• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home கட்டுரைகள்

கற்பித்தல் ஒரு கலையா அல்லது விஞ்ஞானமா அல்லது ஒரு தார்மீக செயற்பாடா?

January 2, 2023
in கட்டுரைகள், TEACHING
Reading Time: 2 mins read
கற்பித்தல் ஒரு கலையா அல்லது விஞ்ஞானமா அல்லது ஒரு தார்மீக செயற்பாடா?
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

கற்பித்தல் ஒரு கலையா அல்லது விஞ்ஞானமா அல்லது ஒரு தார்மீக செயற்பாடா?

சிறந்த ஆசிரியர் எனப்படுபவர் யார்?

Is teaching an art or science or a moral act?

Who is the best teacher?

S.Logarajah SLTES, Lecturer,

Batticaloa National College of Education.

loga

 

கற்பித்தல் வரையறை

கற்பித்தல் என்பது “அறிவு அல்லது திறமையை வழங்குதல், அறிவுறுத்தல் அல்லது படிப்பினைகளை வழங்குதல், ஊக்குவித்தல் என்பதாகும். (ஒக்ஸ்போட் அகராதி) இந்த பொருளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் கற்பித்தல் என்பது கற்றலை எளிதாக்கும் ஒரு செயற்பாடு என்று நாம் கூறலாம்.

ஆசிரியர் ஒரு கற்பிப்பவர், கற்பவர்களின் கல்வித் தேவைகளை அவர்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு முக்கியமான மற்றும் நேரான பாத்திரத்தை வகிக்கும் வகையில் பூர்த்தி செய்ய முயல்கின்றார். எனவே ஒரு பெரிய பொறுப்பு ஆசிரியர்களின் தோள்களில் உள்ளது.

ஆசிரியரின் பங்கு பன்முகத் தன்மை கொண்டது. கற்பவர்கள் ஆசிரியரை தங்களின் இலட்சிய நபராக, மாதிரியாக, வழிகாட்டியாக, ஆற்றுப்படுத்துனராக, மேற்பார்வையாளராக பல கோணங்களில் பார்க்கின்றனர். ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சி அதாவது கற்பவரின் உடல், உள, மனவெழுச்சி, சமூக, தார்மீக வளர்ச்சி என்பன ஆசிரியரின் போதனையில் உள்ளன.

கற்பித்தல் மாணவர்களின் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஓர் ஆசிரியராக நீங்கள் ஒருவரின் பாடம்; சார்ந்த அறிவையும், அவரின் மனதையும், ஆளுமையையும் வளர்ப்பதில் பங்களிப்புச் செய்யலாம். கற்பித்தல் என்பது நம்ப முடியாத வெகுமதியாகும். நல்ல ஆசிரியர்கள் எல்லா இடங்களிலும் தேவை. பாடசாலை மற்றும் கல்லூரி வகுப்பறைகளில் மாணவர்களுக்கு கல்வியூட்டவும், பணிசெய்யும் இடங்களில் பெரியவர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு கற்பிக்கவும் நல்ல ஆசிரியர்களின் தேவைப்பாடு அதிகமாகவே உணரப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள்; ஒருவருக்கொருவர் குறிப்பிட்ட பாடத்தில் அல்லது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்காக ஒருவரைப் பயிற்றுவிக்கலாம். இருப்பினும் பிறருக்கு கற்பித்தல் என்பது கடினமானது. அது சோர்வு, மன அழுத்தம் என்பனவற்றை தரக் கூடியதாக இருக்கலாம். மாணவர்களின் மனங்களும், ஊக்கமும் பெரிதும் வேறுபடுகின்றன, ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுடன் இணைவதற்கு பல வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். கற்பித்தல் கடினமான பணி என்பதால் எல்லா வேளைகளிலும் அங்கிகரிக்கப்படுவதில்லை. பாட அறிவுடன் ஆசிரியர்களுக்குத் தேவையான வேறு தகைமைகளும் ஆசிரியர்களுக்கு உள்ளன.

