ADVERTISEMENT
ADVERTISEMENT

மனநலம் (Mental health)

மனநலமும் உடல் நலத்தைப்போன்று முக்கியமானதே. உடலும் மனமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. உடலுக்கு நோய் ஏற்பட்டால் அது மனதைப்பாதிக்கும். மனநலம் பாதிக்கப்பட்டால் அது உடலில் தாக்கங்களை ஏற்படுத்தும். ஆகவே தான் October  10ம் நாள் “உலக மனநல தினமாக” பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டு தோறும் அனுஷடிக்கப்படுகிறது.

மனநலம் (Mental health)

மனநலம் என்பது ஒருவர் தன்னைத் தன்னோடும் சமூகத்தோடும் இணைத்துக் கொள்ளக்கூடிய திறனை அல்லது வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கக்கூடிய திறனைக் குறிக்கின்றது. மனநலம் என்பது “உடல், உள, ஆன்மீக, பொருளாதாரம் என பன்முக அம்சங்களிலும் சமநிலையைப் பேணக்கூடிய ஒரு மனம் சார்ந்த ஆரோக்கிய நிலையாகும்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி மனநலம் என்பது “ஒரு நபர் தனது சொந்தத்திறன்களை உணர்ந்து, வாழ்க்கையின் இயல்பான அழுத்தங்களைச் சமாளிக்கக்கூடிய, செயற்றிறனோடு சமூகத்திற்கு ஒரு நல்ல பங்களிப்பை வழங்கக் கூடிய நல்வாழ்வு நிலை” என்று வரையறுக்கப்படுகின்றது. இது மேலும் மனநலம் என்பது ‘மனக்கோளாறுகள் இல்லாத நிலை மட்டுமல்ல’ எனவும் வலியுறுத்துகின்றது.

மனநோய்கள் இல்லாத நிலையே மனநலம் என நம்மில் பலர் தவறான புரிதலோடு காணப்படுகின்றனர். மனநலம் என்பது நமது அறிவு, ஆற்றல், நடத்தை மற்றும் உணர்ச்சி நல்வாழ்வு என்பவற்றையே குறிக்கின்றது. இது நாம் எப்படிச் சிந்திக்கின்றோம். உணர்கின்றோம். நடந்து கொள்கின்றோம். என்பது பற்றியது மன அழுத்தங்களை எப்படிக் கையாளுகின்றோம். மற்றவர்களுடன் எப்படித்தொடர்பு கொள்கின்றோம், எவ்வாறு தேர்வுகளை மேற்கொள்கிறோம் என்பதையும் எமது மனநலமே தீர்மானிக்கின்றது. சிறு வயது முதல் வயோதிபம் வரை ஒவ்வொரு கட்டத்திலும் மனநலம் முக்கியமானது

நாம் சிறந்த மனநலத்துடன் இருப்போமானால் 

• மன அழுத்தங்களை மேற்கொள்ளல்

• உறவுகளைக் கட்டியெழுப்புதல்

• சவால்களைச் சமாளித்தல்

• வாழ்க்கையின் பின்னடைவுகள் கஸ்டங்களிலிருந்து மீளுதல்

போன்ற திறன்களை உடையவர்களாகக் காணப்படுவோம்.

வலுவான மனநலம் என்பது ‘மனச்சோர்வு, பதட்டம், உளவியல், பிரச்சினைகள் இல்லாமல் இருப்பது என்பதை விட நேர்மறையான எண்ணப்பண்புகளை கொண்டிருப்பதையே’ பெரிதும் குறிக்கின்றது.

சிறந்த வலுவான மனநலத்தின் செயற்பாடுகள்

• மனநிறைவுடன் காணப்படுதல்

• வாழ்வதற்கான ஆர்வத்தையும், தேடலையும் கொண்டிருத்தல்

• நகைச்சுவை உணர்வு காணப்படுதல்

• மன அழுத்தங்களை இலகுவில் மேற்கொள்ளும் திறன்

• புதிய விடயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுதல்

• வேலை, ஓய்வு, விளையாட்டு போன்ற செயற்பாடுகளில் சமநிலையைப்  பேணும்  திறன்

• தன்னம்பிக்கை

• அதிக சுயமரியாதையை வெளிப்படுத்தல்

மனநலப்பாதிப்பு

வளர்ச்சியடைந்த நாடான அமெரிக்காவில் ஐந்து பேரில் ஒருவர் அல்லது மொத்த சனத்தொகையில் 18.5%ஆனோர் மனநலப்பாதிப்புக்கு உள்ளாவதாக அந்நாட்டின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  (Research Results from: National Alliance on Mental Illness USA) இவ்வாறே இன்றைய உலகில் வாழும் மனிதர்களில் பெரும் எண்ணிக்கையானோர் மனநலப் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்.

