்படுத்தல். அவ்வாறே கற்பித்தலில் இருந்து விடுவித்து அனாவசியமான, பொருத்தமில்லாத, இலகுவான, வெறுமனே காலம் கடத்தக் கூடியவாறான செயற்பாடுகளை தனக்கு நெருக்கமான ஆசிரியருக்கு வழங்குதல்)
• SMC இன் தீர்மானங்களை பாடசாலை ஆளணியினர் புறக்கணித்து, தன்னிச்சையாக செயற்பட்டு வருதல். இதற்கான பொறுப்பினை அதிபரே ஏற்று அனைவரையும் ஒருங்கிணைத்து செயற்படுத்தும் தலைமைத்துவத்தை வகிக்க வேண்டும்.
• SMC இன் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் பாடசாலை சங்கங்கள் அநாவசியமாக தலையிடுதல். (உதாரணமாக, பாடசாலை ஒன்று புல் வெட்டும் இயந்திரம் (mowing machine) ஒன்றை கொள்வனவு செய்ய முயன்ற போது அதனை தாங்கள் பெற்றுத்தருவதாக பழைய மாணவர் சங்கம் கூறிய போதும் உரியகாலத்தில் அதனை பெற்றுக்கொடுக்கவில்லை. தற்போது பொருட்களின் விலையேற்றம் காரணமாக பாடசாலையிலும் போதிய நிதி இல்லாத காரணத்தினால் இதுவரை அதனைக் கொள்வனவு செய்ய முடியவில்லை.)
• SMC இன் தீர்மானத்தின் மூலம் பொறுப்பு வழங்கப்பட்ட பாடசாலை உபகுழுவில் பொறுப்பளிக்கப்பட்டவர்களின் செயற்பாடுகளில் SMC அங்கத்தவர்கள் அடிக்கடி தலையிட்டு குழப்பங்களை ஏற்படுத்துதல்.
• SMC கூட்டங்கள் மாதாந்தம் நடைபெறாமையும் அதில் முன்னேற்ற மீளாய்வுகள் செய்யப்படாமையும்.
• நிதிமுகாமைத்துவத்தை கருத்தில்கொள்ளாது செயற்பாடுகளை முன்னெடுத்தல்.
(உண்மைச் சம்பவம் : SMC அங்கத்தவர் ஒருவரிடம் ஒரு பாரிய தொகையினை கடனாக பெற்று பாடசாலை அலுவலக தளபாடத்தொகுதி ஒன்றினை புதுவருடகால விலைக்கழிவு வழங்கப்படும் என்பதற்காக ஏப்ரல் மாதத்தில் அவசர அவசரமாக ஒரு பாடசாலை கொள்வனவு செய்தது. ஆனால் பாடசாலையால் கடனை அடைக்க எதிர்பார்க்கப்பட்ட வரவுத் தலைப்பில் போதிய பணம் சேரவில்லை. காலம் கடந்து போனதால் கடன்கொடுத்த அங்கத்தவர் அதிபருடனும், ஏனைய SMC அங்கத்தவருடனும் முரண்பட்டு இறுதியில் கைகலப்பாகி, தற்போது பாடசாலைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.)
• SMC கூட்டத் தீர்மானங்கள் சரியான முறையில் எழுதப்பட்டு பேணப்படாமை.
• SMC தீர்மானங்கள் பற்றி ஆசிரியர்சங்க கூட்டங்களில் தெளிவுபடுத்தப்படாமை.
• வருடாந்த முன்னேற்ற அறிக்கை தயாரிப்பதிலும், அதனை பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் சமர்ப்பிப்பதிலும் SMC இன் அலட்சியப்போக்கு.
மேற்படி பிழையான நடைமுறைகளையும், பிரச்சினைகளையும் தவிர்க்க வேண்டுமாயின் முதலில் பாடசாலைக்குப் பொருத்தமான வருடாந்த அமுலாக்கல் திட்டமும், வரவுசெலவுத்திட்டமும் தயாரிக்கப்படல் வேண்டும். அதன் செயற்பாடுகளை ஒழுங்கு முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை அதிபரானவர் வழிநடாத்த வேண்டும். தேவையற்ற திட்டங்களை தவிர்ப்பது சாலச் சிறந்தது. அநேக அதிபர்கள் தங்களின் பெயரும் புகழும் பாடசாலையிலும், சமூகத்திலும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக பௌதீகவள அபிவிருத்தியில் தங்களின் சேவைக்காலத்தை விரயம் செய்கின்றனர். அதனை விடுத்து மாணவரின் அடைவுமட்டம், இணைப்பாடவிதான செயற்பாடுகள், மாணவர் நலனோம்பல்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதுவே எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளை உருவாக்கும்.
