அரசாங்க பாடசாலைகளின் தரம் 6 தொடக்கம் 13 வரையான மும்மொழிமூல மாணவர்களுக்கும் 02 ஆம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து இரண்டாம் தவணைக்காக நேற்றைய தினமே பாடசாலைகள் ஆரம்பமாகின. எனினும், மாணவர்களின் வரவு பெரும் வீழ்ச்சி கண்டிருந்ததுடன் சுமார் 10 சதவீதமான மாணவர்களே நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு சமுகமளித்திருந்ததைக் காணமுடிந்தது.
தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு மே 06 ஆம் திகதி முதல் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்திருந்தார். அதற்கமையவே நேற்றைய தினம் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டன.
இதேவேளை, கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுவதையிட்டு நாடு முழுவதுமுள்ள அனைத்துப் பாடசாலைகளதும் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சர் உத்தரவாதம் அளித்திருந்தார்.
பொலிஸாரும் இராணுவத்தினரும் மோப்ப நாய்களின் உதவியுடன் பாடசாலைகள் முழுவதும் விசேட தேடுதல் நடத்தியிருந்ததுடன் பாடசாலைதோறும் ஆகக்குறைந்தது ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் வீதம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பாடசாலைக்குள் வருகை தரும் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் அவர்களது பைகளும் சோதனையிடப்பட்டதன் பின்னரே உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஏப்ரல் விடுமுறை வழங்கப்படும்போது இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 22ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும் ஏப்ரல் 21 ஆம் திகதியன்று நாட்டின் பல இடங்களிலும் தொடர்ச்சியாக இடம்பெற்ற குண்டுவெடிப்புகளால் இரண்டாம் தவணைக்கான கல்விச் செயற்பாடுகள் யாவும் ஏப்ரல் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
எனினும் பல இடங்களில் வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது தாக்குதல்கள் இடம்பெறலாமென்ற ஐயத்தில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது மறுஅறிவித்தல் வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.
பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்தியதையடுத்து ஏப்ரல் 6 ஆம் திகதி இரண்டாம் தவணைக்குரிய கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதாக கல்வி அமைச்சர் இறுதியாக அறிவிப்பு விடுத்ததுடன் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வேண்டுகோள்களுக்கமைய தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கு மே 06 ஆம் திகதியும் தரம் 01 தொடக்கம் தரம் 05வரையான மாணவர்களுக்கு மே 13ஆம் திகதியும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமென்பதை அமைச்சர் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
எனினும் பேராயர் மெல்கம் ரஞ்சித் மறு அறிவித்தல் வரை கத்தோலிக்க பாடசாலைகளை இரண்டாம் தவணைக்காக மீள திறக்க வேண்டாமென்றும் தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகளை நடத்த வேண்டாமென்றும் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார்.
இதனையடுத்து பெற்றோர் பாதுகாப்பின் நிமித்தம் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதா? இல்லையா? எனும் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகினர்.
இதற்கிடையே பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் மே 06 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் தமது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் அஸ்கிரிய பீடாதிபதியும் பாடசாலைகள் ஆரம்பிப்பதனை ஒத்திவைக்குமாறு கேட்டுக்ெகாண்டிருந்தார்.
என்றாலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று நாடு முழுவதுமுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளினதும் 02 ஆம் தவணைக்கான கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
ஆசிரியர்கள், மாணவத் தலைவர்கள் மற்றும் பெற்றோர்களும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமது பங்களிப்பை பாடசாலைகளுக்கு வழங்குவதனை காணக்கூடியதாக இருந்தது.
பாடசாலை வேன்கள் மற்றும் பஸ்கள் தரித்து வைப்பதற்காக பொலிஸாரால் அறிமுகம் செய்யப்பட்ட புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமுலுக்கு வந்தன. இதற்கமைய பாடசாலைகளுக்கு அருகாமையில் எவ்வித வாகனங்களையும் தரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அநேகமான பாடசாலைகளில் வெளிப்படையாக தெரியக்கூடியவாறான புத்தகப்பை, பென்சில் பை, உணவுப் பெட்டி, தண்ணீர் போத்தல் என்பவற்றையே எடுத்து வருமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சில பாடசாலைகளில் வௌ்ளைக் கொடி பறக்கவிடப்பட்டிருந்ததுடன் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக மெளன அஞ்சலி மற்றும் நாட்டின் சமாதானத்தை வேண்டி காலைப் பிரார்த்தனை ஆகியனவும் முன்னெடுக்கப்பட்டன.
கொழும்பின் பிரபல பாடசாலைகளான றோயல் கல்லூரியில் நேற்றைய தினம் 309 மாணவர்களும் நுகேகொடை அநுலா வித்தியாலயத்தில் 3500 பேர் இருக்க வேண்டிய இடத்திற்கு 51 மாணவர்களும் தேவி பாளிக்கா வித்தியாலயத்தில் 37 மாணவர்களுமே வருகை தந்திருப்பதாக பாடசாலை வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(தினகரன்)