ஆய்வு முடிவுகளின் படி Depression, Anxiety, Dementia, Bipolar, Disorder, Eating Disorders, Schizophrenia  என்பன மனநலப் பாதிப்பை உணர்த்தும் பொதுவான சில நோய்களாகும்.

இவைகளில் மனச்சோர்வு (Depression) உலகம் முழுவதிலும் முதலிடத்தில் இருக்கின்றது. உலகளாவிய நோய்களுக்கு முழுப்பங்களிப்பையும் மனச்சோர்வே செய்கின்றது. மனச்சோர்வு மனநலப்பாதிப்பின் அத்திவாரமாகக் காணப்படுகின்றது.

மனநலப்பாதிப்பு ஒவ்வொரு தனி நபரையும் அவர்களது குடும்பங்களையும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சமூக மற்றும் நிதி ரீதியாகவும் பெரிதும் பாதிக்கின்றது. மனநலப்பாதிப்பு என்பது இனம், கலாச்சாரம், மொழி, வயது, பாலினம் என்பவற்றைக் கடந்து அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்க வல்லது

மனநலத்தைப் பாதிக்கும் காரணிகள்

• மரபணுக்கள், மூளை வேதியல் போன்ற உயரியல் காரணிகள்

• சமூகப்புறக்கணிப்பு தனிமைப்படுத்தப்படுதல்

• அதிர்ச்சி, துஸ்பிரயோகம், விபத்துப் போன்ற வாழ்க்கை அனுபவங்கள்

• மனநலப்பிரச்சினைகளின் பரம்பரைப்பாதிப்புக்கள்

• அதிக மன உளைச்சல்

• குடும்பம், நண்பர்கள், பணியிடத்தில் ஏற்படும் பிரச்சினைகள்

• நீடித்த மனச்சோர்வு மற்றும் பயம்

• போதுமான தூக்கமின்மை

• கல்வி, தொழில், எதிர்காலம் பற்றிய குழப்பங்கள்

• கருத்துக்களை வெளிப்படுத்தும் போது நிராகரிக்கப்படுதல்

• விருப்பங்கள், திறன்கள் வெளிக்கொணர முடியாத நிலை

• சுயகௌரவம் நிராகரிக்கப்படல்

• வறுமை, கடன், இழப்புக்கள் போன்ற பொருளாதார நெருக்கடிகள்

• மரணம் போன்ற ஈடு செய்ய முடியாத இழப்புக்கள்

மேற்கூறப்பட்ட காரணிகள் ஒவ்வொரு தனிநபரிலும் ஏற்படுத்தும் தாக்கங்கள் மனநல இழப்பினை நோக்கி அவர்களை அழைத்துச் செல்கின்றன.

மனநலம் பாதிக்கப்பட்டமைக்கான அறிகுறிகள்,வெளிப்பாடுகள்

ஒவ்வொரு நோய்க்கும் அதற்கதற்குரிய அறிகுறிகள் வெளிப்படுவது போல மனநலம் பாதிக்கப்படும் போதும் மனிதர்கள் சில அறிகுறிகளை உணர்ந்து கொள்ளலாம்

• மிக அதிக,குறைந்த உணவு உட்கொள்ளுதல்

• மக்களிடமிருந்தும் வழக்கமான செயற்பாடுகளிலிருந்தும் விலகியிருத்தல்

• ஆற்றல்களை வெளிக்கொணர முடியாத நிலை

• எதையும் முக்கியமாக கருதாத உணர்ச்சியற்ற நிலை

• அதிக மது, புகை மற்றும் போதைப்பாவனை

• வழக்கத்திற்கு மாறான குழப்பம், மறதி, கோபம், கவலை மற்றும் பயம்

• குரல்களைக் கேட்பது,உண்மையற்ற விடயங்களை நம்புவது

• வேலைக்குச் செல்லல், குடும்பத்தைப் பராமரித்தல் போன்ற அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமை

• நகைச்சுவை உணர்வை இழத்தல்

• உறவுகளில் சிக்கல்களை ஏற்படுத்தும் கடுமையான மனநிலை மாற்றங்களை அனுபவித்தல் (குடும்ப அங்கத்தவர்களுடனும் நண்பர்களுடனும் இயல்பு நிலையில் உறவாட முடியாத நிலை,கத்துதல்,சண்டையிடுதல்)

• தனிமையை அதிகம் நாடுதல்

• சுய அழிவை விரும்புதல்,அது பற்றித் தொடர்ந்து பேசுதல்

மனநல மேம்பாடு

எல்லா மனிதர்களும் மனநலப்பிரச்சினைகள் மூலம் பாதிக்கப்படுகின்றனர். மனநலப் பாதிப்புக்கள் பொதுவானவை என்றாலும் பெரும்பாலான மனிதர்கள் அவற்றை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுப்பதில்லை என்பதே வருந்தத்தக்க உண்மையாகும். எமது மனநலம் சார்ந்த பிரச்சினைகளை நாம் புறக்கணிக்கின்றோம். உடல் நலத்தைப் பராமரிப்பதிலும் பாதுகாப்பதிலும் காட்டும் அக்கறையை மனநலப்பராமரிப்பில் நாம் காட்டுவதில்லை.

சிலர் மனநல மேம்பாட்டில் அக்கறை செலுத்துவதை விட்டு மது, போதை போன்ற சுய அழிப்பு செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்து விடுகின்றனர். உடல் ஆரோக்கியத்தைப் பேண எவ்வாறு முயற்சி தேவைப்படுகிறதோ, அவ்வாறே மனநலத்தைப் பேணிப் பாதுகாக்கவும் எமது முயற்சி அவசியமாகின்றது.

இன்றைய உலகில் வலுவான மனநலம் பேண மனிதர்கள் கடினமாக உழைக்க வேண்டிய தேவை நிலவுகிறது.

 

நாம் மனநலத் தேவைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்காமைக்கான காரணங்கள்

• சமூகத்தில் மனம் சார்ந்த பாதிப்புக்கள் பலவீனத்தின் அடையாளமாக கருதப்படுதல்

• சமூகம் மனநலப்பாதிப்புக்களைத் தவறாகப் புரிந்து கொள்ளல்

• ஆண்களில் பெரும்பாலானோர் மனநலப்பாதிப்புக்களுக்கான உதவியை நாடாமல் தமது உணர்வுகளைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் (மது, போதை)

• நவீனயுகத்தில் சிக்கலான பிரச்சினைகளுக்கு எளிய தீர்வுகளை தேட முயற்சித்தல் உண்மையான உறவுகளிடத்தில் பிரச்சினைகளுக்கான தீர்வைத் தேடாமல் சமூக வலைத்தளங்களை நாடுதல்

• மனச்சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்களுக்கான அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது மருந்துகளை நாடுதல்

• மனநலப்பாதிப்புக்களுக்கு தரப்படும் மருந்துகள் பக்கவிளைவுகளை உண்டாக்குமென கருதுதல்

• மனநலச்சிகிச்சை நீண்ட படிமுறைகளைக் கொண்டதாக அமையும் என எண்ணுதல்

மேற்கூறப்பட்ட காரணங்களால் மனிதர்கள் மனநல பாதிப்பின் அறிகுறிகளை அலட்சியம் செய்வதோடு, அப்பாதிப்பில் இருந்து தம்மைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபாடு காட்டாது மனநலமேம்பாட்டு சிகிச்சைகளுக்கும் பின்வாங்குகின்றனர்.

 

உளநலப்பாதிப்பிலிருந்து மீள்தல் (Recovery)

மனநலப் பாதிப்புக்குள்ளானால் நாம் சில தொடர்ச்சியான காத்திரமான செயற்பாடுகளில் எம்மை ஈடுபடுத்திக்கொள்வது அவசியமானதாகும்.

