அரசாங்கம் என்ற ரீதியில் பாடசாலைகளுக்கு வழங்கக்கூடிய ஆகக்கூடிய பாதுகாப்பை வழங்கியிருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் அமைச்சர் உரையாற்றுகையில் இந்த விடயங்களை குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நிலையியல் கட்டளை 27 (2 இன் கீழ்) சபையில் முன்வைத்த கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பதிலளித்தார். பாதுகாப்பு வேலி அல்லது காவலாளிகளை வழங்கி பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமா என்று பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும், மேற்படி குறைபாடுகளுள்ள பாடசாலைகளை இனங்கண்டு, பாதுகாப்பு வேலி அல்லது சுற்று மதில்களை அமைப்பதற்கும், காவலாளிகள் இல்லாத பாடசாலைகளுக்கு அவ்வசதியை எற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க முடியுமா? என்று பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை பாதுகாப்பு பிரிவுகளினால் பாதுகாப்பை உறுதிசெய்த பின்னரே ஆகும் என்றும் தெரிவித்தார். இந்த பிரிவினர் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
தொடர்ச்சியாக பாடசாலைகளை மூடி வைத்திருக்க முடியாது . நேற்றைய தினம் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை குறைவாக காணப்பட்டது. இருப்பினும் மீண்டும் வழமைக்கு திரும்பும் அனைத்து பாடசாலைக்கும் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மேலும் உரையாற்றுகையில் :
பாடசாலைகளுக்கு விஷேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பினும் அடிப்படைப் பாதுகாப்பு என்பது பாடசாலைகளுக்கு அத்தியவசியமாகின்றது. அந்த வகையில் பார்க்கின்ற போது, நாட்டில் அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றிய நிலையில் பல பாடசாலைகள் காணப்படுவதாக கல்வித் திணைக்கள கல்விசாரா ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதன் பிராகரம் பார்க்கின்றபோது, நாட்டில் செயற்பட்டுவருகின்ற தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளில் 95 வீதமான பாடசாலைகளுக்கு பாதுகாப்பு வேலி அல்லது சுற்று மதில்கள் இல்லை என்றும், 25 வீதமான பாடசாலைகளுக்கு காவலாளிகள் நியமிக்கப்படவில்லை எனவும் தெரிய வருகின்றது.
பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்துகின்றபோது, தற்போதைய நிலையில் மட்டுமல்ல, எப்போதைக்குமே மேற்படி அடிப்படை பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அந்த வகையில், நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும், மேற்படி குறைபாடுகளுள்ள பாடசாலைகளை இனங்கண்டு, பாதுகாப்பு வேலி அல்லது சுற்று மதில்களை அமைப்பதற்கும், காவலாளிகள் இல்லாத பாடசாலைகளுக்கு அவ்வசதியை எற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க முடியுமா? என்பதுடன் எனது கேள்விக்கான பதிலையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என்ற கருத்தை தெரிவித்தார்.
(அரச தகவல் திணைக்களம்)
(அரச தகவல் திணைக்களம்)