தற்போதைய நாட்டின் நிலமையின் கீழ் அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துமாறு அத்தியவசிய சேவைகள் ஆணையளார் நாயகம் கே.டீ.எஸ். ருவன்சந்திர அரச பொது நிர்வாக அமைச்சின் செயலாளரைக் கேட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு மே 12 ஆம் திகதி மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் நான் நடத்திய கலந்துரையாடலின் போது, அரச பொதுச் செலவினங்களைக் குறைப்பதற்காக அரச பொதுச் சேவை ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் பற்றி கலந்துரையாடியதன் அடிப்படையில் அத்தியவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.
அதன்படி, நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் விநியோகம், மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகம் போன்றவற்றில் தடைகள் காணப்படுவதன் காரணமாக அரசாங்க செலவினங்களைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, அரசாங்க உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதைக் கட்டுப்படுத்தி , அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் கடமைக்கு அழைக்குமாறு மேற்படி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
வீட்டிலிருந்து கடமையாற்ற முடியுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதற்கு அனுமதி வழங்குவது மிகப் பொருத்தமானது என இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துளார்.
அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட அலுவலக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் கடமைக்கு அழைக்குமாறும், சேவைக்கு அழைக்கும் போது நிறுவன / திணைக்களத் தலைவரின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறும் தான் கேட்டுக் கொள்வதாக, பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அவ்வாறே தொலைதூரத்தில் இருந்து பணிக்கு வரும் அலுவலர்களை, அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பணியிடத்தில் தற்காலிகமாக இணைப்புச் செய்வதற்கான அதிகாரத்தை குறித்த திணைக்களங்கள் / நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்குவது பொருத்தமானது என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
பெரிய இடப் பரப்பரில் கடமையாற்றும் இடங்களை வரையறுத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் கடமையாற்றும் வகையில் அலுவலகங்களை மீள ஒழுங்குபடுத்துமாறும் அதன் மூலம் மின்சாரம், நீர், எரிபொருள் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு வழிகாட்டல்களை அரச நிறுவனங்களுக்கு வழங்குமாறும் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.