அரச பாடசாலை ஆசிரியர்கள் தமது வாழ்வை பிள்ளைகளுக்காக அர்ப்ணிக்கிறார்கள். – பாடல் மூலம் கணிதம் கற்பித்து பிரபலமான ஆசிரியர்
கடந்த வாரம் மிக அதிகமாக பகிரப்பட்டு பார்க்கப்பட்ட வீடியோக்களில் இசை உடன் பாடல் பாடிக் கொண்டு மாணவர்களுக்கு அடிப்படைக் கணிதம் கற்பித்த ஆசிரியரின் வீடியோ முக்கியமானது. சமூக ஊடகங்களில் மாத்திரமன்றி பொது மக்களிடையேயும் இந்த வீடியோ பிரபலமாகிவிட்டது.
உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள், அரச பாடசாலை ஆசிரியர்கள் சிறப்பாக்க் கற்பிப்பிதில்லை என மக்கள் நினைக்கின்றனர். எமது வாழ்வை நாம் எவ்வாறு பிள்ளைகளுக்காக அர்ப்பணிக்கின்றோம் என்பதை நாம் தான் அறிவோம். என அந்த வீடியோவில் கற்பிக்கும் ஆசிரியர் கோசல கலகெதர தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதன் பிறகு அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் டியுசன் வகுப்புக்களை நடாத்துமாறு பல கோரிக்கைகள் கிடைத்த தாகவும் அவற்றை தான் நிராகரித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் இதன் பின்னரும் நான் டியுசன் வழங்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோசல கலகெதர தனது கணிதப் பாட வகுப்பின் போது ட்ரம் இசைக்கருவியை வாசித்துக் கொண்டே சிங்கள பாலர் பாடலொன்றை கணித எண் அடிப்படைகளை மாற்றி தாளத்திற்கேற்ப பாடிக் கற்பித்தார். இதன் மூலம் பிள்ளைகள் கணித அடிப்படைகளை மிக இலகுவாக விளங்கிக் கொள்வதாகவும் நினைவில் நிறுத்திக் கொள்ளவதாகவும் அவர் நம்புகிறார்.
இந்த வீடியோவின் பின்னர் தனக்குக் கிடைத்த உள்பெட்டி செய்திகள் அனைத்துக்கும் பதிலெழுத முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்த கோசல, நீ என்னை அழச் செய்து விட்டாய். எனது வகுப்பின் 40 மாணவர்களுக்கு வெளியேயுள்ள மாணவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும். ஆனால் எப்படி செய்வது என்று எனக்கு தெரியவில்லை. நான் செய்வேன் என சத்தியம் செய்கிறேன் என்று கணிதப் பாடத்தில் சித்தி பெறத் தவறிய மாணவர் ஒருவரின் செய்திக்கு பதிலளிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பாடசாலைச் சூழலில் புத்தாக்கமாகக் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொள்ளும் இவரைப் போன்ற ஆசிரியர்களின் திறமைகளையும் அனுபவங்களையும் நாம் உலகறியச் செய்யத் தயாராகவுள்ளோம். எமக்கு அனுப்பி வையுங்கள்.