கல்வியமைச்சினால் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்ட மடிகணனிகளின் பாவனை பாடசாலை மட்டங்களில் எந்தளவு தூரம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்ற அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாடசாலைகளின் நிர்வாக வேலைகளை இலகுபடுத்துவதற்காகவும் வினைத்திறனான சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வேண்டியும் ‘ஒரு கணனியேனும் இல்லாத பாடசாலைகளுக்கு கணனியொன்றை பெற்றுக்கொடுத்தல்’ என்ற தேசிய திட்டத்தின் கீழ் கல்வியமைச்சு மாகாணக் கல்வித் திணைக்களங்களின் ஊடாக பாடசாலை அதிபர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த மடிகணனிகள் அதிபர்களின் சொந்த வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், சில பாடசாலைகளில் இன்னமும் மடிகணனிகளை பயன்படுத்தாமல் அலுமாரிக்குள் மறைத்து வைத்திருப்பதாகவும், வலயக்கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்படுகின்ற அதிபர் கூட்டங்களுக்கு அதிபர்கள் மடிகணனிகளை கொண்டுவராமல் விடுவதனாலும் பல்வேறுபட்ட சந்தேகங்களை களையும் நோக்கில் கல்வியமைச்சு குறித்த அறிக்கையினைக் கோரியுள்ளது.
இவ்வாறு வலயக்கல்வி அலுவலகங்களினால் சேகரிக்கப்படும் அறிக்கைகள் இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வியமைச்சுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மடிகணனிகளை பாடசாலைகளில் பரிசோதனைக்குட்படுத்தும் வேலைத்திடங்கள் நடைபெறுகின்றதா எனக்கண்டறியவும், மடிகணனிகளை பயண்படுத்தி பாடசாலைகளில் பெற்றுக்கொள்ளும் வேலைகளை கண்டறிவதற்காகவும், இலத்திரனியல் தபால் விடய முன்னேற்றத்தில் அதிபர்கள் எந்தளவு தூரம் முன்னேறியிருக்கிறார்கள் என்பதை கண்டறியவும் இந்த அறிக்கைகள் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. (Thinakaran)