பாடசாலையில் தாக்கம் செலுத்தும் பிற குழுக்கள்
Other Committees in Schools and Problems associated with those Committees
A.M.Mahir (LLB,MDE,SLAuS)
பாடசாலையுடன் தொடர்பான குழுக்களின் வரிசையில் இத்தொடரில் மேலும் ஒருசில முக்கியமான குழுக்களையும், அவற்றின் செயற்பாடுகளையும், அவற்றுடன் தொடர்பான சமகாலப் பிரச்சினைகளையும் எடுத்து நோக்குவோம்.
பாடசாலை ஒழுக்காற்றுக் குழுவின் செயற்பாடுகளை ஆராய்வதற்கு முன்பு பாடசாலைகள் சரீரத்தண்டனை வழங்குவது தொடர்பாக 1927.12.21 ஆந் திகதிய E36 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் ஒரு பகுதியை 1961 இன் 21 ஆம் இலக்க கல்வி அமைச்சின் சுற்றறிக்கை தருகின்றது. அதன்படி சரீரத் தண்டனை முன்னைய காலப்பகுதிகளில்; சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரியவருகின்றது. அச்சுற்றறிக்கை பின்வருமாறு கூறுகின்றது.
“கல்வி இன்றும் நவீனமாகத் தோன்றும் நாட்டின் பிற்போக்கான பகுதிகளில் சரீரத் தண்டனை என்பது ஏற்றதொன்றல்ல. சரீரத் தண்டனை விதிப்பதால் பாடசாலைக்குச் செல்வதிலிருந்து பிள்ளைகளை நிறுத்தக்கூடிய அல்லது பெற்றௌரின் மனதில் பாடசாலை மீது வெறுப்பை உண்டாக்கக்கூடிய நிலைமையிலுள்ள பாடசாலைகளில் சரீரத் தண்டனை ஒரு போதும் பிரயோகிக்கப்படலாகாது.”
சரீரத் தண்டனை தொடர்பாக பின்வரும் விதிகள் கவனமாக அனுஷ்டிக்கப்படல் வேண்டும் என மேற்படி சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
- பின்வரும் சந்தர்ப்பங்கள் அன்றி சரீரத் தண்டனை விதிக்கப்படலாகாது.
பாரதூரமான துர்நடத்தை
வழக்கமான சோம்பேறித்தனம் – வேறு வகைத் தண்டனை விதிக்கப்பட்டு பயனளிக்காதவிடத்து படிப்பில் சாதாரணமாக அலட்சியம் காட்டும் சந்தர்ப்பங்களில் சரீரத் தண்டனை விதிக்கப்படலாகாது. - கலவன் பாடசாலைகள் நீங்கலாக சரீரத் தண்டனை அதிபரால் மாத்திரமே விதிக்கப்பட வேண்டும். கலவன் பாடசாலைகளில் பெண் பிள்ளைகளுக்கு ஆசிரியையே சரீரத் தண்டனை விதிக்க வேண்டும். ஆண் ஆசிரியர்கள் பெண் பிள்ளைகளுக்கு சரீரத் தண்டனை விதிக்கக் கூடாது.
- சரீரத் தண்டனை விதிக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதெற்கென வைத்திருக்கும்; புத்தகத்தில் குற்றத்தின் தன்மையூம் கொடுக்கப்பட்ட அடிகளின் எண்ணிக்கையும் பதியப்படல் வேண்டும்.
- உள்ளங்கையில் ஒரு பிரம்பினாலேயே சரீரத் தண்டனை விதிக்கப்படல் வேண்டும். அடிகளின் எண்ணிக்கை ஒரு போதும் நாலுக்கு மேற்படலாகாது. மிகச்சிறு பருவப் பிள்ளைகளும் பலங்குறைந்த பிள்ளைகளும் ஒரு போதும் தண்டிக்கப்படலாகாது. பிள்ளைகள் ஒரு போதும் கையால் அடிக்கப்படவோ கட்டிவைக்கப்படவோ கூடாது.
- பாடசாலை மேசை மீது பிரம்பை வைத்திருக்கக் கூடாது. அது ஆசிரியரின் அறையில் வைத்திருக்கப்பட்டு தேவையான சந்தர்ப்பங்களில் மட்டுமே எடுக்கப்படல் வேண்டும்.
எவ்வாறாயினும், மேற்படி சுற்றறிக்கை (1961/26) நீண்ட காலத்திற்கு முன்பே இரத்துச் செய்யப்பட்டு விட்டது. “பாடசாலையில் ஒழுக்கக் கட்டுப்பாட்டை பாதுகாத்தல்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட2001/11 ஆம் இலக்க கல்வி அமைச்சின் சுற்றறிக்கையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. தற்போது பாடசாலைகளில் ஒழுக்கத்தை நிலைநாட்டுவது தொடர்பாக அமுலில் உள்ள சுற்றறிக்கைகளாக 2005/17 மற்றும் 2016/12 என்பன காணப்படுகின்றன.
பாடசாலை ஒழுக்காற்றுக்குழு – Disciplinary Committee
பாடசாலை ஒழுக்காற்றுக் குழுவின் உள்ளடக்கம் (கல்வி அமைச்சின் சுற்றறிக்கை 12/2016 இன் பிரகாரம்)
அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர், ஒழுக்கத்திற்குப் பொறுப்பான ஆசிரியர், பிரிவுத் தலைவர்கள் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர் உள்ளடங்குமாறு பாடசாலையின் மாணவர் தொகைக்கு அமைவாக உருவாக்கப்பட வேண்டும்.
ஒரு பாடசாலைக்கான மாணவர் ஒழுக்கக் கோவையினை நடைமுறைப்படுத்துவதே இக்குழுவின் பிரதான பொறுப்பாகும். பாடசாலை ஒன்றில், சமூக, கலாசார, அமைவிட வேறுபாடுகளுக்கேற்ப, அவற்றின் நிலைமைகளை கருத்தில்கொண்டு தயாரிக்கப்பட்ட ஒழுக்கக் கோவை ஒன்று காணப்படுதல் வேண்டும்.
மாணவர் ஒழுக்கக் கோவையோன்றில் பின்வரும் பொதுவான விடயங்களும் உள்ளடக்கப்படல் வேண்டும்.
• பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய நேரமும் அதற்கான ஒழுங்கு முறைகளும்
• பாடசாலை முடிவடையும் நேரமும் அதற்கான ஒழுங்கு முறைகளும்
• பாடசாலை சீருடை தொடர்பான விளக்கங்கள்
• வகுப்பறை, பாடசாலை சுத்தம் பேணுதல் தொடர்பான விடயங்கள்
• உடற்பயிற்சி, காலைக்கூட்டங்கள் நடாத்துவதுடன் தொடர்புடைய விடயங்கள்
• இடைவேளை நேரம், அதற்கான ஒழுங்குமுறைகள்
• பரீட்சைக்கால நடைமுறைகள்
• வகுப்பு, மாணவத் தலைவர்களின் செயற்பாடுகளுடன் தொடர்பான விடயங்கள்
• பாடசாலையில் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய விடயங்கள் அல்லது நடைமுறைகள்
• பாடசாலையில் கடைப்பிடிக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட சட்டதிட்டங்கள்
• பெற்றார் சந்திப்பு தொடர்பான விடயங்கள்
• வருடாந்தம் இடம்பெறும் விஷேட நிகழ்வுகள் பற்றிய விடயங்கள்
இவை தவிர வேறு விஷேட விடயங்கள் இருப்பின் அவையும் உள்ளடக்கப்படல் வேண்டும்.
