பிள்ளைகளின் உலகை புரிந்து கொள்ளல்
ஒரு பைலட்டாகி ஹெலிகொப்டர் ஒன்றை தன் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் தரையிறக்க விரும்புவதாக இடைநிலை வகுப்பு மாணவரொருவர் எனது நண்பரான தனது கணித பாட ஆசிரியரிடம் கூறியுள்ளார். தனது விருப்பத்திற்கு தன் பெற்றோரும் உடன்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குறித்த அம்மாணவன் தனது எண்ணங்களையும் விருப்பங்களையும் அவ்வாசிரியரிடம் சரளமாக வெளியிடக்கூடியவராக இருந்தார். விமானமொன்று குறித்த பாகையில் தரையிறக்கப்படாவிடில் அது விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமென மாணவன் தன் ஆசானிடம் தெரிவித்துள்ளார்.
உஷாரடைந்த அவ்வாசிரியர் தன் மாணவனிடம் மேலதிக வினாக்களைத் தொடுத்துள்ளார். விமானமோட்டும் பயிற்சி நிலையங்கள் குறித்து தான் அறிந்து வைத்திருப்பதாகத் தெரிவித்த அம்மாணவன்
இதுகுறித்து தான் யூடியூபில் அறிந்த பல விடயங்களை தன் ஆசிரியரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் இயல்பாகவே நெகிழ்வுத் தன்மையும் இரக்க குணமும் கொண்டிருப்பதாலும் அறிவியல் துறை தொடர்பான புதுமை விரும்பியாக இருப்பதாலும் மாணவனின் எண்ணம் நிஜமாக வேண்டுமென அம்மாணவனை ஊக்கப்படுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தைக் கூறக் காரணம் தற்காலத்திற்கேற்ப ஆசிரியரும் பெற்றோரும் சமூகமும் பிள்ளைகளை இவ்வாறு சரியாகப் புரிந்து வழிநடத்தக் கூடிய பாரிய கடமைப் பொறுப்பினைக் கொண்டுள்ளனர்.
இக்கால பிள்ளைகளின் சிந்தனை மற்றும் ஆக்கத் திறனுக்கு அதிகபட்ச முக்கியத்துவமளித்து அவர்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்ல வேண்டியது மிக அவசியம். ஏனெனில் இன்றைய ஆசிரியர், பெற்றோர் ஆகிய மூத்தோர் பிறந்து வளர்ந்த கால சூழலுக்கும் தற்போதைய பிள்ளைகளின் உலகுக்கும் இடையில் மிகப்பெரும் வேறுபாடுகள் உள்ளன.
உலகின் அறிவார்ந்த வளர்ச்சிக்கேற்ப ஆய்வாளர்கள் மனிதனின் பிறப்புக் காலங்களை வெவ்வேறு தலைமுறையாக (Generation) பிரித்து அத்தலைமுறை (பரம்பரை) ஒவ்வொன்றிற்குமான பண்புகளை விபரித்துள்ளனர்.
பாடசாலையில் இப்போதிருக்கும் பிள்ளைகளில் பெரும்பாலானவர்கள் ‘அல்பா தலைமுறையை’ (Generation Alpha) சார்ந்தவர்கள். 2010 முதல் 2025 வரையான பிறப்புக் காலங்களைக் கொண்ட இவர்கள் பெரும்பாலும் தரம் 1 முதல் 8 வரை கற்றுக் கொண்டிருப்பர்.
அதற்கு முன்னைய தலைமுறை இஸட் (Generation Z) வகையினர். 1997 முதல் 2010 வரை பிறந்த இவர்கள் தரம் 9 முதல் 13 வரை கற்றுக் கொண்டிருப்பார்கள். இவர்கள் அல்பா தலைமுறைக்கு மிக அண்மையில் இருப்பதால் அல்பா பிள்ளைகளின் இயல்புகளும் கலந்திருக்கும்.