பாடசாலை பெறுகைக் குழு ( School Procurement Committee – PC )
—————————————————————————————–
• அதிபரை தலைவராகக் கொண்டு முதலாம் உறுப்பினராக பிரதி /உதவி அதிபர் / பகுதித் தலைவர் / சிரேஷ்ட ஆசிரியரும் இரண்டாம் உறுப்பினராக பாடத்திற்குரிய சிரேஷ்ட ஆசிரியர் ஒருவர் அல்லது தேவைக்கேற்ப சிலரை நியமிக்கலாம். (உதாரணமாக கணித உபகரணக் கொள்வனவிற்காக கணிதப்பாட சிரேஷ்ட ஆசிரியரையும், விஞ்ஞான ஆய்வுகூடப் பொருட்கள் கொள்வனவிற்காக விஞ்ஞானப்பாட சிரேஷ்ட ஆசிரியரையும் என்றவாறு நியமிக்க முடியும். 03 அங்கத்தவர்கள் ஆகக் குறைந்தது இதில் காணப்படல் வேண்டும்.
• பாடசாலை மாணவர் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு, 26/2018 ஆம் இலக்க கல்வியமைச்சின் சுற்றுநிருபத்தின் 11.0 ஆம் தலைப்பான செலவின எல்லைகளில் 11.1 அட்டவணையில் காட்டப்பட்டுள்ளவாறு பொருத்தமான செலவின எல்லையினுள் பொருட்கள், சேவைகள் கொள்வனவு, நிர்மாண / திருத்த வேலைகளை அங்கீகரிக்க இக்குழுவிக்கு அதிகாரமுண்டு.
• தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவினால் ஆண்டின் மூன்றாம் தவணையில் தயாரித்து வழங்கப்படும் தேவைப்பட்டியலை கொண்டு பாடசாலையின் தேவைக்கேற்ப முன்னுரிமைப் பட்டியலை தயாரித்து அமுலிலுள்ள நிதியாண்டின் ஜனவரி மாதத்திற்குள் அங்கீகரித்தல் வேண்டும். அத்துடன் களஞ்சிய மற்றும் நிதி வசதிகளை கருத்தில் கொண்டு பொருட்களை மொத்தமாக அல்லது பகுதியாக கொள்வனவு செய்வது தொடர்பாக தீர்மானம் எடுத்தல் வேண்டும்.
• சந்தை விலை கோரல்களுக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் அல்லது வலயக் கல்வி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வழங்குனர்கள் அல்லது வானவில் வர்ணப்பக்க பட்டியலில் உள்ள பிரசித்தி பெற்ற வியாபாரிகள், அல்லது www.rainbowpages.lk இணையத்தளத்தின் மூலம் ரூபா 500000 க்கு குறைவான கொள்வனவுகளுக்கு மூன்று முத்திரையிடப்பட்ட விலைமனுக்களையும், ரூபா 500000 க்கு கூடுதலான கொள்வனவுகளுக்கு ஐந்து முத்திரையிடப்பட்ட விலைமனுக்களையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
• விலைமனுக்கள் பாடசாலை பெறுகைக் குழு முன்னிலையில் திறக்கப்படல் வேண்டும். கொள்வனவு செய்வது தொடர்பான தீர்மானத்தை தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைக்கமைய எடுத்து பாடசாலை பெறுகைக் குழு கூட்டறிக்கைக்காக பயன்படுத்தப்படும் “CR” புத்தகத்தில் தெளிவாக குறிப்பிட்டு குழு அங்கத்தவர்கள் ஒப்பமிட்ட பின்னர் கொள்வனவுக் கட்டளைக் கடிதம் மூலம் தெரிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு கட்டளை பிறப்பித்தல் வேண்டும்.
• மருந்து வகைகள், எரிபொருள், உதிரிப்பாகங்கள் போன்ற பொருட்களை கொள்வனவு செய்யும் விசேட சந்தர்ப்பங்களில் தனி விநியோகஸ்தரிடமிருந்து நேரடி ஒப்பந்த முறை மூலம் கொள்வனவூ செய்ய முடியும்.
• பாடசாலை மூலம் மூலபொருட்களை மாத்திரம் வழங்கி பெற்றோரின், பாடசாலைச் சமூகத்தின் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தல், பாடசாலை பெறுகைக் குழுவினது பணியாகும்.
தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு – ( Technical Evaluation Committee – TEC )
——————————————————————————————–
தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவின் உள்ளடக்கம் : –
(i) பிரதி / உதவி அதிபர் ஒருவர் / பிரிவுப் பொறுப்பாளர் – தலைவர்
(ii) சிரேஷ்ட ஆசிரியர் – முதல் உறுப்பினர்
(iii) உரிய துறையின் / விடயம் தொடர்பான அறிவுடைய / விளக்கம் கொண்ட ஆசிரியர் – இரண்டாம் உறுப்பினர்
• பிரிவுப் பொறுப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட தேவைப்பட்டியலை ஆராய்ந்து முன்னுரிமைப்படுத்தி பொருட்களுக்கான விவரக் குறிப்பு தரத்தினை தயாரிக்க பாடசாலை பெறுகைக் குழுவிற்கு ஆண்டிறுதிக்குள் சமர்ப்பித்தல் வேண்டும்.
• பெறப்பட்ட விலை மனுக்களை பரிசீலனை செய்தல். பொருந்தாத, முத்திரை இடப்படாத, ஒப்பமிடப்படாத, வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்ட விலைமனுக்களில் உரிய காரணம் குறிப்பிடப்பட்டு அங்கத்தவர்களால் ஒப்பமிடப்படல் வேண்டும்.
• விலை மனுக்களில் கணிப்பீடுகளை சரி பார்த்தல் வேண்டும். இதன் போது தவறுகள் இருப்பின் திருத்திய பின் குழு அறிக்கையில் குறிப்பிட வேண்டும். விலை மனுவின் மொத்த தொகைகேற்ப குறைந்த தொகை உடைய விலை மனு முதலில் வைக்கப்படுமாறு விலை மனுப் படிவங்கள் ஏறுவரிசைப்படுத்தப்படல் வேண்டும்.
• அவற்றில் பொருத்தமான விலை மனுக்களை உரிய காரணங்களை குறிப்பிட்டு பரிந்துரை செய்தல் வேண்டும்.
• பொருட்களை கொண்டுவருவதற்கான போக்குவரத்து செலவு விலை மனுவின் ஒரு அங்கமாக குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறில்லாவிடின் நியாயமான கூலியை பாடசாலை பெறுகைக் குழுவின் தழுவல் அங்கீகாரத்துடன் அதிபரால் செலுத்த முடியும்.
• பாடசாலை நடைபெறும் நேரத்தில் பொருட்களைப் மதிப்பீடுசெய்து பொறுப்பெடுக்கும் வகையில் விநியோகஸ்தர்களுடன் ஒழுங்குகளை மேற்கொள்ளல் வேண்டும்.
• கொள்வனவிற்காக அங்கீகரிக்கப்பட்ட விவரக்குறிப்பு மற்றும் தரத்தினை பரிசீலனை செய்து அவற்றிற்கு உட்படாத பொருட்களை பொறுப்பெடுக்காது திருப்பி அனுப்புவதற்கும், உரிய தரப் பொருட்களை மீளப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுத்தல்.
• பாடசாலையில் மேற்கொள்ளும் ஆலோசனைச் சேவைகளுக்காக தகைமை கொண்ட நபர்களின் தேவைக்கமைய தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைக்கமைய பாடசாலை பெறுகைக் குழுவினரால் தேர்ந்தேடுக்கப்படல் வேண்டும்.
• ஒரு கொள்வனவு தொடர்பில் ஒருவர் இரண்டு குழுவிலும் (PC and TEC) அங்கத்துவம் வகிக்கமுடியாது.
பாடசாலை பெறுகைச்செயற்பாடுகள் தொடர்பான பிழையான நடைமுறைகள் / சமகாலப் பிரச்சினைகள் (PC and TEC) ஆகியவற்றுடன் தொடர்பானது)
———————————————————————————————————————
• PC and TEC என்பன பாடசாலைகளில் முறையாக அமைக்கப்பட்டு வலயக் கல்வி அலுவலகத்தின் அங்கீகாரம் பெறப்பட்டிருப்பதில்லை.
• போதியளவூ ஆசிரியர்கள் பாடசாலையில் இருந்தபோதிலும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மேற்படி இரு குழுக்களிலும் அங்கத்துவம் வகித்தல்.
• சிரேஷ்ட ஆசிரியர்கள் PC and TEC என்பவற்றில் உள்வாங்கப்படாதிருத்தல்.
• தேவைப்பட்டியலும், முன்னுரிமைப் பட்டியலும் தயாரிக்கப்படாமல் கொள்வனவுகளை மேற்கொள்ளல்.