பாடசாலை ஒழுக்காற்றுக் குழுவின் பொறுப்புக்கள்
• பாடசாலைக்குப் பொருத்தமான ஒழுக்க சட்ட விதிக்கோவையை (Code of Ethics) தயாரித்தல்.
• பாடசாலை ஒழுக்க சட்ட விதிக்கோவையை பாடசாலையினுள் காட்சிப்படுத்துதலும், அதனை பல்வேறு முறைகளினூடாக தெளிவுபடுத்துதலும்.
• பாடசாலை ஒழுக்கத்தை பேணுதல் தொடர்பாக அனைத்து சுற்றுநிருபங்கள் மற்றும் சட்ட விதிகளுக்கேற்ப (அடிப்படை உரிமைகள், சிறுவர் உரிமைகள் போன்றன) செயலாற்றுதலும் கோவையொன்றைப் பேணுதலும்.
• ஒழுக்க நடவடிக்கைகள் தொடர்பாக புத்தகமொன்றை பேணுதலும், அனைத்து ஒழுக்க நடவடிக்கைகள் தொடர்பாகவூம் எடுக்கப்படும் தீர்மானங்கள், சம்பந்தப்பட்ட வாக்கு மூலங்கள் என்பவற்றை எழுத்து மூலம் அறிக்கைப்படுத்துதல்.
• தேவையான சந்தர்ப்பங்களில் அத்தீர்மானங்களை கோட்ட / வலய /மாகாணக் கல்வி அலுவலகங்கள் மற்றும் கல்வி அமைச்சிற்கு எழுத்து மூலம் அறிவித்தல். (ஒழுக்கச்செயல் நடைமுறைகள் மற்றும் படிவங்களுக்கு அமைவாக)
பாடசாலைகளில் ஒழுக்க விழுமியங்களைப் பாதுகாத்தல் தொடர்பாக தற்போது கல்வியமைச்சின் 2005/17 ஆம் இலக்க சுற்றுநிருபத்தை மேவியதாக 12/2016 ஆம் இலக்க சுற்றறிக்கை 02.05.2016 ஆந் திகதி முதல் (பாடசாலையில் ஒழுக்கத்தைப் பேணுதல் என்னும் தலைப்பில்) அமுலில் உள்ளது. இச்சுற்று நிருபத்தில் சரீரத் தண்டனைகள்(Corporal Punishments) இன்றி பாடசாலைகளில் ஒழுக்க விழுமியங்களை பேணிவருவதுடன் சிறுவர் துஷ்பிரயோகம் அற்ற சூழல் ஒன்றை ஏற்படுத்தவூம் பொறுப்பாக செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் 1990 ஜனவரி 26 இல் ஒப்பமிட்டு 1991 யூலை 12 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையின் (UNCRC) 28(2) ஆம் உறுப்புரையின் மூலம் “பாடசாலைகளில் ஒழுக்க நிர்வாகம், மாணவர்களின் மானிட கௌரவத்திற்கு (Human Dignity) பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.”
உடல்ரீதியான தண்டனைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை உறுதிப்படுத்தப்படுமாயின், தாபன விதிக் கோவையின் இரண்டாம் பாகத்தின்; கீழ் அதிபர்/ ஆசிரியர்க்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட முடியும்.
இதற்கு மேலதிகமாக, பாடசாலையில் ஒழுக்கத்தைப் பேணும் நோக்கமாக இருப்பினும் கூட, சரீரத் தண்டனைகள் வழங்கப்பட்டால், சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். அண்மைய சம்பவம் ஒன்றில் சரீரத் தண்டனை இரண்டு மாணவர்களுக்கு வழங்கியதன் காரணத்தால் ஒரு பாடசாலையின் பிரதி அதிபர் இரண்டு மாணவர்களுக்கும் தலா ரூபா 75000 நட்டஈடாக வழங்கிய சந்தர்ப்பம் அண்மையில் உச்சநீதிமன்றத்தால் தீர்க்கப்பட்ட வழக்கில் (2022.10.13 இல்) அவதானிக்கப்பட்டது. (வழக்கு இலக்கம் (SC) (FR) Application No.139/12)
சரீரத் தண்டனை தொடர்பாக இலங்கையின் சட்ட நிலைமை
• இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் III ஆம் அத்தியாயத்தின்; 11 ஆவது உறுப்புரை மற்றும் அரசியலமைப்பின XVI ஆம் அத்தியாயததின்; 126 ஆவது உறுப்புரைகளின் பிரகாரம், மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பாக அடிப்படை உரிமை மீறல் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட முடியும். உறுப்புரை 11 பின்வருமாறு கூறுகின்றது. “ஆளெவரும் சித்திரவதைக்கு அல்லது கொடுரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தைக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படலாகாது.”
• 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க தண்டனைச்; சட்டக்கோவையின் (Penal Code) (திருத்தப்பட்ட) மூன்றாவது அத்தியாயத்தின் பிரிவு 308 (அ) பிரிவின் கீழ் சரீரத் தண்டனை வழங்குவது பிள்ளைகளைக் கொடுமைப்படுத்தல்; என்ற வகையில் தவறைப் புரிந்தவராகக் கருதப்படுவார்;. தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 308(அ)(1) மற்றும் (2) என்பன பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“பதினெட்டு வயதிற்குக் கீழ்ப்பட்ட எவரேனும் ஆளைக் கட்டுக்காப்பில், பொறுப்பில் அல்லது பராமரிப்பில் வைத்திருக்கும் எவரும் அத்தகைய ஆளை கண்பார்வைக்கு அல்லது செவிப்புலனுக்கு அல்லது அவயவத்திற்கு அல்லது உடலுறுப்பிற்கு ஊறு அல்லது துயரத்தை அல்லது உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியமுள்ள முறையொன்றில் வேண்டுமென்றே தாக்குகின்ற, துன்புறுத்துகின்ற, அசட்டை செய்கின்ற, கைவிடுகின்ற அல்லது அத்தகைய ஆளை தாக்குவிக்க, துன்புறுத்துவிக்க செய்கின்ற ஆள் எவரும் பிள்ளைகளைக் கொடுமைப்படுத்தல் என்னும் தவறைப் புரிகின்றார.;”
“அத்துடன் பிள்ளைகளைக் கொடுமைப்படுத்தல் என்னும் தவறைப் புரிகின்ற ஆளெவரும் குற்றத்தீர்ப்பளிக்கப்படுவதன் மேல் இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாததும் பத்து ஆண்டுகளை விஞ்சாததுமான ஒரு காலப்பகுதிக்கு இருவகையிலொருவகை மறியற்றண்டனையுடன் தண்டிக்கப்படல் வேண்டும் என்பதுடன் குற்றப்பணத்துடனும் தண்டிக்கப்படலாம்: அத்துடன் எந்த ஆளுக்கு தவறு பரியப்பட்டதோ அந்த ஆளுக்கு ஏற்படுத்தப்பட்ட ஊறுகளுக்கு நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்ட தொகையைக் கொண்ட நட்டஈடொன்றைச் செலுத்துமாறும் கட்டளையிடப்படலாம்.”
இங்கு “ஊறுகள்” என்பது உளவியல் அல்லது மனக்கிலேசத்தை உள்ளடக்கும் என சட்டம் கருதுகின்றது.