 

கற்பித்தல் ஒரு கலையாக

எலியட் ஈஸ்கின்னர் தனது “கல்வி கற்பனை” (1985) என்ற புத்தகத்தில் கற்பித்தல் ஒரு கலை எனக் குறிப்பிட்டுள்ளார். கற்பிப்பதை ஒரு கலையாகக் கருதுவதற்கு நான்கு காரணங்களைக் கூறுகின்றார். அவை பின்வருமாறு:

I.கற்பித்தல் திறமையுடனும் கருணையுடனும் செய்யப்படலாம், இதனால் ஆசிரியர்கள் மற்றும் கற்பவர்கள் இருவரும் முழுச் செயன்முறையையும் அழகாக அனுபவிக்கின்றார்கள்.

II.ஒரு ஆசிரியரின் செயற்பாடுகளின் இயக்கவியல் தன்மை வெவ்வேறு காரணங்கள், மற்றும்  நிச்சயமற்ற தன்மைகளால் செல்வாக்கிற்கு உட்பட்டு அதற்கேற்ப வேறுபடுகின்றன. அவை கடுமையான செயற்பாடாக இருப்பதில்லை. அதிகாரமிக்க செயற்பாடாக அமைவதில்லை.

III.நல்ல அழகியல் உணர்வு கொண்ட ஆசிரியர்கள் பொதுவாக கற்பிக்கப்பட்ட விடயத்தை பொருட்படுத்தாமல் அவர்களின் கற்பித்தல் செயற்பாட்டில் அழகியல் உணர்வையும் இணைத்துக் கொள்கிறார்கள்.

  1. கற்பித்தலின் முடிவு முன்கூட்டியே தீர்மானிக்கப்படவில்லை, இது பெரும்பாலும் செயல்பாட்டில் உருவாக்கப்படுகின்றது. இது ஒரு அழகியல் அனுபவத்தின் ஆதாரமாக, உணர்வுகளின் உயர்வையும் கட்டுப்பாட்டையும் சார்ந்து ஒரு தீர்க்கமான அல்லது சாகச நடவடிக்கையாக மற்றும் வெளிப்படையான முனைகளைத் தேடுவது போல கற்பித்தல் ஒரு கலையாகக் கருதப்படலாம்.

ஒவ்வொரு தனிப்பட்ட ஆசிரியரும் அவருடைய திறன், ஆற்றல்கள், ஆளுமை மற்றும் அறிவுக்கு ஏற்ப கற்பிக்கின்றார். எடுத்துக்காட்டாக “பூவின் அமைப்பு” பற்றி கற்பிக்கும் போது ஒரு ஆசிரியர் பாரம்பரிய முறையில் அதாவது கலிக்ஸ், கொரோலா, அன்ட்ரோசியம், மற்றும் கினோசியம் என அதை நான்கு சுழல்களைக் கொண்டிருப்பதையும் மற்றும் அவற்றின் அமைப்பு மற்றும் செயற்பாடுகள் பற்றியும் விளக்கலாம். மற்றொரு ஆசிரியர் அதை ஒரு சுவாரசியமான முறையில் மிகவும் அழகியல் உணர்வோடு விளக்கலாம்.  ஆசிரியர் வண்ண மலர்களைக் கொண்ட ஒரு செடியை மாணவர்களுக்கு காட்டுகின்றார். மலரின் நிறமும் அழகும் கற்பவரின் கவனத்தை ஈர்க்கும். ஒவ்வொன்றாக, ஒவ்வொரு பகுதியையும் பூவின் காட்சி அழகால் காட்டலாம். மற்றும் விளக்கலாம். அதன் கட்டமைப்பை அழகாக விளக்கலாம். இங்கு ஆசிரியரின் செயற்படுதன்மை கற்பிப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். ஆசிரியரின் குரல், உடல்மொழி மற்றும் கவர்ச்சியான ஆளுமை ஆகியவை கற்பித்தல் செயன்முறைக்கு அழகு சேர்க்கின்றன.

