இந்த வருடம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை மற்றும் இலத்திரனியல் கடவுச்சீட்டு என்பவற்றை பிரதேச செயலகங்களில் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டு மற்றும் மாகாண சபை மற்றும் மாகாண நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கேற்ப நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களிலும் தேசிய அடையாள அட்டையும் அனைத்து மாவட்ட அரச அதிபர் காரியாலங்களிலும் கடவுச் சீட்டையும் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.
அடையாள அட்டை மற்றும் கடவுச் சீட்டு பெற்றுக் கொள்வதற்காக கொழும்பிற்கு வருவதன் மூலம் மக்கள் எதிர் நோக்கும் சிரமங்களைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அமைச்சர் ஜே. சீ. அலவதுகொட தெரிவித்தார்.
இந்த வருடத்தின் நடுப்பகுதியில் இருந்து இச்செயன்முறை ஆரம்பமாகும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
அவ்வாறே பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் முதலானவற்றை நாடு முழுவதும் காணப்படும் 185 பிரதேச செயலகங்களில் மிக இலகுவாக உடனடியாகப் பெற்றுக் கொள்ள முடியும். நாட்டில் காணப்படும் 332 பிரதேச செயலக காரியாலயங்களிலும் இச்சேவையை மிக விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம் என்றும் இவ்வருடத்திற்குள் இச்சேவைகள் அனைத்தும் அமுலுக்கு வந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.