• உரிய செலவின எல்லைக்கு மேற்பட்ட பொருட்களை / சேவைகளை விலைமனுக்கோரல் இன்றி கொள்வனவு செய்தல். சில பாடசாலைகளில் செலவின எல்லைக்குட்பட்ட கொள்வனவுகளுக்கும் அநாவசியமாக விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.
• பதியப்பட்ட விநியோகஸ்தர்கள் தொடர்பாக கவனம் செலுத்தாது பெறுகைச் செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
• பாடசாலையின் மாணவர் விடுதியுடன் தொடர்பான அன்றாட சமையல் பொருட்களுக்கான விலைமனுக்களுக்கு பதியப்பட்ட விநியோகஸ்தர்களை பெற முடியாதிருத்தல். (உதாரணமாக, விறகு, வாழைப்பழம், மரக்கறி, தேங்காய் போன்றன….)
• சிலபொருட்கள் பதியப்பட்ட விநியோகஸ்தர்களை விட பதியப்படாத விநியோகஸ்தர்களிடம் விலை குறைவானதாகவும், தரமானதாகவும் இருத்தல். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரசாங்க நிதிக்கு (Public Funds) நட்டம் ஏற்படாத வகையில் சாதகமான முறையில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.
• பாடசாலைகளின் பெறுகை, நிர்மாண, புனரமைப்பு நடவடிக்கைகளின் போதான கொள்வனவுகளில் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் / உத்தியோகத்தர்கள் தலையிட்டு அவர்கள் குறிப்பிடும் நிறுவனங்கள்/ உரிமையாளர்களிடம் கொள்வனவு செய்யும்படி நிர்ப்பந்தித்தல். (தரகுப்பணம் அல்லது தனிப்பட்ட நலன்களை நோக்காகக் கொண்டு இவ்வாறான நிர்ப்பந்தங்களை ஏற்படுத்துகின்றன)
• விலையேற்றம், பொருட்தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறையால் ஏற்பட்ட போக்குவரத்துப் பிரச்சினைகளால் பாடசாலைகளின் பெறுகைச்செயற்பாடுகள் பெரிதும் தடைப்படுதல்.
• போலியான விலைமனுக்களை பெற்று கொள்வனவுகளை மேற்கொள்ளல். (பிரபல பாடசாலையொன்றில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றிற்கான பொருட்கள் / சேவைகளுக்காக விலைமனுக்கள் போலியாக பாடசாலையிலேயே தயாரிக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டு கோவைப்படுத்தப்பட்டிருந்தமை கணக்காய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக பல்வேறு நிறுவனங்களின் இறப்பர் முத்திரைகளும் திருட்டுத்தனமாக தயாரிக்கப்பட்டிருந்தது. அதனை அதிபர் ஏற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.)
• முத்திரை வைக்கப்படாமல் விலைமனுக்கள் பெறப்படல். பதிவுத் தபாலிலேயே விலைமனுக்கள் அனுப்பிவைக்கப்படல் வேண்டும். அதற்குரிய கடித உறையுடன் விலைமனுக்கள் கோவைப்படுத்தப்படல் வேண்டும்.
• மேற்படி நிபந்தனைகளை நிறைவேற்றும் முகமாக சில அதிபர்கள் வெற்றுக் கடித உறைகளை வெவ்வேறு தபால் நிலையங்களில் இருந்து தபாலில் பாடசாலைக்கு அனுப்பிவிட்டு அவற்றை போலியான விலைமனுக்களுடன் சேர்த்து கோவைப்படுத்தியிருந்தமையும் கணக்காய்வின் மூலம் கண்டறியப்பட்டிருந்தது.
• PC and TEC குழு அங்கத்தவர்கள் தங்கள் உறவினர்களின் நிறுவனங்களில் அல்லது தனது மனைவியின்/ பிள்ளைகளின் /சகோதரர்களின் பெயரில் நடாத்தும் நிறுவனங்களில் பொருட்கள் / சேவைகளை அதிக விலையுடன் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல். (Conflict of Interest)
• பாடசாலை பெறுகைச்செயற்பாடுகளில் தரகுப்பணம் (Commission) பெறுதல், மிகப் பிரதான ஊழலாக கண்டறியப்பட்டுள்ளது.
• அதிக விலைக்கு தரம் குறைந்த பொருட்களை கொள்வனவு செய்து, அதில் அதிகளவான தரகுப்பணம் பெறப்பட்டு வருகின்றது.