சமூக உறவுகளுக்கு முன்னுரிமை கொடுத்தல்

• மனிதன் ஒரு சமூகப்பிராணி ஆவான். மனித மனம் தனிமையை விரும்புவதில்லை உறவுகளை நாடும் தன்மையை உடையவன் ஆகவே தனது நம்பிக்கைக்குரிய கருத்துக்களை நன்றாக செவிமடுப்பவர்  ஒருவருடன் உணர்வுகளைப்பரிமாறிக் கொள்ள நேரம் ஒதுக்குதல் வேண்டும்.

• தொடர்ச்சியான கணினி மற்றும் தொலைபேசிப் பாவனையிலிருந்து வெளியேறுதல்

• சமூகத்திலுள்ள குழுக்கள், கழகங்கள், அயலவர்கள் என தொடர்புகளை விரிவுபடுத்தல் வழியில் கடக்கும் ஒவ்வொருவரிடமும் புன்னகைத்தல், நலம் விசாரித்தல் என்பவற்றை பழக்கமாக்கிக்கொள்ளல்

சுறுசுறுப்பாக இருத்தல்

மனமும் உடலும் உள்ளார்ந்த இணைப்பை உடையன உடலில் ஆரோக்கியம் பேணப்படும் போது மனநலமும் நன்கு பேணப்படும். ஆகவே சுறுசுறுப்பாக இயங்குதல்,உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல், மன அழுத்தத்தைக் குறைக்கும், நன்றாகத் தூங்க உதவும். நினைவாற்றலை அதிகரிக்க உதவும்.

• நாளாந்த உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல்

• ஓடுதல், நீந்துதல், நடனம் போன்றவற்றில் ஈடுபடுதல்

• விளையாட்டுக்குழுக்களில் பங்குபெறல்

• புத்தாக்கச் செயற்பாடுகளில் ஈடுபடுதல்.

மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தல்

மன அழுத்தம் மனநலப்பாதிப்பின் பிரதான காரணி என்பதால் அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது அவசியமானதாகும். அதாவது மன அழுத்த மேலாண்மை யுக்திகளைக் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும்.

• நண்பர்கள்,அக்கறை கொண்டோரிடம் பேசுதல்

• ஓய்வுக்கென தினமும் நேரம் ஒதுக்குதல்

• புலன்கள் இசைவாக்கம் அடையும் செயற்பாடுகளைக் கண்டறிந்து அவற்றில் ஈடுபடுதல்

• (பாடல், கேட்டல், பிடித்த வாசனையை நுகருதல், பந்தை அழுத்தல், இயற்கையை இரசித்தல்)

• நல்ல விடயங்களை மட்டும் சிந்தித்தல்

• தியானம், பிரார்த்தனை, யோகா போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுதல்

மனவலுவை அதிகரிக்க வல்ல உணவுகளை உட்கொள்ளல்

ஆரோக்கியமான உணவுகள் மனவலுவைப் பேணப்பெரிதும் உதவுகின்றன. ஆரோக்கியமற்ற உணவுகள் மூளை மற்றும் மனநிலைiயைப் பாதிக்கும். சக்தியைக் குறைக்கும். தூக்கத்தை சீர்  குலைக்கும் நோயெதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் ஆகவே,

• மனநிலையை பாதிக்கும் உணவுகளான Caffeine,Alcohol, இனிப்புப்பதார்த்தங்கள், இரசாயனச்சுவையூட்டிகள் அதிகம் கலந்த உணவுகள், பொரித்த உணவுகள் என்பவற்றைத் தவிர்த்தல் நன்று

• மனநிலையைப் பாதுகாக்கும் உணவுகளான

கடலுணவுகள், நிலக்கடலை, இலைக்கறி வகைகள், அவரை போன்ற காய்கறிகள் பழங்கள் என்பவற்றைத் தினமும் உணவில் சேர்த்தல்

போதுமான தூக்கம்

மனநலம் மேம்பாடடைய போதுமான தூக்கம் அவசியம் ஆகும். தூக்க இழப்பு மனநலம,; உடல் நலம் இரண்டையும் பெரிதும் பாதிக்கின்றது

• ஒருவர் தினமும் 6 – 7 மணித்தியாலங்கள் தூக்கம் கொள்ளுவதை உறுதி செய்தல்

• தூங்கச் செல்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக தொலைபேசி, கணினி, தொலைக்காட்சிப் பயன்பாட்டை நிறுத்ததுதல்