• மேல் மாகாணப் பாடசாலை ஒன்றில் மாணவனுக்கு பிரதி அதிபர் தண்டனை வழங்கியது தொடர்பான வழக்கொன்று 1994 இல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 11வது உறுப்புரையின் கீழ் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
பாடசாலையில் மாணவர் தலைவன், பௌத்த சங்கத்தின் தலைவன், இலக்கிய சங்கத்தின் தலைவனாக நியமக்கப்பட்ட அம்மாணவன் பாடசாலை கிரிக்கெட் அணி, போதைப்பொருள் எதிர்ப்புச் செயற்திட்ட அணி, விவாத அணி ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தான். அதிபர் சமுகமளிக்காத தினமொன்றில் பிரதி அதிபர் அம்மாணவனை கடுமையாகத் தாக்கியுள்ளார். அம்மாணவன் பாடசாலையில் திறமைமிக்கவன், இதுவரை அவரைப்பற்றிய குற்றச்சாட்டு எதுவும் பாடசாலையில் இடம்பெறவில்லை என அதிபர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். சம்பவ தினம் அம்மாணவனைக் கட்டுப்படுத்த முடியாததால் ஒரேயொரு அடி மாத்திரம் கொடுத்ததாக பிரதிவாதியால் கூறப்பட்டது.
சுகதேகியான அம்மாணவன் தண்டனை வழங்கப்பட்டதால் மனநோயாளியாகி அங்கொடை மனநோய் வைத்தியசாலையில் ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெற்றதாக மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்த மருத்துவர் வாக்குமூலம் அளிக்கும்போது, உயர்ந்த அங்கீகாரத்துடன் இருக்கும் ஒரு மாணவனுக்கு இவ்வாறான தண்டனைகள் மனநோயை ஏற்படுத்த இடமுண்டு எனக்கூறினார்.
வழக்குமுடிவில் முதலாவது பிரதிவாதியான பிரதி அதிபர், இரண்டாவது பிரதிவாதியான ஆசிரியர் இருவரும்; அம்மாணவனுக்கு தலா ரூபா 4000 வீதமும் மூன்றாவது பிரதிவாதி ரூபா 2000 மும் நட்டஈடாக வழங்குவதுடன் அரசாங்கம் ரூபா 50000 வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.
பிரதி அதிபர் மற்றும் குறித்த இரு ஆசிரியர்கள் மீது திணைக்கள ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு வழக்குத் தீர்ப்பின் பிரதியை கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்புமாறு பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் பணிப்புரை வழங்கியது.
• தண்டனை சட்டக்கோவையின் (Penal Code) (அத்தியாயம் 19) பிரிவூகள் 75, 76 மற்றும் 77 என்பவை சிறுவர்கள் தொடர்பாக பின்வரும் ஏற்பாடுகளை கொண்டிருக்கின்றது. இதனால், இத்தகைய வயதினர் புரியும் செயல்களுக்கு தண்டனை வழங்க முடியாது.
– 12 வயதிற்குட்பட்ட பிள்ளையொன்றினால் செய்யப்படுபவை எதுவும் தவறல்ல.” (பிரிவு 75)
– “12 வயதிற்கு மேற்பட்டதும் 14 வயதிற்குட்பட்டதும் குறிப்பிட்ட சந்தர்ப்பமொன்றில் தனது நடத்தையின் தன்மையையும் விளைவினையும் சீர்தூக்கிப்பார்ப்பதற்கு போதிய விளக்க முதிர்ச்சியடையாததுமான பிள்ளையொன்றினால் செய்யப்படுமெதுவும் தவறல்ல.” (பிரிவு 76)
– “செயலொன்றினைச் செய்யும் நேரத்தில், சித்தசுவாதீனமின்மை காரணமாக அச்செயலின் தன்மையினையேனும் அல்லது தான் செய்வது பிழையானது அல்லது சட்டத்திற்கு முரணானது என்பதையேனும் அறிந்து கொள்ள இயலாத ஆளொருவரினாற் செய்யப்படுமெதுவும் தவறல்ல.” (பிரிவு 77)
– மேலும் சான்றுக் கட்டளைச் சட்டத்தின் (Law of Evidence) பிரிவு 113 இன் பிரகாரம், “12 வயதிற்குட்பட்ட சிறுவன் கற்பழிப்பைப் புரிய இயலாதவர் என்பது மறுதலிக்கமுடியாத ஓர் ஊகமாதல் வேண்டும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
• சரீரத் தண்டனைகள் சிறுவர்களுக்கு / மாணவர்களுக்கு வழங்குவது பல்வேறு சர்வதேச சமவாயங்கள் / உடன்படிக்கைகளில் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இத்தகைய சமவாயங்கள்/ உடன்படிக்கைகளினை இலங்கை அரசாங்கம் ஏற்று அங்கீகரித்துள்ளது. அவ்வாறான முக்கிய சர்வதேச சமவாயங்கள்ஃ உடன்படிக்கைகள் பின்வருமாறு.
– United Nations Convention on Rights of the Child (UNCRC) இன் உறுப்புரை 19,28 மற்றும் 37
– ICESCR இன் பொதுவான குறிப்புரையின் 13 ஆம் பிரிவு
– International Convenant on Civil and Political Rights (ICCPR) இன் உறுப்புரை 07 மற்றும் 09
– Universal Declaration of Human Rights (UDHR) இன் உறுப்புரை 05
மேலும் இலங்கையில் உச்சநீதிமன்றங்களால் தீர்க்கப்பட்ட வழக்குகளையும் பார்ப்போமானால், அவையும் சரீரத் தண்டனைகள் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கமுடியாது என்ற முடிவுக்கே வந்துள்ளன.
Bandara V Wickremasinghe (1995) 2 SLR 167 என்ற வழக்கில்இ ஒரு பாடசாலை மாணவன் பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர் மற்றும் ஓர் ஆசிரியரால் தாக்கப்பட்டார். மேற்படி வழக்கின் தீர்ப்பில் “குலதுங்க” நீதியரசர் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
“பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் என்பது பாடசாலை ஆசிரியர்களின் அதிகாரத்திற்குட்பட்டதாகும். அவர்கள் ஒழுக்கத்தை நிலைநாட்டும் நோக்குடன் செயற்படும் போது உத்தியோகபூர்வ அதிகாரத்தை பிரயோகிப்பவர்களாகக் கருதப்படுவர். ஆகவே அவ்வாறு தனது கடமையினை செய்யும் போது அவர்கள் வழங்கப்பட்ட அதிகாரத்தை விட்டு எல்லை மீறும் போது மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுபவர்களாக கருதப்படுவார்கள்.”
Reddiar V. Van Houten and Others (1998) 1 SLR 265 என்ற வழக்கில், ஒரு குடிமகனுக்கு பிரயோகிக்கப்படும் ஒரு சுற்றுநிருபத்தை மீறுவது இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) இல் உறுதிப்படுத்தப்பட்ட “சட்டத்தின் முன் யாவரும் சமம்” என்ற அடிப்படை உரிமையை மீறுவதற்கு ஒப்பானது எனத் தீர்க்கப்பட்டது. ஆகவே கல்வி அமைச்சின் சுற்றறிக்கை 2005/17 ஐ பிரதிவாதிகள் மீறியது மனுதாரர்களின் அடிப்படை உரிமையை மீறுவதற்கு ஒப்பானது என உச்ச நீதிமன்றம் மேற்படி வழக்கில் தீர்ப்பளித்தது.
எனவே சரீரத் தண்டனை வழங்குதல் பாரதூரமான குற்றம் ஆகும் என்பது தெளிவாகின்றது. ஆகையால், பாடசாலையின் ஒழுக்கக் கோவையில் சரீரத் தண்டனைகளை தவிர்த்து கீழ் குறிப்பிடப்படும் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
- பாடசாலையின் நேரசூசி, மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக திட்டமிடல்களை மேற்கொள்ளுதல்.
