ஆசிரியர் சமூகத்தை அவதூறாகப் பேசிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஆசிரியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டுமென முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ” கொரோனாத் தொற்றுப் பரவலால் நாட்டில் பாடசாலைகள் முடங்கிக் கிடக்கின்ற நிலையில், ஆசிரியர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்து, தொழில்நட்பத்தின் உதவியோடு மாணவர்களுக்கான கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இவ்வாறு அர்ப்பணிப்புடன் செயற்படும் ஆசிரியர்களை அவதூறாக ஒரு அமைச்சர் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு விடயம் ஆகும்.
எனவே இவ்விடயம் தொடர்பாக குறித்த அமைச்சர் ஆசிரியர் சமூகத்திடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இன்று ஆசிரியர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலைமை நாளை ஏனைய அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு ஏற்படலாம்.
எனவே, இன்று ஆசிரியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள அமைச்சருக்கு எதிராக, பெற்றோர்கள் தங்களுடைய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.