• ஆழ்ந்த உறக்கத்திற்காக சூடான குளியல், மிதமான இசை, அமைதியான சூழல் என்பவற்றை ஏற்படுத்தல்

• தளர்ந்த உடைகளை அணிதல்

• பிரார்த்தனை செய்து தூங்கச் செல்லுதல்

வாழ்க்கையின் நோக்கத்தை அர்த்தத்தைப் புரிந்து கொள்ளல்

• தனக்கும் தன்னுடன் இருப்பவர்களுக்கும் பயன்தரும் வாழ்க்கையை வாழ முயற்சித்தல் உறவுகள் நண்பர்களுக்கென நேரம் ஒதுக்குதல்

• செல்லப்பிராணிகளை வளர்த்தல்

• சமூகப்பணிகளில் ஈடுபாடு காட்டுதல்

• வயோதிபர், குழந்தைகள், இயலாமையுடையோரிடம் விசேட அன்பு, அக்கறை காட்ட முயற்சித்தல்

தொழில் முறை உதவிகளை நாடுதல்

மேற்கூறப்பட்ட அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் மனநலம் மேம்பட அல்லது மனநலப்பாதிப்பில் இருந்த விடுபட தொழில் முறை ஆலோசனைகளைப்பெறுதல் முக்கியமானதாகும்.

• அக்கறையுள்ள ஆலோசனை நிபுணரிடம் ஆலோசணை பெறுதல்

• வைத்திய உதவி தேவைப்படின் மனநல வைத்தியரை நாடுதல்

மேற்கூறப்பட்ட படிமுறையான செயற்பாடுகளை முறையாகப் பின்பற்றுதல் வலுவான மனநலத்திற்கான காத்திரமான வழிமுறையாக அமையும்.

 

உள ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்

உளநலத்தின் அனுகூலங்கள்

எமது மனம் நலமாக இருக்குமாயின் பல நன்மைகளை தாம் அனுபவிக்கலாம் வாழ்வையே வெற்றியுடன் கொண்டு செல்லலாம்.

• பதட்டம் இல்லாமல் இருக்கும்,குறையும் (Reduction of Anxiety)

• தெளிவான சிந்தனை இருக்கும்  (Clear Thinking)

• உள்ளார்ந்த அமைதி இருக்கும் (Inner Peace)

• சுய கௌரவத்தை பாதுகாத்தல்,அதிகரித்தல் (Develop Self Esteem)

• மனச்சோர்வினால் ஏற்படும் சிக்கல்கள் குறையும்(Reduction Risk of Depression)

• உறவுகள் மேம்படும்  (Improvement in Relationships)

• கூர்மையான நினைவாற்றல் இருக்கும் ; (Sharp Memory)

• சிறந்த தூக்கம் (Deep Sleep)

• தனிப்பட்ட திறன்களில் முன்னேற்றம்  (Development of Inter Personal Skills)

• தனிமையிலிருந்து வெளியேறுதல் (free from isolation)

• வேலை மற்றும் வாழ்க்கையில் திருப்தி (Satisfaction in Life & Work)

• முடிவெடுக்கும் ஆற்றல் அதிகரிக்கும்(Improvement in Decision Making)

மனநலம் பேணப்படும் போது இவை போன்ற சிறந்த அனுகூலங்களைப் பெற்று சிறப்புமிக்க தனிநபராக மிளிரலாம். ஆகவே மனநலத்தின் முக்கியத்துவம் ஒவ்வொரு மனிதனாலும் உணரப்பட வேண்டியதொன்றாகும்.

எமது மனநலத்தைப் பாதுகாப்பது எம்மைச்சுற்றி உள்ள உலகத்தையும் மேம்படுத்துகின்றது. நம் மனநலத்தின் நிலை நமது வாழ்க்கை, தொழில், உறவுகள், நண்பர்கள், சமூகம் என எல்லாவற்றையும் பாதிக்கின்றது. ஆகவே மனநலத்தின் முக்கியத்துவம் உணர்ந்து மனநலம் காப்போம். பிறர் மனநலம் காக்கவும் கைகொடுப்போம்.

 

Related Posts

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

ADVERTISEMENT
error: Content is protected !!