- மாணவர்களின் நற்செயல்களை விசேடமாகப் பாராட்டுவதுடன், தவறான நடத்தைகளை ஊக்குவிக்கவோ, அங்கீகரிக்கும் விதமாக செயற்படுவதோ கூடாது.
- பாடசாலை ஒழுக்கக்கோவை தொடர்பாக காலைக்கூட்டங்களிலும், பெற்றார் கூட்டங்களிலும் விழிப்புணர்வினை ஏற்படுத்துதல்.
- சிறந்த நடத்தைகளையும், ஒழுக்கத்தையும் பேணுவதற்கும், ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கும் மாணவர்களுக்கு உரிய ஆலோசனை, வழிகாட்டல் வழங்குதல்.
- மாணவர் தவறிழைக்கும் சந்தர்ப்பங்களில், அத்தவறின் விளைவுகளையும், அது தவறு என்பதனையும் அவர்களுக்கு புரியவைத்தல் / உணர்த்துதல்.
- கடுமையான ஒழுக்க சீர்கேடுகளுக்கு சரீரத் தண்டனைகளை தவிர்த்து எச்சரித்தல், பெற்றார் /பாதுகாவலரிடம் அவை தொடர்பாக விளங்கவைத்து, அவர்களை அறிவுறுத்துதல். (இதன் போது மாணவரின் சுய கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வார்த்தைப் பிரயோகங்களையும், செயற்பாடுகளையும் உபயோகிக்க வேண்டும்.
- தவறிழைத்த மாணவர் அனுபவித்த சிறப்புரிமைகளை மட்டுப்படுத்துதல், இடைநிறுத்துதல். (மாணவத் தலைவி / வகுப்புத் தலைவி / வேறு ஏதும் பதவிகளிலிருந்து நீக்குதல்.)
- ஒழுக்காற்று சபையினால் பாரதூரமான ஒழுக்க சீர்கேடுகள் என தீர்மானிக்கப்படும் சந்தர்ப்பங்களில் உரிய அதிகாரிகளை அறிவுறுத்தி இரு வாரங்களுக்கு (Two Weeks) மேற்படாத வகுப்புத்தடையினை விதிக்க முடியும். அல்லது தவறின் தன்மை, கடுமையைப் பொறுத்து வலய / மாகாணக் கல்விப் பணிப்பாளரின் முன்கூட்டிய அனுமதியுடன் இரு வார காலத்திற்கு அதிகமான வகுப்புத்தடையை விதிக்கலாம் அல்லது அவரை வேறொரு பாடசாலைக்கு கல்வி பயின்ற அதே தரத்திற்கு மாற்றலாம்.
- மேற்படி விடயத்தின் போது ஒழுக்காற்று சபையின் தீர்மானம், இழைத்த குற்றங்களுடன் தொடர்பான அறிக்கைகளை ஆவணப்படுத்தி, பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும். அத்துடன் இது தொடர்பில் பாடசாலை சம்பவத் திரட்டுப் புத்தகத்தில், அதிபரால் குறிப்பொன்றும் இடப்படுதல் வேண்டும். (இத்தகைய செயற்பாடுகளை மாணவர்களின் சுய கௌரவம் பாதுகாக்கப்படும் வகையிலேயே மேற்கொள்ளுதல் வேண்டும்
மேற்படி ஒழுக்காற்று விடயங்களுடன் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடை செய்தல் தொடர்பாகவும் இச் சுற்றறிக்கையில் (இலக்கம் 12/2016) அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
அவை தொடர்பான சில முக்கிய விடயங்கள் பின்வருமாறு.
- சிறுவர் பராயத்திற்குப் பொருந்தாத, உகந்ததல்லாத செயற்பாடுகளில் சிறுவர்களை ஈடுபடுத்தல் சிறுவர் துஷ்பிரயோகம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
- பாடசாலையில் மாணவர்கள் எவ்வித துஷ்பிரயோகங்களுக்கும் ஆளாகாமல் தடுப்பது அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும். மாணவர் தொடர்பான துஷ்பிரயோகங்கள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக நேரிடும்.
- சிறுவர் இன்னல்கள் தொடர்பிலான சகல புலனாய்வு மற்றும் குற்றவியல் வழக்கு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல் உட்பட விசேட அதிகாரங்கள் கொண்டதாக, 1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க பாராளுமன்ற சட்டத்தின் மூலம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (National Child Protection Authority) நிறுவப்பட்டுள்ளது. மாணவர் தொடர்பான துஷ்பிரயோகங்களின் விசாரணைகளுக்கான உதவிகள் கோரப்படும் போது, அவற்றை மாகாண / வலயக் கல்விப் பணிப்பாளர் அல்லது அதிபர் இவ் அதிகார சபைக்கு காலதாமதமின்றி வழங்க வேண்டும்.
- கல்வி அமைச்சும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் ஒருங்கிணைந்து நடைமுறைப்படுத்துகின்ற பாடசாலை சிறுவர் பாதுகாப்புக்குழு (“சுரக்கும் பவ்வ”) தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் கல்வி அமைச்சின் சுற்றறிக்கை இலக்கம் 2011/17 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றை அதிபர்கள், ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். அதை முழுமையாக அறிய எனது “பாடசாலை தாபன முகாமைத்துவம்” எனும் நூலின் பிண்ணிணைப்பு ix ஐ வாசிக்க.
குறிப்பு :
குற்றமிழைக்கும் மாணவரை வேறொரு பாடசாலைக்கு மாற்றுவதென்பதன் சாத்தியப்பாடு தொடர்பாக சில கருத்து முரண்பாடுகள் உள்ளன. எந்தவொரு பாடசாலையும் ஒழுக்கமுள்ள சிறந்த மாணவனை உள்வாங்குவதற்கே உடன்படும். ஒழுக்க மீறலுக்கான தண்டனை பெற்ற ஒரு மாணவரை எந்தளவு விருப்புடன் வேறொரு பாடசாலை ஏற்றுக்கொள்ளும், அப்புதிய பாடசாலையில் அவன் எவ்வாறு நடாத்தப்படுவான் போன்ற விடயங்கள் கேள்விக்குறியாகும்.
மேலும் சில பாடசாலைகளில் ஒழுக்க மீறலுக்கான தண்டனையாக மாணவர் விடுகைப் பத்திரத்தில் சிவப்பு மையினால் இவர் பாடசாலையிலிருந்து ஒழுக்கமீறலுக்காக நீக்கப்படுகின்றார் எனக் குறிப்பிட்டு வழங்கப்படுகிறது. இதனால் அம்மாணவர் வேறு எந்தவொரு பாடசாலையிலும் கல்வி கற்க முடியாமல் இடைவிலக வேண்டிய நிலைமையை உருவாக்கும்.
பாடசாலையினுள் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை ஏற்படுத்தும் விதத்தில் ஒழுக்கத்திற்கெதிரான செயற்பாடுகளில் ஈடுபடுமாறுஇ அல்லது வேறு ஏதேனும் ஒழுக்கக்கேடானவிடயங்களில் ஈடுபடுமாறு, பாடசாலை கல்விசார் / கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவரை தூண்டுவது கடும் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றமாகும். மேலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட முடியும்.
பாடசாலை ஒழுக்கம் / ஒழுக்காற்றுக் குழுவூடன் தொடர்பான சமகாலப் பிரச்சினைகள்.
- பாடசாலை மாணவர் எண்ணிக்கைக்கேற்ப பகுதித்தலைவர்களை ஃ ஆசிரியர்களை உள்ளடக்கி பாடசாலை ஒழுக்காற்று சபை அமைக்கப்படாதிருத்தல்.