1981 முதல் 1996 வரை பிறந்தவர்கள் எக்ஸ் தலைமுறையினர் (Generation X). இவர்களின் பிள்ளைகளே அல்பா தலைமுறையினராக இன்று பாடசாலைகளில் அதிகம் உள்ளனர். அதனால் அல்பா தலைமுறையினரின் இயல்புகள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதன் மூலம் அவர்களை வழிப்படுத்த முன்வர வேண்டியது ஆசிரியர் மற்றும் பெற்றோர் மீது உயரிய கடமையாகின்றது.
மாறாக மரபார்ந்த அல்லது பழமையான முறைகளில் பிள்ளைகளை வழிப்படுத்த முற்படும்போது அவர்களுடனான நல்லுறவு முறிவடைதல், அவர்களில் நடத்தைப் பிறழ்வு ஏற்படல் போன்ற தவிர்க்க முடியாத – கசப்பான அனுபவங்களுக்கு வாய்ப்புண்டு. இயல்புகளுக்கு எதிராக செயற்படுவது பின்தங்கிய அல்லது ஸ்தம்பித நிலையை ஏற்படுத்திவிடும்
அல்பா தலைமுறைப் பிள்ளைகளின் பண்புகள் குறித்து பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. 21 ஆம் நூற்றாண்டின் முதல் தலைமுறையான அல்பா கிரேக்க மொழியின் முதல் எழுத்தாகும். 2010 ஆம் ஆண்டில் iPad மற்றும் Instagram அறிமுகமான காலத்தில் பிறந்த பிள்ளைகளே அல்பா தலைமுறையினர் ஆவர். இதனால் இவர்கள் பிறந்தது முதல் Online இல் இருப்பவர்களாக உள்ளனர்.
Covid – 19 காலத்தில் குழந்தைகளாக இருந்த இவர்கள் அதிகமாக பெற்றோர்களுடன் வீட்டிலேயே காலங் கடத்தினர். வெளியிலோ பாடசாலைக்கோ செல்ல முடியாத நிலையில் கைக்கணிணிகளிலும் (Tablet computer), Android வகை போன்களிலும் அதிக ஈடுபாட்டையும் பரிட்சயத்தையும் கொண்டிருந்தனர். Online வகுப்புகளில் அதிகமதிகம் கற்றுக் கொண்டர். ஒன்லைன் ஷொப்பிங் செய்யத் தொடங்கினர்.
இவர்கள் பல்வேறுபட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் (ICT) திறன்களைப் பயன்படுத்தி Audio, Vedio, Text மூலமான பரிமாற்றத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர். இதனால் அல்பா தலைமுறையை கோவிட் தலைமுறை (Generation Covid) என்றும் குறிப்பிடுவர். சுருக்கமாக Gen C என்பர்.
படிப்படியாக செயற்கை நுண்ணறிவும் (Artificial Intelligence) ரோபோக்களின் (Robot) பயன்பாடும் அதிகமாகும். ‘செயற்கை நுண்ணறிவு’ (AI) என்பது மனிதனைப் போன்ற நுண்ணறிவு கொண்ட இயந்திரத்தை உருவாக்கும் கணிணி விஞ்ஞானமாகும். அதாவது மனிதனைப் போல் சிந்தித்து செயலாற்றும் வல்லமை கொண்ட கணிணிகளை உருவாக்கும் கல்வியாகும்.
உலகில் எங்கும் எதிலும் தொழில்நுட்பம் வியாபித்திருக்கும். இத்தகைய வழியிலமைந்த கல்விப் புரட்சியே 4.0 என அறியப்படுகிறது. அதாவது 4 ஆம் தொழிற் புரட்சியாகும் (4th industrial revolution) வேலைக்கேற்ற திறன்களை வழங்கும் கல்வி முறையாக இன்று இது பிரசித்தமாகியுள்ளது.
சிறு குழந்தைகளை அமைதிப்படுத்த அவர்களிடம் தாய்மார் Android வகை போனைக் கொடுக்கின்றனர். வீட்டில் தாயும் தந்தையும் எப்போதும் போனில் பொழுதைப் போக்குகின்றனர். சமூகம் முழுவதுமாக போனில் மூழ்கியிருக்கின்றது. வீட்டிலும் சமூகத்திலும் Android தொலைபேசி வகைகள் சாதாரண பாவனையில் இருக்கும் போது பிள்ளைகளை அதிலிருந்து தூரமாக்கி வைத்திருக்க முடியாது. அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்திப் பழக வேண்டும்.