கலைஞர்கள் தங்கள் கலைகளில் சிறந்து விளங்குகிறார்கள். இதேபோல், அழகியல் உணர்வு கொண்ட ஒரு ஆசிரியர் ஒரு பாரம்பரிய முறையில் கற்பிப்பதற்குப் பதிலாக தனது பலத்தை எடுத்துக் காட்டுகிறார். கற்பவர்களுக்கு வெற்றிகரமாக கற்பிக்க ஆசிரியர் தனது நேரான மற்றும் திறமைகளைப் பயன்படுத்துகின்றார். இங்கு கற்பிப்பதில் ஒரு நெகிழ்வுத்தன்மை உள்ளது. ஆசிரியர் மற்றும் கற்பவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் உள்ளது. ஆசிரியர் விமர்சனம் மற்றும் பாராட்டு இரண்டையும் ஏற்றுக் கொண்டு படைப்பாற்றலுக்கான வாய்ப்பை அளிக்கிறார். இது தனிப்பட்ட தொடர்பை அதிகம் கொண்டுள்ளது அல்லது மனிதநேய அணுகுமுறை கடைப்பிடிக்கப் படுவதாக நாம் கூறலாம்.

 

எனது மாணவர் வாழ்க்கை அனுபவத்தை இங்கே கூறுகின்றேன்.

வரலாறு பாடம் என்றாலே நம்மில் பலர் சலித்துக் கொள்வதைக் காண்கின்றோம். ஆனால் அதிஸ்டவசமாக எனக்கு 10ஆம் வகுப்பு கற்கும் போது மிகவும் புத்திசாலித்தனமான வரலாற்று ஆசிரியர் ஒருவர் கிடைக்கப்பெற்றார். பாரம்பரிய முறையில் வரலாறு படிக்கும் மனநிலை எமக்கு இருக்கவில்லை. இதனால் அவ்வாசிரியர் வருவதற்கு முன்பு வரலாற்று பாடத்தில் அரட்டை அடிப்பதே எமது வேலையாக இருந்தது. அவர் முதன் முறையாக வகுப்பிற்குள் வந்தபொழுது நாங்கள் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து எம்மை நோக்கி புன்னகைத்து விட்டு கதை கூறுவது உங்களுக்கு பிடிக்கும் போல என்று கேட்டார், நாமும் உற்சாகமாக  ஆம் சேர் என்றோம்.  பண்டைய இராசதானிகள், உலகப்போர், பெஸ்டன் தேனீர் விருந்து போன்றவறை அவர் எவ்வளவு எளிதில் கற்பித்தார் என்பதை நான் இப்பொழுது புரிந்து கொள்கின்றேன்.  ஒரு ஆசிரியராக பாடசாலையில் வரலாறு கற்பிக்கையிலும் சரி தற்போது கல்விக் கல்லூரியில் சமூகவிஞ்ஞானத் துறைக்குரிய விரிவுரையாளராக சமூகவிஞ்ஞான பாடங்களில் விரிவுரை நிகழ்த்தும் போதும் எனது ஆசிரியர் பயன்படுத்திய கற்பித்தல் நுட்பங்களை இன்றும் மிகவும் இலாபகமாக பயன்படுத்தி வருகின்றேன்.  உங்களுக்கும் இவ்வனுபவப் பகிர்வு உங்கள் கற்பித்தல் திறனை வளர்க்க உதவக்கூடும்.

 

கற்பித்தல் ஒரு விஞ்ஞானமாக

கற்பித்தல் ஒரு “விஞ்ஞானம்” என்று பல்வேறு கல்வியியலாளர்கள் கருதுகின்றனர். அதன் தோற்றம் 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் கல்விச் சிந்தனைகளிலிருந்து அறியப்படுகின்றது. இங்கு கற்பித்தலானது அணுகுமுறை, விஞ்ஞான விசாரணைகள், உள்ளடக்கத்தின் தர்க்கரீதியான தன்மை, அதன் முறையான பிரயோகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

கற்பித்தல் நோக்கமாக தேர்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. கற்பித்தல் திட்டம் இந்த தேர்ச்சிகளை அடைவதைச் சுற்றி வருகின்றது. இந்த தேர்ச்சிகளை அடைவதற்காக கற்பித்தல் செயன்முறை ஒரு தர்க்கரீதியான வரிசையில் ஒழுங்கமைக்கப்பட்டு பாரம்பரிய முறையில் கற்பிக்கப்படுகின்றன.