- பெயரளவிலான ஒழுக்காற்றுச் சபை அமைத்தல்.
- ஒழுக்காற்று சபைத்தலைவர், பாடசாலை முகாமைத்துவக் குழுவில் அங்கத்தவராக இருத்தல்.
- ஒழுக்காற்றுச் சபையின் கடமைப் பொறுப்புக்கள் சரியான முறையில் வரையறுக்கப்படாதிருத்தல்.
- மாணவர் ஒழுக்கக்கோவை ஒன்று காணப்படாமை.
- மாணவர் / பாடசாலை / ஆசிரியர் ஒழுக்கக் கோவைகளை பின்பற்றி ஒழுக்காற்று சபை இயங்காமை.
- ஒழுக்காற்று சபை தலைவர் / அங்கத்தவர்களுக்கு கற்பித்தல் பாடவேளைகள் குறைக்கப்படுதல். (06/2021 ஆம் இலக்க கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்தில் இவ்வாறாக விடுவிக்கும்படி அறிவுறுத்தப்படவில்லை)
- ஆசிரியர்கள் ஒரு முன்மாதிரியாக நடந்துகொள்ளாமை. (உதாரணம்: வகுப்பறையினுள் ஆசிரியர்களின் கைத்தொலைபேசிப் பாவனை)
- மாணவரிடையே அதிகரித்துள்ள கைத்தொலைபேசிப்பாவனை. மாணவர் பாடசாலைக்கு கைத்தொலைபேசிகளை கொண்டுவராமல் கண்காணிப்பது பெற்றௌரினது கடமையாகும்.
(கைத்தொலைபேசிப் பாவனை தொடர்பாக கல்வி அமைச்சின் 2009/26 ஆம் இலக்க சுற்றுநிருபம் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மேலதிக விளக்கங்களுக்கு அதனை வாசிக்க…) - சமூகத்தில் போதைப்பொருள் பாவனையின் தாக்கங்கள் பாடசாலையினுள்ளும் ஒழுக்க சீர்கேடுகளை உருவாக்கியுள்ளமை.
- மாணவர்களை வகுப்பேற்றல் செய்யப்படும் போது கல்வி அமைச்சின் 1989.10.24 ஆம் திகதிய சுற்றறிக்கைக் கடிதத்தின் வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம், ஒரு வகுப்பிலிருந்து இன்னொரு வகுப்புக்கு மாணவரை வகுப்பேற்றல் செய்யும்போது “மாணவரின் ஒழுக்கம் சீரான முறையில் திருப்திகரமாக இருப்பதுடன் வகுப்பேற்றலுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது என்று வகுப்பு ஆசிரியர் எழுத்துமூலம் அறிவிக்க வேண்டும்” என்பதுடன் ஆண்டு இறுதியில் மாணவருக்கு கொடுக்கப்படும் அறிக்கையானது அவரின் கல்விச்சாதனை, சீரான ஒழுக்கம் என்பவற்றின் காரணமாக அவர் வகுப்பேற்றப்பட்டுள்ளார் என்பதை குறிப்பிடல் வேண்டும்”; என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த அறிவுறுத்தல் மீறப்படுகின்றது.
- சில பாடசாலைகளினுள் போதைபொருள் விற்பனையும், பாவனையும் அதிகரித்திருக்கின்றமை.
- நாட்டில் ஏற்பட்ட பொருளாதார, எரிபொருள் நெருக்கடிகளால் மாணவர்களின் குடும்பம் பாதிக்கப்பட்டிருத்தல். இதன்காரணமாக மாணவர்களின் சீருடை / காலணிகள் / ஏனைய பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதில் தடைகள் ஏற்பட்டு பாடசாலையின் சில சட்டதிட்டங்கள் தளர்த்தப்படவேண்டிய நிலைமைகள் உருவாகியுள்ளன.
- மாணவரின் ஒழுக்க சீர்கேடுகளுக்காக வழங்கப்படவேண்டிய தண்டணைகள் தொடர்பாக ஒழுக்காற்று சபை அங்கத்தவர்களிடையே முரண்பாடுகள் ஏற்படல்.
- சரீரத் தண்டனைகள் வழங்கப்பட்டு வருதல்.
- பாடசாலைக்கு தாமதித்து வரும் மாணவர்கள்/ பாடசாலை நுழைவாயில் மூடப்படுவதால் வீதிகளில் அலைந்து திரிதல் / வீதி விபத்துக்களுக்குள்ளாதல் அல்லது அசௌகரியங்களுக்கு உள்ளாதல்.
(உண்மைச் சம்பவம் : தாமதித்து பாடசாலைக்கு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று மாணவர்கள், பாடசாலைக்குள் நுழைய முடியாமல் வாயில் மூடப்பட்டிருந்தமையால், ஊரின் அருகில் இருந்த கால்வாயில் குளித்து விளையாடச் சென்று, அதில் தரம் இரண்டில் கல்விகற்கும் மாணவச் சிறுவன் மூழ்கி இறந்தான். இதற்கான முழுப்பொறுப்பும் அதிபரையே சாரும்.) மாணவர்கள் கட்டுக்காப்பு தொடர்பாக கல்வி அமைச்சின் 1960/13 ஆம் இலக்க சுற்றறிக்கை பின்வருமாறு கூறுகின்றது.
பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அவர்களது ஆசிரியர்கட்கும் ஞாபகமூட்டுவது யாதெனில் அவர்தம் பாடசாலையில் கல்வி பயிலும் பிள்ளைகள் பாடசாலைக்கு வந்த நேரம்தொட்டு பாடசாலை வளவை விட்டு வெளியேறும் வரையுள்ள பாடசாலை நேரத்தில் அப்பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு கூட்டாகவும், தனிமையாகவும் அவ்வாசிரியர்கள் பொறுப்பானவர்கள் என்பதுடன் பாடசாலையின் இயல்பான தொழிற்பாடுகளில் தொடர்புள்ள வேலைகட்கு அன்றி வேறொரு நோக்கத்திற்காகவும் எதுவித சூழ்நிலையிலும் பாடசாலை வளவை விட்டு மாணவர் வெளியேற அனுமதிக்கப்படலாகாது.”
- சிரேஷ்ட மாணவத் தலைவனுக்கு / தலைவிக்கு மாணவர்களை தண்டிக்கும் அதிகாரங்கள் வழங்கப்படுதல். (உதாரணம் : தாமதித்து வரும் மாணவர்களை குப்பை கூளங்களை சுத்தம் செய்யும்படி மாணவத் தலைவர்கள் வற்புறுத்துதல், தண்டப்பணம் அறவிடுதல், அடித்தல், தகாத வார்த்தைகளால் ஏசுதல்.)
- தற்காலத்தில் மாணவர்கள், மூத்தோர்களை, ஆசிரியர்களை மதிக்காமல், மரியாதையின்றி பேசுவதையும், நடந்துகொள்வதையும் சாதரணாமாக காணக்கூடியதாகவுள்ளது. இதற்கு ஆசிரியர்களும் ஒரு காரணமாவர். அதாவது மாணவர்களுடன் அன்பான, கனிவான, ஆறுதலான, அழகான, மரியாதையான வார்த்தைகளால் உரையாடாமல், எடுத்தெறிந்து கௌரவக்குறைச்சலான வகையில் பேசுவதனாலேயே, மாணவர்களும் அந்த வழிமுறையில் பேசக் கற்றுக்கொள்கின்றனர். அத்துடன் மாணவர்கள் பாடசாலை பகிஷ்கரிப்பில் ஈடுபடமுடியாது. இது தொடர்பாக கல்வி அமைச்சின் சுற்றறிக்கை 1961/06 மிக விரிவான விளக்கத்தினை வழங்குகின்றது. அதை வாசித்து அறிக…
- மாணவர்களை தனக்கு எதிரான ஒரு ஆசிரியர்க்கு / அதிபருக்கு எதிராக தூண்டிவிடுதல். அவரை பழிவாங்கும் நடவடிக்கைகளில் மாணவர்களை கையாட்களாக / அடியாட்களாக உபயோகித்தல்.
