ஆசிரியர்கள் – அதிபர்களின் தொழில்சங்கங்கள் ஒன்றிணைந்து சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் இன்றும் நாளையும் ஈடுபட்டுள்ளன.
சம்பள முரண்பாட்டை சீர்செய்தல் மற்றும் சில கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பல பாடசாலைகளை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை தற்போது நடைபெறும் உயர் தர பரீட்சை வினாப் பத்திர மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்தும் ஆசிரியர்கள் விலகி இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இது தொடர்பாக பதிலளித்த பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் புஜித, அவ்வாறான எந்த அறிவிப்பும் தமக்குக் கிடைக்க வில்லை என்றார்.
பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், அரச நிறைவேற்றுத் தர அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு ஆரம்பித்த தொடர் பணி பகிஷ்கரிப்பு இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகின்றது.
இக்குழுவின் செயலாளர், எச்.ஏ.எல் உதயசிரி, நீதித் துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பினால் அரச சேவையின் சம்பள முரண்பாடு உக்கிரமடைந்துள்ளதாகவும் அதனை சீர் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்பதற்காகவும் தாம் போராட்டம் நடாத்துவதாக தெரிவித்தார்.
சம்பள முரண்பாடுகளை சீர் செய்யக் கோரும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்று 17 ஆவது நாளாக நடைபெறுகின்றது.
பலக்லைகக்கழக தொழில் சங்கங்களின் ஒன்றியத்தின் ஊடக செயலாளர் சமன் காரியவசம், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் தொடர்ந்தும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.
அரச நிர்வாக சேவை ஊழியர்கள் ஆரம்பித்த போராட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்துவதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கோடு இவ்வாறு தற்காலிகமாக கைவிட்டதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.
எனினும், அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் ப்ரபாத் சந்திரகீர்த்தி, தாம் திங்கட் கிழமை முதல் பணி பகிஷ்கரிப்பை மீண்டும் ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளார்.
இலங்கை புகையிரத ஊழியர்கள் ஆரம்பித்த போராட்டம் இரண்டாவது தினமாக தொடர்கின்றது.