கற்பித்தல் முடிவுகளுக்கு ஆசிரியரே பொறுப்பு என்பதால் அவர்கள் தொடர்சியான கற்பித்தல் முறையிலிருந்து விலகிச் செல்ல அரிதாகவே முயற்சி செய்கிறார்கள். எனவே கற்பித்தலை நாம் விஞ்ஞானம் என்று கூறலாம்.

இது முறையானது, தர்க்கரீதியாக திட்டமிடப்பட்டு வகுப்பறையில் செயற்படுத்தப்படுகின்றது. கற்பித்தல் தொடங்குவதற்கு முன், கற்பவரில் தேவையான நடத்தை மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக நோக்கங்கள் சரி செய்யப்படுகின்றன. அனைத்துக் கருவிகள், நுட்பங்கள், மற்றும் உத்திகள் முன்பே திட்டமிடப்பட்டுள்ளன.

கல்வியின் ஒவ்வொரு அம்சத்தையும் அதாவது பாடத் தேவைகள், குழுமுறைக் கற்பித்தல், கற்பித்தல் சாதனங்களின் பயன்பாடு, மொழி ஆய்வகங்கள், அளவீடு மற்றும் மதிப்பீடு, போன்ற ஆசிரியரின் கற்பித்தல் நடத்தையை புரிந்து கொள்ள விஞ்ஞான அணுகுமுறை உள்ளது.

விஞ்ஞான ரீதியான கற்பித்தல் அணுகுமுறை நியாயமானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது, ஏனெனில் வகுப்பு மட்டத்தில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் மாற்றப்பட வேண்டும். ஒரு மனிதாபிமான அணுகுமுறை ஊக்கமளிக்கும் மற்றும் ஊக்குவிக்கும். ஆனால் இது நல்ல முறையான போதனைக்கு வழிவகுக்கும். சமீபத்திய விஞ்ஞான கல்வி அணுகுமுறைகள் அழகியல் அணுகுமுறைகளைப் போலவே பயனுள்ளதாய் இருக்கின்றன.

கற்பித்தல் ஒரு இரட்டைப் பாத்திரத்தைக் கவனிக்கின்றது, ஆசிரியர் இரண்டையும் சமப்படுத்த வேண்டும், இதனால் கல்வியின் முக்கிய நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறும்.  கற்பித்தல் பாங்கு எந்த நேரத்திலும் தேவைக்கேற்ப பரிமாற்றம் செய்யப்பட வேண்டும்.

 

கற்பித்தல் ஒரு தார்மீக செயற்பாடாக

பொதுக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டமை மற்றும் கல்வி முறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியடன் பண்புரீதியான அபிவிருத்தி என்பது கல்வியின் தெளிவான குறிக்கோளாக மாறியது. (மெக்லெலன்,1999) கல்வி பிள்ளையின்; ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைவதில் ஆசிரியருக்கு முக்கிய பங்கு உண்டு. வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,  கற்பித்தல் ஒரு தார்மீக சுமை நிறைந்த தொழில் என்று சொல்வதில் தவறில்லை.

சமூதாயத்திலும் ஆசிரியரிடத்திலும் ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது, பொதுவாக கற்பித்தல் ஒரு தொழில் போன்ற கருத்துக்களை நாம் கேட்கின்றோம்.

ஆசிரியர்கள் பணத்தை மட்டும் நோக்காகக் கொண்டு ஒழுக்கங்களைப்  புறக்கணிக்கும் ஒரு தொழிலாக கற்பித்தலை மாற்றி விட்டனர் மற்றும் அவர்கள் வகுப்பில் சரியாகக் கற்பிப்பதில்லை. தனியார் வகுப்புக்கள் மூலம் பணம் சம்பாதிப்பதையே குறியாகக் கொண்டுள்ளனர், இதனால் பாடசாலைகளில் அவர்கள் கடினமாய் உழைப்பதில்லை. மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் குறைந்தளவு ஊதியமே பெறுகின்றார்கள். வகுப்பறைச் சுழல் முற்றிலும் போதனையாக மாறியுள்ளதுடன் தார்மீக வளர்ச்சி பின்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கற்பவர்களுக்கு தார்மீக வளர்ச்சியை ஏற்படுத்த ஆசிரியர்கள் தேவையாக உள்ளனர். எனவே கற்பித்தல் செயற்பாட்டில் ஆசிரியர்கள் விழுமிய அடிப்படையிலான பயிற்சிகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