- மாணவர்கள், பாடசாலை சொத்துக்களை பாதுகாக்கும் வகையிலான விழிப்புணர்வுகள் இன்றி வளங்களை வீண்விரயம் செய்தல். (உதாரணம், மின்விசிறிகள், விளக்குகளை அணைக்காமல் செல்லுதல், நீர்க்குழாய்களை மூடாது விடல் / உடைத்தல், கதிரை மேசைகளுக்கு சேதம் விளைவித்தல் போன்றன)
- மாணவர்களை அடிமைகளைப் போலவும், கைதிகளைப் போலவும் ஒழுக்காற்று சபை அங்கத்தவர்கள் நடாத்துதல்.
- ஒழுக்காற்று சபை அங்கத்தவர்களை மாணவர்கள் பயங்கரமானவர்களாக உருவகப்படுத்தி அவர்களை வெறுக்கும் அளவிற்கு அதன் அங்கத்தவர்களின் நடவடிக்கைகள் இருத்தல். (உண்மைச் சம்பவம் : சாதாரணமாக பாடசாலைக்கு தினமும் சமூகமளிக்கும் மாணவன் ஒருவன், சில நாட்களாக ஒழுங்கற்ற பாடசாலை வரவினை கொண்டிருந்தமை அவதானிக்கப்பட்டது. இது தொடர்பாக வகுப்பாசிரியர் அம்மாணவனின் பெற்றௌரை வினவியபோது, அம்மாணவன் பாடசாலைக்கு செல்ல பயப்படுவதாக கூறினார். மாணவனிடம் கனிவான முறையில் அவனது பிரச்சினை பற்றி கலந்துரையாடிய போது, அவன் கூறிய விடயங்கள் கவலைக்கிடமானதாக இருந்தது. தனது காலணிகள் ஒருநாள் இரவு திடீரென பெய்த மழையில் நனைந்து போனதால் அடுத்ததினம் செருப்பு அணிந்து பாடசாலை சென்ற போது, அம்மாணவனின் பக்க நியாயத்தை பொய் எனக்கூறி, செருப்புக்களை கழற்றி வைத்துவிட்டு அன்றைய தினம் முழுவதும் வெறும்காலுடன் அம்மாணவன் நடமாடியுள்ளான். அத்துடன் உரிய ஒழுக்காற்று சபை ஆசிரியரின் கடுமையான கண்டனத்திற்கும் ஆளாகியிருந்தான். இதன்காரணமாக அவன் குறித்த ஆசிரியரை கண்டால் மறைந்து இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டான். இதற்கு மாற்றுவழியாக பாடசாலைக்கு சமூகமளிப்பதை அடிக்கடி தவிர்த்து வந்தான்.
- பாடசாலையினுள் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருதல். (உண்மை சம்பவம் : ஆண் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களை விஞ்ஞான ஆய்வுகூட பரிசோதனைகளை செய்து காட்டுவதாக கூறி ஆய்வுகூடத்திகு அழைத்து பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வந்ததுடன், அதனை யாரிடமாவது கூறினால் கடுமையான தண்டனை வழங்குவேன் எனவும் மாணவர்களை மிரட்டி வந்தார். அதில் ஒரு மாணவன் நோய்வாய்ப்பட்ட போது மருத்துவப் பரிசோதனைகளின் பின் உண்மை நிலைமை தெரிய வந்தது. தற்போது அவ்வாசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறே பெண் மாணவிகளை தனிப்பட்ட பிரத்தியேக வகுப்புக்களிற்கு பாடசாலையினுல்லோ அல்லது வெளியிலோ அழைத்து பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதும் அதிகரித்து வருகின்றது.
(மேலதிக வகுப்புக்களை நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சின் 1961/30 ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வாசித்து அறிக…)
- ஆசிரியர்களின் விழுமியம் மிக்க செயற்பாடுகள் தொடர்பான ஒழுக்க விழுமிய முறைமையில் பொதுச்சட்ட தொகுப்பு என்ற 2012/37 ஆம் இலக்க கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் படி, ஆசிரியர்கள் எட்டுப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். அதில் ஒன்று ஆசிரியர் ஆக்கத்திறன்மிக்கவராகவும், வழிகாட்டுநராகவும், ஆலோசகராகவும் இருக்க வேண்டும். இதன்படி எச்சந்தர்ப்பத்திலும் ஆசிரியர் மாணவர் தொடர்புகளை முறையற்ற ரீதியில் பயன்படுத்தாது இருத்தல் மற்றும் மாணவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உட்படும் சந்தர்ப்பங்களில் இருந்து தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுத்தல் என்பன சகல ஆசிரியர்களின் கடமையாகும் என்பதனை மனதில் கொள்ள வேண்டும்.
கட்டாயக் கல்விக் குழு
——————————-
இலக்கம் 1963/30 கொண்ட 2016.04.20 ஆந் திகதிய அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் படி, கட்டாயக் கல்விப் பிரகடனங்களை அமுல்படுத்துவதற்காக அதிபரை தலைவராகவும், ஆரம்ப, இடைநிலை பிரிவுத் தலைவர்களையும், இரு ஆசிரியர்கள், இரு மாணவத் தலைவர்கள், இரு பெற்றார்கள், இரு பழைய மாணவர்களை அங்கத்தவர்களாகவும் கொண்டு இரு வருடங்களுக்கொரு தடவை இக்குழு அமைக்கப்படல் வேண்டும். (அதிபர் தவிர்ந்த)
மாணவர்களின் இடைவிலகல் தொடர்பாக ஆராய்ந்து மாணவர்கள் தங்களின் கட்டாயக் கல்வியினை பூர்த்திசெய்வதை உறுதிப்படுத்தும் விதமாக தீர்மானங்களையும், செயற்பாடுகளையும் முன்னெடுப்பது இக்குழுவின் பிரதான பொறுப்பாகும்.
பாடசாலை பாட அபிவிருத்திக்குழு
——————————————–
இதில் கலைத்திட்டதிற்குப் பொறுப்பான பிரதி அதிபருடன், பாட இணைப்பாளர்கள் இணைந்து செயலாற்ற முடியும். பாடத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள், அலகுமுன்னேற்ற ஆய்வுகள், தவணைப் பரீட்சைகளை பாடசாலை மட்டத்தில் நடாத்துதல் (சுற்றுநிருப இல. 2010/16 இன் பிரகாரம்), தர வட்டங்களை நடாத்துதல், மாணவர் அடைவுமட்ட பகுப்பாய்வுகள், பாடசாலை மட்ட ஆசிரியர் வாண்மைத்துவ நிகழ்வுகள் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
தரவட்டக் குழு (Quality Circle)
——————————————
• தமது சேவைக்குரிய பிரச்சினைகளை ஆய்வுக்குட்படுத்தி, தீர்த்து அதன் மூலம் தமது தொழில் வாழ்வின் பண்புசார் விருத்தியை ஏற்படுத்தவும் திறமை மற்றும் அறிவினை விருத்தி செய்யவும், அதன்மூலம் நிறுவனத்தின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக கலந்துரையாடல் மூலம் இணைந்துகொண்ட சிறிய அளவிலான ஊழியர் குழுவாகும்.
