அனைத்துப் பாடசாலைகளுக்கும் உடல் வெப்ப நிலையை அளக்கும் கருவிகள் வழங்கப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அகலபெரும தெரிவித்துள்ளார்.
இன்று மாத்தறையில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான திகதியை அடுத்த வாரத்தில் தீர்மானிக்க முடியுமாக இருக்கும். இப்போதே திகதியைத் தீர்மானிக்க முடியாது.
பாடசாலைகளளை ஆரம்பிப்தைக் கட்டங்கட்டமாக முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.
உள்ளுராட்சி மன்றங்களின் ஒத்துழைப்போடு பாடசாலைகள் முற்று முழுதாக கிருமி நீக்கம் செய்யப்படும். அதன் பின்னர் மூன்று நாட்கள் முற்றாக மூடி வைக்கப்படும்.
அதன் பின்னர், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாத்திரம் வரவழைக்கப்படுவர். அதனை அடுத்து உயர் தர மற்றும் க.பொ.த சாதாரண தர மாணவர்கள் வரவழைக்கப்படுவர்.
அதன் பின்பே ஏனைய மாணவர்கள் அழைக்கப்படுவர் என கல்வி அமைச்சர் விளக்கினார்.
அத்தோடு, அனைத்துப் பாடசாலைகளுக்கும் உடல் வெப்பநிலையை அளவிடும் கருவியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், 200 க்குக் குறைவான மாணவர்கள் கொண்ட பாடசாலைக்கு ஒரு கருவியும் 200 முதல் 500 மாணவர்கள் கொண்ட பாடசாலைக்கு இரு கருவிகளும் 500 க்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைக்கு 3 கருவிகளும் என மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கருவிகள் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
பாடசாலைக்கு நுழையும் ஒவ்வொரு மாணவரும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.