திறமையான ஆசிரியர்

திறமையான ஆசிரியராக இருப்பதன் சாராம்சம் மாணவர்களை வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வதோடு அதை செய்யவும் முடிவதாகும். பயனுள்ள கற்பித்தல் என்பது முதன்மையாக ஆசிரியர் விரும்பும் கற்றல் பேறுகளை கொண்டுவருவதில் வெற்றி பெறும் வகையில் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு கற்றல் செயற்பாட்டை அமைப்பதில் கவனம் செலுத்தவதாகும். என்ன செய்வது என்பதைத் தீர்மானிப்பதும் அதனைச் செய்து முடிப்பதும் இங்கு பிரதானமானவையாகும்.

திறமையான ஆசிரியருக்கு சில குணாதிசயங்கள் இன்றியமையாதவை என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் மதிப்பீட்டில் அக்கறை கொண்டவர்களிடையே பொதுவான உடன்பாடொன்று உள்ளது.

  • திறமையான ஆசிரியர் ஒரு புத்திசாலி
  • அவரிடம் பாடம் தொடர்பான கட்டளைகள் உள்ளன.
  • பாடத்தை மாணவர்களுடன் எவ்வாறு தொடர்புறுத்துவது என்பது அவருக்குத் தெரியும்.
  • அவரால் குறிக்கோள்களை நிறுவவும் அடையவும் முடியும்.
  • அவர் கற்பித்தல் முறைகளைத் திறம்பட பயன்படுத்துகிறார்.
  • அவரால் மாணவர்களின் நடத்தையை மாற்றியமைக்க முடியும்.
  • மாணவர் ஆர்வத்தை அதிகரிப்பதற்கும், தனியாள் வேறுபாடுகளை அனுமதிப்பதற்கும் மாறுபட்ட அறிவுறுத்தல்களை வழங்குகிறார்.
  • அவர் மாணவர்களை புரிந்து கொண்டு அவர்களை நேசிக்கிறார்.
  • அவரால் மாணவர்களை ஊக்குவிக்க முடிகிறது.
  • அவரால் கற்றலுக்கான மாணவர்களின் தயார் நிலையை துல்லியமாக அளவிட முடியும்.
  • அவர் ஒரு சிறந்த கற்பித்தல் ஆளுமை கொண்டவர்.

 

திறமையான ஆசிரியரின் பண்புகள்

  • தகவமைப்பு
  • கவர்ச்சி மற்றும் தனிப்பட்ட தோற்றம்
  • சமூகம், தொழில், மாணவர்கள் மீதான ஆர்வம்
  • கவனம் (துல்லியம், உறுதி, முழுமை)
  • கருத்தாய்வு (பாராட்டு, மரியாதை, தந்திரோபாயம், அனுதாபம், தயவு)
  • ஒத்துழைப்பு (உதவி, விசுவாசம்)
  • சார்பு நிலை ( நிலைத்தன்மை)
  • உற்சாகம் (விழிப்புணர்வு, அனிமேசன், உத்வேகம்)
  • சரளமாக பேசுதல்
  • பலம் (தைரியம், தீர்க்கமான தன்மை, உறுதித்தன்மை, கொள்கைப்பற்று )
  • நல்ல தீர்ப்பு ( விவேகம்,தொலைநோக்கு, நுண்ணறிவு)
  • ஆரோக்கியம்
  • நேர்மை
  • தொழில் (பொறுமை, விடாமுயற்சி)
  • தலைமைத்துவம் (முன்முயற்சி, தன்னம்பிக்கை)
  • காந்த விசை (அணுகுமுறை, உற்சாகம், நம்பிக்கை, நகைச்சுவை உணர்வு,
  • சமூகத்தன்மை, மகிழ்ச்சியான குரல்)
  • சுத்தம் (தூய்மை)
  • திறந்த மனப்பான்மை
  • அசல் தன்மை ( கற்பனை வளம்)
  • முன்னேறும் ஆசை (இலட்சியம்)
  • விரைவு (சரியான நேரத்தில்)
  • புதுப்பித்தல் ( பாரம்பரியம், நல்ல சுவை, அடக்கம், அறநெறி, எளிமை)
  • அறிவுசார் ஆர்வம்
  • சுய கட்டுப்பாடு (அமைதி, கண்ணியம், சமநிலை இருப்பு)
  • சிக்கனம்.