• இதில் 4 தொடக்கும் 12 வரையான அங்கத்தவர்களை கொண்டிருக்கக் கூடும்.
• சகல ஊழியர்களும் நேரடி பங்களிப்பினை வழங்குதல் வேண்டும்.
• தலைவரும், செயலாளரும் நியமிக்கப்பட்டு, வாரம் ஒரு முறை ஒரு மணித்தியால கால அளவில் கலந்துரையாடி முகாமைத்துவக் குழுவின் அனுசரணையுடன் தொழில் பிரச்சினைகள் தொடர்பான தீர்வுகளைப் பெற முடியும்.
• பொருத்தமான பெயர் ஒன்றினை தரவட்டத்திற்கு பயன்படுத்தல். (உதாரணம் : கணிதப்பாட ஆசிரியர் தரவட்டம், வகுப்பாசிரியர் தரவட்டம் போன்றன)
• கலந்துரையாடல் மூலம் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகளை முன்னுரிமைக்கேற்ப பட்டியல்படுத்தி, அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான செயற்பாட்டுத் திட்டங்களையும் வகுத்து செயல்படுத்தி அவற்றின் மீளாய்வின் போது தேவைப்படும் ஊக்குவிப்புக்களையும் முகாமைத்துவக் குழுவிற்கு வழங்குதல் வேண்டும். இது தொடர்பாக மேலதிக விளக்கத்திற்கு 2008/06 ஆம் இலக்க கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை வாசிக்க.
அமுக்கக் குழு (பாடசாலையில் தானாக உருவாகும் குழு)
————————————————————————-
பல பாடசாலைகளில் மேற்படி குழுக்கள் தவிர, பாடசாலையின் நடவடிக்கைகளில் / அதிபரின் செயற்பாடுகளில் மிக அவதானத்துடனும், புதுமையான சிந்தனைகளுடனும், எந்த நேரமும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் மற்றுமொரு குழு ஒன்று உள்ளது. அது அமுக்கக் குழு ஆகும். அமுக்கக் குழுக்கள் ஆர்வக்கோளாறான ஒருவரை தூண்டி விட்டு நிர்வாகத்தை குழப்புவதில் பாரிய பங்கினை வகிக்கும். அமுக்கக் குழுக்கள் உருவாவதன் பிரதான காரணம் அன்பு, காப்பு, கணிப்பு ஆகிய உளவியல் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமையாகும்.
அதாவது பாடசாலையின் அதிபர் / நிர்வாகத்தினர் சில ஆசிரியர்களை / ஆளணியினரை புறம் தள்ளுவதனாலும், அவர்களின் திறமைகள், இயலுமைகளை சரியாக இனங்கண்டு, அவர்களில் பூரண நம்பிக்கை வைத்து பொறுப்புக்களை ஒப்படைக்காமையினாலும், அவர்களின் செயற்பாடுகளை பாராட்டி அங்கீகரிக்காமல் குறை கண்டுபிடித்து கண்டனம் செய்து கொண்டிருப்பதனாலும், உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதனால் இவர்கள் நிர்வாகத்திற்கெதிராக ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பிக்கின்றனர். இருந்தபோதிலும் குழுவில் அனைவரும் வெளிப்படையாக நிர்வாகத்திற்கெதிராக செயற்படமாட்டார்கள். பாடசாலையின் ஆளணியினரில் முனைப்புடனும், தைரியத்துடனும், முன்னின்று செயற்படும் ஒருவரை அல்லது இருவரை தூண்டிவிட்டு, அவர்களிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு செயற்பட்டு வருவர்.
இவ்வாறான அமுக்கக் குழுக்களை கையாள, அக்குழுவின் நூல் பொம்மையாக செயற்படுபவர்களை முதலில் அழைத்து நேரடியாக அதிபர் / நிர்வாகத்தினர் குறித்த பிரச்சினை தொடர்பாக கலந்துரையாட வேண்டும். அப்பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதனையும் அவர்களிடமே கேட்டறிய வேண்டும். அவர்கள் குறிப்பிடும் தீர்வுகளின் சாதக பாதகங்களை சுமூகமாக கலந்துரையாடி இரு அமைப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத முடிவொன்றை எடுக்க வேண்டும். இந்த நூல் பொம்மைகளுக்கு நிர்வாகத்திலுள்ள சாதக பாதகங்களையும், பிரச்சினைகளையும், தெளிவாக வெளிப்படையாக, தெளிவுபடுத்துவதன் மூலம், அமுக்கக் குழுவினருக்கும் விடயங்கள் சென்றடையும். அக்குழுவினருக்கு அவ்வப்போது சந்தர்ப்பத்திற்கேற்ப அவர்களை கண்ணியமான முறையில், கையாள்வதன் மூலம் அதிபர் / நிர்வாகத்தினர் வெற்றிகரமான தலைமைத்துவத்தையும், முகாமைத்துவத்தையும் பாடசாலையில் ஏற்படுத்த முடியும்.
அமுக்கக் குழு தொடர்பான ஒரு உண்மைச்சம்பவம்
———————————————————————————————————————
ஒரு பாடசாலையில் இடம்பெற்ற பொன்விழா நிகழ்விற்காக பல்வேறு உபகுழுக்கள் அமைக்கப்பட்டது. இருந்தபோதிலும் அதில் சில உபகுழுக்களின் பொறுப்புக்களில் அதிபருக்கு நெருக்கமான முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் தலையிட்டு அவற்றை தாங்கள் நிறைவேற்றினர். இறுதியில் அதற்காக அதிபரின் கண்டனங்களுக்கும் ஆளாகினர். அத்துடன் வேறு சில உப குழுக்களால் இடம்பெற்ற சிறிய தவறுகளையும், அதிபரானவர் தனது பதட்ட சுபாவத்தினால் அவற்றை பெரிதுபடுத்தி பலர் முன்னிலையில் அவர்கள் அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொண்டார்.
மேற்படி காரணங்களால் விரக்தியடைந்த சிலர் ஒன்றுசேர்ந்து ஒரு அமுக்கக்குழுவாக மாறினர். இருந்தபோதும் அதிபரை எதிர்க்கும் துணிவு அவர்களிடத்தில் இருக்கவில்லை. அதனால் அப்பாடசாலைக்கு புதிதாக இடமாற்றம் பெற்று வந்த இரு இளம் ஆசிரியர்களை, மூத்த ஆசிரியர்கள் என்ற வகையில் வழி நடாத்துவது போல் பாசாங்கு செய்து தங்கள் வலைக்குள் சிக்க வைத்துக்கொண்டனர். அவ்விளம் ஆசிரியர்களில் ஒருவர் சமூகசேவைகளில் ஈடுபடுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவ்வாசிரியர்களை அதிபர் / நிர்வாகத்திற்கெதிராக பல பொய்களையும், சம்பவங்களையும் கூறி தூண்டிவிட்டமையினால், அவ்விருவரும் பாடசாலைக்கு எதிரான கருத்துக்களை சமூகவலைத் தளங்களில் பதிவிட்டு வந்ததுடன், முகாமைத்துவக் குழு அங்கத்தவர்களுடனும் தகாத முறையில் வாய்த்தர்க்கங்களில் ஈடுபட்டும் வந்தனர். இதனால் கோபமுற்ற அதிபர் இவர்களுக்கெதிராக பொலிஸில் முறைப்பாடொன்றை செய்ததுடன், அவர்களை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இதனால் கோபமடைந்த அவ்விருவரும் மேலும் மேலும் பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயற்பட்டு வந்தனர்.
