இலங்கையின் தேசிய மலர் அல்லி மலரா? அல்லது நீலோற்பலமா?

இலங்கையின் தேசிய மலர் அல்லி மலரா? அல்லது நீலோற்பலமா? (நில் மானல்) என்பது தொடர்பில் சுற்றாடல் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர் கௌரவ நசீர் அஹமட் தலைமையில் அண்மையில் நடைபெற்ற சுற்றாடல் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் தீப்தி யகந்தாவல மற்றும் வயம்ப பல்கலைக்கழத்தின் விவசாய மற்றும் பெருந்தோட்டமுகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் கபில யகந்தாவல ஆகியோர் பல ஆண்டுகளாக தீர்மானம் எடுக்கப்படாது சர்ச்சையில் காணப்படும் இலங்கையின் தேசிய மலர் குறித்த விடயம் தொடர்பில் நீண்ட விளக்கமளித்தனர்.

 

பேராசிரியர் யகந்தாவல முன்வைத்த கருத்துக்களின் படி 1986ஆம் ஆண்டு பெப்ரவரி 26ஆம் திகதி இலங்கையின் தேசிய மலர் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய தேசிய மலர் நீலோற்பலம் (நில் மானல்) என்பது உத்தியோகபூர்வமாக அமைச்சரவைப் பத்திரம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இருந்தபோதும் நீலோற்பலத்தை சித்தரிக்கும் விதத்தில் ஊதா நிறம் சார்ந்த அல்லி மலரின் புகைப்படமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், இது உண்மையான நீலோற்பலம் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.

1986ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தத் தவறு பேராசிரியர் உள்ளிட்ட குழுவினரால் 2010ஆம் ஆண்டு அப்போதிருந்த ஜனாதிபதி, சுற்றாடல் அமைச்சர், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மற்றும் உயிர்பல்வகைமை செயலகம் ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2015ஆம் ஆண்டு தேசிய மலர் குறித்த சரியான படம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் 2015ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சினால் சரியான மலரின் புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தபோதும், இலங்கையின் தேசிய மலரின் சிங்களப் பெயர் மானல் மலர் (அல்லி மலர்) என்றும், ஆங்கில மொழியில் புளூ வோட்டர் லில்லி என்றும் தமிழில் நிலோற்பலம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சிங்கள மொழியில் புலமை பெற்ற பேராசிரியர் விமல் ஜீ. பலகல்ல அவர்களின் நிலைப்பாட்டுக்கு அமையவே நீலோற்பலம் (நில் மானல்) என்ற பெயருக்குப் பதிலாக தேசிய மலராக மானல் (அல்லி) எனப் பெயரிடப்பட்டுள்ளது என சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது கருத்துப்படி, அல்லி என்பது உன்னதமான நீல மலர் என்பதால் தேசிய மலரின் சிங்களப் பெயரை மானெல் (அல்லி) எனப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறியதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

 

தாவர வகைப்பாட்டின் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளின்படி, அறிவியல் பெயர் மாற்றத்திற்கு உட்பட்டிருக்கலாம், ஆனால் மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட சாதாரண மக்களில் பயன்படுத்தப்படும் பொதுவான பெயர்களை மாற்றக்கூடாது என்று வலியுறுத்தினார்.

 

அல்லி என்பது ஒரு பொதுவான பெயர் எனவும், இலங்கையில் ஊதா நிற அல்லிகள், வெள்ளை அல்லிகள், நீல அல்லிகள் என பல வகையான அல்லிகள் இருப்பதால், இலங்கையின் தேசிய மலராக நிலோற்பல மலரை தெரிவு செய்ய வேண்டும் எனவும் இரு பேராசிரியர்களும் தெரிவித்தனர்.

 

1986 இல் தேசிய மலரைத் தேர்வுசெய்த குழுவினால் பரிலீலிக்கப்பட்ட அளவுகோல்களான, பூர்வீகம் மற்றும் தனித்தன்மை, பயன்பாடு, வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம், தோற்றம் மற்றும் விரிவாக்கம் என்பவற்றுடன், மேலதிக அளவுகோல்களான நிறம் மற்றும் வடிவம், இனப்பெருக்கம் மற்றும் வேறொரு நாட்டின் தேசிய மலராக இல்லாமை போன்ற சகல அடிப்படைகளையும் பூர்த்தி செய்யும் மலராக நீலோற்பலம் காணப்படுவதாக பேராசிரியர் குறிப்பிட்டார்.

முத்திரைப் பணியகம் நீலோற்பலம் மலருக்குப் பதிலாக தவறான அல்லி மலரின் படத்தையே வெளியிட்டிருப்பதாகப் பேராசிரியர் தீப்தி யகந்தாவல குறிப்பிட்டார்.

 

பாடப் புத்தகங்களில் தவறான மலரின் படம் இருப்பதாகவும், பாடசாலைகளில் மாத்திரமன்றி சில உயர்கல்வி நிறுவனங்களிலும் தவறான மலரின் படத்தைக் காட்டி பாடம் நடத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், புத்தகங்களில் மட்டுமின்றி வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் நீலோற்பலம் (நில் மானல்) என விற்கப்படுபவை கூட உண்மையான நீலோற்பல மலர்கள் அல்ல என்பதும் இந்த இரு ஆய்வாளர்களின் கருத்தாக இருந்தது.

இதனைப் பரிசீலித்து பரிந்துரைகளை வழங்குவதற்காகப் கௌரவ பிரதமரினால் நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக குழுவின் தலைவர் அமைச்சர் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பதால் விரைவில் உறுதியான தீர்மானத்தை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

இது தவிர, சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் இணைந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனைக் குழுவில் விரிவாக ஆராயப்பட்டது. பல்வேறு திட்டங்களுக்கு சுற்றாடல் அமைச்சிடமிருந்து உரிமைம் பெறுவது, அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களால் நடமாடும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இந்த சந்திப்பில் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டதுடன், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியகலாதிதி அனில் ஜாசிங்க உட்பட சம்பந்தப்பட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

error: Content is protected !!