• போலியான பொருட் கொள்வனவுகள் மேற்கொள்ளப்படுதல். (உண்மைச்சம்பவம் : பாடசாலை ஒன்றில் மடிக்கணினி ஒன்று 270000 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டதாக சகல ஆவணங்களும் பேணப்பட்டிருந்தன. அது தொடர்பான விபரங்கள் பொருட் பதிவேட்டிலும் பதியப்பட்டிருந்தது. உரிய மடிக்கணினியை கணக்காய்வின் போது காண்பிக்கத் தவறினர். இது தொடர்பாக கணக்காய்வு ஐயவினா (Audit Query) எழுப்பப்பட்ட போது, பெறுகைக் குழுவினர் அதன் அங்கத்தவர் ஒருவரின் தனிப்பட்ட மடிக்கணினியை காண்பித்தனர்;. அதன் தரவு விவரங்களின் வேறுபாட்டை கொண்டு இவ்வுண்மை கண்டறியப்பட்டது. அதற்கிடையில் கொள்வனவு செய்யப்படாத மடிக்கணினி தொலைந்து போனதாக பாடசாலை சம்பவத்திரட்டுப் புத்தகத்தில் (Log Book) குறிப்பிட்டு, பொலீசிலும் முறைப்பாடு செய்யப்படடிருந்தது.)
• கொள்வனவு செய்யப்பட்ட சில உபகரணங்களை அதிபரும், மேற்படி குழுக்களின் அங்கத்தவர்களும் தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு உபயோகித்தல். (பாடசாலை முடிவடைந்த பின்னரும், பாடசாலை விடுமுறை தினங்களிலும், பாடசாலைக்கு சொந்தமான “Wi-Fi Router” , மடிக்கணினிகள், printer போன்றவற்றை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று தனிப்பட்ட தேவைகளுக்காக உபயோகித்தல். அதேநேரம் பலர் பாடசாலைக்காக தங்கள் தனிப்பட்ட சொந்த உபகரணங்களை உபயோகப்படுத்தியும் வருகின்றனர். இவ்விரண்டும் பொருத்தமற்ற நிலைமைகளாகும். அனாவசிய பிரச்சினைகளையும் உருவாக்கும்.)
• குறிப்பிட்ட சுற்றுநிருபங்களினூடாக வழங்கப்படும் நிதிக்கொடைகளுக்கான கொள்வனவு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளுக்கமைய செய்யப்படுதல் வேண்டும். (உதாரணம் நூலக நூல் கொள்வனவு, பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட புத்தாக்க நிதி (SBIG) போன்றவை…) ஆனால் அதற்கு மாற்றமாக அந்நிதிகளில் PC & TEC குழுக்கள் தவறான முறையிலும், காலம் தாழ்த்தியும் கொள்வனவு செய்துவருவதாக அறியக் கிடைக்கின்றது. (உண்மைச்சம்பவம் : நூலக நூல் கொள்வனவிற்காக வழங்கப்பட்ட நிதியில் 15% விலைக்கழிவுடன் நூல் கொள்வனவு இடம்பெற வேண்டும் எனவும், நிதி கிடைக்கப்பெற்று இரு மாத காலத்தினுள் கொள்வனவு இடம்பெற வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட பாடசாலையில் அந்த நிதி கிடைக்கப்பெற்று ஆறுமாத காலமாக தேக்கி வைக்கப்பட்டிருந்த பின்னர் விலைக்கழிவின்றி புத்தகக் கொள்வனவிற்காக 50% ஆன நிதி செலவழிக்கப்பட்டிருந்ததுடன், மிகுதியான 50% நிதியில் பாடசாலை மின்சாரக் கட்டணம் செலுத்தப்பட்டிருந்தது.)
மேற்படி பிழையான நடைமுறைகள் / பிரச்சினைகளில் அநேகமானவை விளக்கக் குறைவினாலும், அலட்சியத்தினாலும், இடம்பெற்று வருகின்றன. அவற்றை தவிர்க்க சரியான வழிகாட்டல்கள் மேற்படி குழுக்களுக்கு வலயக் கல்வி அலுவலகத்தால் வழிகாட்டல்களும், ஆலோசனைகளும் வழங்கப்படவேண்டியதுடன், தொடர் கண்காணிப்பும் அவசியமாகும். அதை விடுத்து வேலியே பயிரை மேய்வதற்கு உடந்தையாக இருக்கக்கூடாது.
மேற்படி பிரதான குழுக்கள் தவிர பாடசாலையில் தாக்கம் செலுத்தும் ஏனைய சில உள்ளகக் குழுக்கள் பற்றிய சுவாரசியமான விடயங்களை அடுத்த தொடரில் எதிர்பாருங்கள்