தரமான அரச சேவையை மக்களுக்கு வழங்குவதற்கான முறையான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு நேற்று பணிப்புரை விடுத்துள்ளார்.
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயற்பாடுகள் மற்றும் துரித வீட்டுத்தோட்ட திட்டம் தொடர்பில் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அரச நிறுவனங்களை ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தலைநகரில் உள்ள முக்கிய அரச நிறுவனங்களை மாகாணங்களுக்கு பரவலாக்குவதன் மூலம் கொழும்பிற்கு வருகை தரும் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
அரச உத்தியோகத்தர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகளை விரைவுபடுத்துதல் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் அதிகூடிய சேவையைப் பெறுவதற்கான திட்டங்களை வகுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
‘ஒன்றாக வளர்வோம் – நாட்டை வெல்வோம்’ என்ற தொனிப்பொருளில் பொது நிர்வாகம் மற்றும் விவசாய அமைச்சகங்கள் இணைந்து தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் பயிரிடுவதற்கு ஏற்ற பயிர்களை துல்லியமாக கண்டறிய வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.