ஒரு வெற்றிகரமான ஆசிரியராக இருக்க இளஞ்சிறார்களின் மனதை ஊக்குவிப்பதற்கான ஆர்வமும் ஒவ்வொரு மாணவனும் உரிய தேர்ச்சியை அடைவதை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பும் தேவையாகிறது. ஒரு ஆசிரியர் பாடவிதான நோக்கங்களுக்கேற்ப வேலைத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புக்களைத் தயார் செய்கிறார், மாணவர்களுடன் உறவை ஏற்படுத்துவதன் மூலமும் கற்றல் வளங்களை ஒழுங்காக வைத்திருப்பதன் மூலமும் வகுப்பறையில் நேர்மறையான கற்றல் சூழலை உருவாக்குவதன் மூலமும் அவர் கற்றலை எளிதாக்குகிறார்.

வயது,  திறன், மற்றும் இயலுமைகளுக்கேற்ப சிறார்களிடம் உன்னத வளர்ச்சியை ஏற்படுத்த பொருத்தமான திறன்களையும், சமூகத் திறன்களையும் வளர்த்து வளர்பதே  ஆசிரியரின் பிரதான பணியாகும்.

ஆசிரியர் மாணவர்களின் முன்னேற்றத்தினை மதிப்பீடு செய்து அவர்களை தேசிய பரீட்சைக்குத் தயார் செய்கிறார். மாணவர்களின் அறிவை முந்தைய கற்றலுடன் இணைத்து அதை மேலும் ஊக்குவிப்பதற்கான வழிகளை உருவாக்குகிறார்.

இவ்வாறு ஆசிரியரொருவர் தனது பணிகளைச் சிறப்பாகச் செய்வதற்கு பல்வேறு திறன்களை மேம்படுத்திக் கொள்வது அவசியமாகின்றது. இத்தகைய திறன்களை மேம்படுத்திக் கொள்வதன் மூலமே ஆசிரியரொருவர் தனது பணிகளை திறம்படச் செய்து முடிக்க முடியும்.

 

சி.லோகராஜா, விரிவுரையாளர்

தேசிய கல்வியியல் கல்லூரி, மட்டக்களப்பு.

 

®®®®®®®®®®®®®®

Previous Post

21 ஆம் நூற்றாண்டுக்கான கல்வி மற்றும் கல்வி 4.0.

Next Post

New Commissioner General for Department of Examination

Related Posts

21st Century Education and Sri Lankan Schools

21st Century Education and Sri Lankan Schools

March 18, 2023
21st Century Skills and School Leaders

21st Century Skills and School Leaders –

March 16, 2023
21st Century Education

21 ஆம் நூற்றாண்டுக் கல்வி – 21st Century Education

March 12, 2023
Flipped Classroom – புரட்டப்பட்ட வகுப்பறை

Flipped Classroom – புரட்டப்பட்ட வகுப்பறை

March 12, 2023
Next Post
New Commissioner General for Department of Examination

New Commissioner General for Department of Examination

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

உயர் தர மாணவர்களுக்கு டெப் கணினிகள் – அமைச்சரவை அனுமதி

September 22, 2020

சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடம் இன்று திறந்து வைப்பு

January 17, 2019

ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலங்கை அதிபர் சேவைக்கான தடைதாண்டல் பரீட்சை

August 16, 2020
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Extreme Hot weather – Health guidelines for students
  • Soon – Grade 5 Scholarship Cut-off Marks
  • Recruitment to the Post of Primary Grade Medical Officer of the Sri Lanka Ayurveda Medical Service – 2023

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!