அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் தொடர்பான நினைவுப் பேருரை எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இம்முறை நினைவுப் பேருரையை பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் நிகழ்த்துகிறார்.
இலங்கை நேரப்படி மாலை 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் இணையவழியில் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் தொடர்பான சிறப்புக் குறிப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.
அருள்வாக்கி அப்துல் காதர் புலவர்
பட்டாலே விளக்கை எரியச் செய்து, பாட்டாலே விளக்கை அணையச் செய்தார் ஒரு புலவர். அவர் தான் ஈழத் திருநாடு தந்த பாவலர் ஸ்ரீலஸ்ரீ அருள்வாக்கி அப்துல் காதர் புலவர். அவர் பிறந்த நன்னாளை முன்னிட்டு தெல்தோட்டை ஊடக மன்றம் இம்மாதம் 30 ம் திகதி, மாலை 7 மணிக்கு நிகழ்நிலையினூடாக நினைவுப் பேருரை ஒன்றினை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஈழ மணித் திருநாட்டிலே இஸ்லாமும் , இன்பத்தமிழும் வளர அயராது உழைத்த இலக்கியச் செம்மல்கள் பலருள் ஈடிணையற்றுத் திகழ்ந்த ஒருவரே நற்றமிழ்க் காவலர், கவிராஜ சேகரம், கண்டி தர்கா வித்துவான், அஷ்டவதானி, வெண்பா வேந்து, வித்துவ மணி, வித்துவதீபம், மெய்ஞான அருள்வாக்கி, நிமிட வித்துவான், வித்துவ சிரோண்மணி போன்ற மேலும் பல்வேறு சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்ற அ. பி. அப்துல் காதர் அவர்கள் கண்டி மாவட்டத்தில் உள்ள தெல்தோட்டைப் பிரதேசத்தின் போப்பிட்டிய எனும் ஊரில் 1866 ஆகஸ்ட் 30ல் பிறந்தார். தந்தையார் ஆ. பி. அல்லாப்பிச்சை ராவுத்தர். தாயார் அவ்வா உம்மா. இளமையில் தனது பிரதேசத்திலுள்ள அரபுப்பள்ளியில் திருக்குர்ஆனும் தமிழ் பள்ளியில் தமிழும் கற்ற இவரது கல்வி
ஆர்வத்தைக் கண்ட இவர் பெற்றோர்,
இருபது மைலுக்கு அப்பாலுள்ள கண்டிக்குக் கற்பதற்காக அனுப்பி வைத்தனர். கண்டி இராணி கல்லூரியில் அவர் தமிழும், ஆங்கிலமும் கற்றுத் தேர்ந்தார். பின்னர் தமது மூதாதையரின் இடமான திருப்பத்தூருக்குச் சென்று மதுரகவி நாவலர் வித்துவ சிரோண்மணி மஹ்மூது முத்துப்பாவா புலவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். அத்தோடு அக்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சிறந்த தமிழ் அறிஞர்களிடமெல்லாம் தொடர்பு களை ஏற்படுத்திக் கொண்டார்.
சிறுபராயத்தில் ஒரு நாள் கண்டி குன்று மலைப் பூங்காவில் இவர் நண்பர்களுடன் உலவும் வேளையில் ஒரு அருங்காட்சி நிகழ , அன்று முதல் அருங்கவியும் , அழகுத் தமிழும் அவரின் நாவிலிருந்து ஊற்றெடுத்தது. இந்த சம்பவம் நிகழ்ந்த பதினொறாம் வயதிலிருந்தே கவிபாடத் தொடங்கிய அவர், தனது பதினாறாவது வயதிலேயே கவியரங்குகளில் கவிமழைப் பொழியத் தொடங்கினர். அச்சமயம் யாழ்பாணத்தில் நிகழ்ந்த கவியரங்கு ஒன்றில் கவிமழைப் பொழிந்த இவரது புலமைத் திறத்தினைக் வியந்தோர் அவ்வரங்கிலேயே அவருக்கு அருள்வாக்கி எனப் பட்டம் சூட்டி மகிழ்ந்தனர். அன்று முதல் அதே பெயரிலேயே அழைக்கப்பட்டார்.
இத்தமிழ் மேதை சிறிதும் பெரிதுமாக நாற்பதுக்கும் மேற்பட்ட இலக்கியங்களைப் யாத்ததாகக் கூறப்படுகின்ற போதிலும், அவற்றுள் முப்பது நூல்களே அடையாளம் காணப்பட்டுள்ளன எனினும் , அவை அனைத்துமே நூலுருப் பெறவில்லை என்பதும் வருத்தத்திற்குரிய விடயமாகும்.
சந்தத்திருப்புகழ் கண்டிக் கலம்பகம், கண்டிப் பதிற்றுப்பத்தந்தாதி, கண்டி அருள் வாக்கு மாலை, கண்டி நகர்
பதிகம், பிரபந்தப் புஞ்சம், அருண்மணி மாலை, அடைக்கல மாலை, தேவாரப் பதிகம், சலவாத்துப் பதிகம், முகியித்தீன் ஆண்டகை பிள்ளைத்தமிழ், ஞானமணித்திரட்டு, பலவான் திரட்டு, சித்திரக் கவி புஞ்சம் என்று பல்வேறு நூல்களைத் தந்த புலவர் அவர்கள் கலம்பகம், பதிகம்,பிள்ளைத் தமிழ், மாலை, தூது, குறவஞ்சி,புஞ்சம், சித்திரக்கவி
போன்ற பல்வேறு இலக்கிய வடிவங்களில் பா புனைந்தவர்.
இவர் பிறந்த தெல்தோட்டை குறிஞ்சி நிலப் பிரதேசமாகும். இவரது பிறந்த இடப்பகுதியை புலவர் மலை என முன்னோர்கள் பெரும் மதிப்போடு அழைத்து வந்தனர் எனினும், நாளடைவில் அது மருவி புல்லுமலை என்றே இன்று அழைக்கப்படுகின்றது. அப்பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையானது ஆரம்ப காலத்தில் புலவரின் சிறப்புப் பெயருள் ஒன்றான வித்துவதீபம் என்ற பெயரைக் கொண்டிருந்தாலும், தற்போது அது எனசல்கொல்லை மத்திய கல்லூரி என்றே அழைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பற்றிய நினைவின் அடையாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போவது தமிழ் ஆர்வலர்கள் உள்ளத்தை வருத்தவே செய்கிறது.
அறிஞர் சித்திலெப்பையுடன் இணைந்து கல்வி மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட, தமிழுக்கும், இஸ்லாத்திற்கும் அருந்தொண்டாற்றிய இப்புனிதரது அளப்பரிய பணிகள் காலத்தால் மேலும் அழியாது பாதுகாக்க வேண்டியது தமிழுலகிற்கும், தாய் நாட்டிற்கும் நாம் செய்யக்கூடிய அரும் பணி என்றால் மிகையாகாது.
அதனால் இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு வருடமும் அவரது நினைவு நாளை முன்னிட்டு
பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து, இளைய தலைமுறையினரும்
அருள்வாக்கியை அறிய தெல்தோட்டை ஊடக மன்றம் முன்வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.
நஷீரா ஹஸன் (ஆசிரியை)
அருள்வாக்கி ஊடக மன்றம்
தெல்தோட்டை.