அல் ஹிக்மா கல்லூரி ஆசிரியர்களின் நிதியுதவியில்
205 மாணவர்களுக்கு உலர் உணவு பொதிகள் விநியோகம்
கொழும்பு 12 வாழைத்தோட்டம் அல் ஹிக்மா கல்லூரியில் கல்வி கற்கும் வறியய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கான உலர் உணவு பொதிகள் நேற்று (30) மாலை விநியோகிக்கப்பட்டன.
அல்ஹிக்மா கல்லூரியில் சேவையிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் முன்னர் கற்பித்த ஆசிரியர்கள் அங்கம் வகிக்கும் ‘ஹிக்மா கொமியுனிட்டி’ என்ற அமைப்பிலுள்ள தமிழ், முஸ்லிம் ஆசிரியர்களின் பங்களிப்பினால் இப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 205 உலர் உணவு பொதிகளே நேற்று வழங்கப்பட்டுள்ளன.
வைரஸ் பாதிப்பிலிருந்து இலங்கையை பாதுகாக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாலும் கொழும்பு உட்பட சில மாவட்டங்கள் தொடர்ச்சியாக முடக்கப்பட்டுள்ளதாலும் வாழ்வாதாரங்கைள இழந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள 205 மாணவர்களின் குடும்பங்களுக்கே மேற்படி பொதிகள் வழங்கப்பட்டன.
அல் ஹிக்மா கல்லூரியில் தரம் ஒன்று முதல் உயர் தரம் வரை கல்வி கற்கும் தமிழ், முஸ்லிம் மாணவர்களில் வகுப்பொன்றிலிருந்து தலா ஐவர் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 205 வறிய குடும்பத்தினர் இதன் முதற்கட்ட நடவடிக்கையின் மூலம் நன்மை அடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு மேற்படி உலர் உணவுப் பொதிகளை ஒழுங்குபடுத்தி வினியோகிக்கும் பணியில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மேற்கொண்டதுடன் கல்லூரி ஆசிரியர்களின் இது போன்ற முன்மாதிரியான செயற்பாடுகளுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு மற்றும் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், வாழைத்தோட்ட சமூக பொலிஸ் பிரிவின் அதிகாரி உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
.