நாட்டில் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் நெருக்கடி என்பன தீரும் வரை அரச அலுவலர்கள் கடமைக்கு சமுகமளிக்கும் நேரத்தை காலை 09.30 முதல் பிற்பகல் 03.30 மணியாக வரையறை செய்து சொந்த பிரதேசத்தை விட்டு வெளியே கடமையாற்றுவோருக்கு விசேடகொடுப்பனவும் வழங்குமாறு அரச சேவை மாகாண சபைகள் அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கம் ஊடக அறிக்கை மூலம் கோரிக்கை ஒன்றை முன்வைத்து உள்ளது.
அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர எரிபொருள் நெருக்கடி, உணவுப் பொருட்கள் விலையேற்றம், போக்குவரத்து கட்டண அதிகரிப்பு என்பன அரசாங்க ஊழியர்களை வெகுவாக பாதித்துள்ளது. குறிப்பாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியே கடமை செய்யும் அரச ஊழியர்கள் சொல்லொணா துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கோதுமை மா , எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான ஹோட்டல்கள், உணவு நிலையங்கள் மூடப்பட்டு விட்டன.
இதன்காரணமாக வெளிப்பிரதேசங்களில் கடமைசெய்யும் அரச ஊழியர்கள் உணவை பெறமுடியாத நிலை நிலவுகிறது. தமது வீட்டில் இருந்து உணவை சமைத்துக் கொண்டுசெல்ல முடியாத நிலையும் நிலவுகிறது. முறையான போக்குவரத்து வசதிகளும் தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைகாரணமாக தடைப்பட்டுள்ளன. இதன் காரணமாக உரிய வேளைக்கு அலுவலகத்திற்கான கடமைக்கு செல்ல முடியாதுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள பொதுநிருவாக சுற்று நிருவாகப்படி காலை 08.45க்கு பிந்தி வரும் அரச ஊழியர்களுக்கு குறுகிய கால லீவு , மற்றும் 03 தினங்கள்பிந்தி வந்தால் அரை நாள் லீவு வீதம் கணிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமக்கு வழங்கப்படும் லீவுகள் முடிந்தால் சம்பளமற்ற லீவு கணிக்கப்பட கூடிய வாய்ப்பும் ஏற்படுகிறது. இவற்றை நெகிழ்வுத் தன்மையுடன் நோக்கும் நிலையில் நிறுவன தலைவர்கள் நடக்காத சூழ்நிலையும் நிலவுவதால் ஊழியர்கள் மேலும் பாதிக்கப்படக் கூடிய நிலைமை உருவாகியுள்ளது. எனவே அரச ஊழியர்களின் கடமை நேரத்தை தற்போதைய நிலை சீராகும் வரைகாலை 09.30 முதல் பி.ப.03.30 வரை மாற்றி அமைக்குமாறும் தமது சொந்த பிரதேசங்களை விட்டு வெளிப் பிரதேசங்களில் கடமைபுரியும் அரச ஊழியர்களுக்கு விசேடவாழ்க்கை செலவுப்படி வழங்க வேண்டும் எனவும் மேற்படி சங்க செயலர்.ஏ.எல்.எம்.முக்தார் தமது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.