இதன் பின்னர் விழிப்படைந்த சமூகம் அதிபரையும் / நிர்வாகத்தினரையும் இப்பிரச்சினை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கோரியது. அதில் அனுபவம் வாய்ந்த மூத்த ஓய்வு பெற்ற அதிபர் ஒருவர் மேற்படி பிரச்சினையை தீர்ப்பதற்கு அதிபரும், நிர்வாகமும் எடுத்த பிழையான தீர்மானங்களை சுட்டிக்காட்டினார். அதனால் தங்கள் தவறை உணர்ந்த நிர்வாகத்தினர் குறித்த ஒருநாளில் மேற்படி இரு ஆசிரியர்களையூம் நேரடியாக சந்திப்பதற்கான ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற அதிபர் மூலமாக மேற்கொண்டனர். அந்த சந்திப்பின் போது அவர்களின் பிரச்சினைகள் கேட்டறியப்பட்டது. அதில் அவர்கள் பிரதானமாக குறிப்பிட்ட இரு பிரச்சனைகள் மாத்திரம் இங்கு தரப்படுகின்றது.
முதலாவது, ஆங்கிலமொழியில் தேர்ச்சி பெற்றிருந்த அவ்வாசிரியர்களில் ஒருவருக்கு, அப்பாடசாலையின் விழாக்களில் ஆங்கில மொழியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. அவரை ஒதுக்கி, அவரை விட குறைந்த தரமுடைய ஒருவருக்கு அவ்வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
இரண்டாவது, மற்றைய ஆசிரியரின் கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தரஉள்ளீடுகளை வழங்க உரிய பொறுப்பதிபர் தவறியது மட்டுமல்லாமல், தன்னை அலைகழித்து வருவதாகவும் முறையிட்டார். அத்துடன் உரிய வசதிகளை செய்து தராமல், தனது கற்பித்தல் முறைகளில் குறை கூறியும் வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மேற்படி பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக முதலாவது ஆசிரியரின் ஆங்கில மொழியில் அவரின் அறிவிப்பாளர் திறமையினைப் பரீட்சிக்க சிறிய அறிவிப்பு ஒன்றை செய்துகாட்டும்படி பணித்த அதிபர், அதில் திருப்தியடைந்தவராக, அடுத்த விழாவொன்றில் ஆங்கில மொழி தொகுப்பாளராக சந்தர்ப்பம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இரண்டாவது ஆசிரியரின் பிரச்சினை தொடர்பாக நிர்வாகத்தினர் விளக்கம் அளிக்கையில், தர உள்ளீட்டு பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நிதி கிடைக்கப்பெறாமையினால் சில பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாகவும், அவ்வாசிரியரிடம் அதைக்கூறிய போதும் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் குறித்த உதவி அதிபர் சற்று கோபமடைந்து இவரை குறை கூறியதாகவும் குறிப்பிடப்பட்டது. தரஉள்ளீட்டு நிதி தொடர்பான கணக்கறிக்கைகள் பற்றிய விளக்கங்களை அதிபர் வழங்கிய பின்னர், அவ்வாசிரியர் நிலைமையினைப் புரிந்துகொண்டார்.
இச்சந்திப்பின்னர் பாடசாலை தொடர்பாக விமர்சிப்பதை அவ்விரு ஆசிரியர்களும் தவிர்த்திருந்தனர். அத்துடன் அதிபரும், நிர்வாகத்தினரும் அமுக்கக் குழுக்களை கையாள்வது தொடர்பாக சில தீர்மானங்களை நடைமுறைப்படுத்தினர்.
அவை பின்வருமாறு.
- ஆசிரியர்களை எப்போதும் ஏதாவது ஒரு கடமையில் ஈடுபடச் செய்யும் விதமாக பிரதான நேர அட்டவணையை (Master Time Table / General Time Table ) இனை தயாரித்து அமுல்படுத்தல்.
- வகுப்பு நேர அட்டவணை (Class Time Table)இ அமுல்படுத்தப்படுவதை மேற்பார்வை மூலம் உறுதிசெய்தல்
- ஆசிரியர் நேர அட்டவணை (Teacher Time Table) இல் கற்பித்தல் பாடவேளைகளுக்கு மேலதிகமாக இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக பாடவேளைகளை ஒதுக்கி திட்டங்களுடன் சமர்ப்பித்தல்.
- பதில் பாட நேர அட்டவணை பொருத்தமான முறையில் அமுல்படுத்தப்படுவதை உறுதி செய்தல்.
- இருக்கும் வளங்களை வினைத்திறனான முறையில் பயன்படுத்தி கற்பித்தல் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வழிகள் தொடர்பாக ஆசிரியர் வாண்மைத்துவப் பயிற்சி அளித்தல்.
- ஆசிரியர் சங்கக் கூட்டங்களில் மாதாந்தம் பாடசாலையின் வரவு செலவு தொடர்பாக வெளிப்படையான அறிக்கைகளை சமர்ப்பித்தல்.
- பாடசாலை நிர்வாக அமைப்பு, கலாச்சார முறைமைகள், பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகள் தொடர்பாக அவ்வப்போது காலைக்கூட்டங்களிலும், ஆசிரியர் சங்கக்கூட்டங்களிலும் தெளிவுபடுத்துதல்.
- நிர்வாகத்தினருக்கு தலைமைத்துவ, முரண்பாட்டு முகாமைத்துவப் பயிற்சிகளை அனுபவம் வாய்ந்த வளவாளர்கள் மூலம் வழங்குதல்.
- ஆசிரியர்களுக்கான நலன்புரித்திட்டங்களை வலுப்படுத்துதல்.
- ஆசிரியர்களின் விஷேட இயலுமைகள், திறமைகள், திறன்களை வெளிக்கொணரும் வகையில் ஆசிரியர் தின நிகழ்வுகள் மற்றும் சந்தர்ப்பங்களை திட்டமிட்டு நடாத்துதல்.
- ஒரு பாடசாலையின் ஆளணியினரை ஒரு குடும்பம் என்ற அமைப்பில் அதிபர் வழிநடாத்துதல்.
- ஆளணியினரின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தல்.
- அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், முடியாத சந்தர்ப்பங்கள் தொடர்பாக அவர்களுக்கு அது பற்றி விளக்கமளித்தல்.
இவ்வனைத்து செயற்பாடுகளையும் திட்டமிடுவதற்கு மிகப் பிரதான ஆயுதமாக அமைவது பாடசாலை உள்ளக, வெளியக மதிப்பீடும், மேற்பார்வைச் செயன்முறையுமாகும். அவற்றிலிருந்தே ஒரு பாடசாலையின் தேவைப்பாடுகள், பலம், பலவீனங்கள், அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய துறைகள், போன்ற விடயங்களை தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
இதற்காக பாடசாலை உள்ளக மதிப்பீடு, வலய, மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் மாகாணக் கல்வி அமைச்சு போன்ற வெளிவாரி மதிப்பீடுகள், பாடசாலை மேற்பார்வை, வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டுத் திட்டம் ((EPSI) அமுலாக்கம் போன்றவற்றை மத்திய கல்வி அமைச்சு ஏற்படுத்தியூள்ளது. இவை தொடர்பான மேலதிக விளக்கங்களையும் அவை தொடர்பான சமகாலப் பிரச்சினைகளையும் அடுத்த தொடரில் (தொடர் – 04) எதிர்பாருங்கள்…