போனில் எனக்குத் தெரியாததெல்லாம் என் பிள்ளைக்குத் தெரிகிறது, என் பேரப் பிள்ளைக்குத் தெரிகிறது என்றெல்லாம் இன்று பெற்றோரும் பாட்டன் பாட்டியும் சொல்லக் கேட்கிறோம். அத்தனை நுட்பமானவர்களாக இக்காலப் பிள்ளைகள் இருப்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்வோம்.
பிள்ளைகளும் பெற்றோரும் ஒன்றாக வாழ்ந்தாலும் இருவரது உலகமும் உண்மையில் வேறான பார்வையும் போக்கும் உடையன. பெற்றோர் இந்த விடயத்தில் அறிவூட்டப்பட வேண்டும். ஆசிரியர்கள் தம்மை Update பண்ணிக் கொள்ள வேண்டும். தத்தமது பாடத்துறையில் நிபுணத்துவமாகிக் கொள்வதோடு காலத்திற்கேற்ப மாணவர்களை வழிப்படுத்தும் புதிய ஒழுங்குகளையும் ஏற்று உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
அறிவார்ந்த சமூகத்தைக் கொண்டுள்ள நாடுகள் இந்த விடயத்தில் தமது பிள்ளைகளை வழிப்படுத்த எப்போதும் உஷாராகி விடுகின்றன. சிறந்த ஆட்சிமுறையும் பொருளாதாரமும் அறிவார்ந்த சமூகமும் இதற்கு அவர்களுக்கு உதவுகின்றன. பிள்ளைகளை மகிழ்விக்கக் கூடிய – ஆளுமைத் திறன்களை விருத்தி செய்யக்கூடிய – செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை அங்கு நடைமுறையில் உள்ளது.
Smart phone, Smart board, Smart TV மூலமாக YouTube மற்றும் Zoom போன்ற வேறுபட்ட தொலைதூர வகுப்புகள் (Remote classrooms), கலப்புக் கற்றல் (Hybrid learning), நெருக்கடியற்ற – நெகிழ்வுத் தன்மையான நேரம் – இடம் – பரீட்சை முறை என்பன அந்நாடுகளின் கல்வி முறையில் பிரசித்தமாகியுள்ளன.
நம் நாட்டைப் பொறுத்தவரை மேற்படி கற்றல் – கற்பித்தல் முறை தவழ்ந்து வரும் குழந்தைப் பருவத்தில் இருக்கிறது. பாடசாலை மட்டத்தில் அதிபர், ஆசிரியர்கள் தமது சரியான இருப்பைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் நிருவாக மற்றும் கற்றல் – கற்பித்தல் முறை நவீனமயப்படுத்தப்பட வேண்டும்.
இல்லையேல் நடைமுறையிலிருக்கும் பாடசாலைக் கல்வி ஒழுங்கு முறை படிப்படியாக நலிவடைந்து செல்வதைத் தவிர்க்க முடியாமற் போகும். இதனால் இன்று தனியார் கல்வித்துறை இவ்விடைவெளியை பயன்படுத்தி வேகமாக வளர்ச்சியடையத் தொடங்கி விட்டன. அரசும் அதற்கு அங்கீகாரம் வழங்கி வரும் கட்டத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. இதுவொரு வகையில் முதலாளித்துவத்தையும் வளர்த்து வருகிறது.
அதிநவீனத்துவம் இன்று உச்சந்தொட்டு விட்டதால் அல்பா தலைமுறைப் பிள்ளைகளின் உலகம் வெகுவாக சுருங்கிப் போனது. அவர்களின் வேகம், விவேகம், ஆயுள், செல்வம் அதிகரித்து வருகிறது. 21 ஆம் நூற்றாண்டு அல்பா தலைமுறையினரின் Digital மயமான உலகாக அசுர வேகத்தில் மாறி வருகிறது.
Muhuseen Raisudeen MEd