பாடசாலைக்குள் நுழையும் அனைத்து மாணவர்களுக்கும் தனியான அடையாள இலக்கம் (SIN) வழங்குவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
தற்போது பாடசாலை முறைமையினுள் உள்ள 43 லட்சம் மாணவர்களில் 32 லட்சம் மாணவர்களின் தரவுகளை கல்வி அமைச்சு தற்போது தொகுத்துள்ளதாகவும் ஏனையவர்களின் தகவல்களை திரட்டுவதற்கான பொறிமுறை இயங்குவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாணவரும் பாடசாலையில் சேரும் போதே அவருக்கு மாணவர் அடையாள இலக்கம் வழங்கப்பட்டுவிடும். அவரது பாடசாலைக் காலம் முழுவதும் குறித்த அடையாள இலக்கத்திலேயே அனைத்து விடயங்களையும் மேற்கொள்ள வேண்டும்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ. த சாதாரண தரம், க.பொ.த உயர் தரம் முதலான பரீட்சைகளுக்கும் மாணவர் அடையாள இலக்கங்களையே பயன்படுத்த வேண்டும். இது தொடர்பாக பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
அத்தோடு, வெளிக்கள செயற்பாடுகள், போட்டிகள் முதலானவற்றின் போதும் ஒவ்வொரு மாணவரும் தனியான அவருக்குரிய அடையாள இலக்கத்தினூடாகவே பங்குபற்றுவார்கள் என கல்வி அமைச்சர் விளக்கமளித்தார்.
எந்த அரச அலுவலகத்திற்குச் சென்றாலும் மாணவர் அடையாள இலக்கத்தை வழங்கினால் போதும். குறித்த மாணவர் தொடர்பான அனைத்து விடயங்களையும் முகாமைசெய்யப்படும் தரவுத்தளத்தினூடாக பார்ப்பதற்கு முடியுமாக இருக்கும் என்றார்.
இன்று பகல் கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.