அனைத்துப் பிரதான ஆசிரியர் தொழில்சங்கங்களும் உள்ளடங்கலாக 30 க்கும் மேற்பட்ட தொழில் சங்கங்களின் பங்குபற்றுதலுடன் இன்று ஆசிரியர்கள் சுகவீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன் காரணமாக நாடு முழுவதும் பாடசாலைகளின் நாளாந்த நடவடிக்கைகள் முடங்கியது.
இதற்கு மேலதிகமாக இன்றைய தினம் 9.30 மணியளவில் பத்தரமுல்ல புத்ததாச மைதானத்தை அண்மைய பகுதி முதல் பத்தரமுல்ல கல்வி அமைச்சு வரையான பிரதேசமெங்கும் திரண்ட ஆசிரியர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பிரதேசத்தின் அனைத்து பாதைகளினதும் போக்குவரத்து தடைப்பட்டது.
பெருமளவில் திரண்ட ஆசிரியர்கள் கல்வி அமைச்சின் நுளைவாயில் பகுதியில் நிண்ட நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் மேற்காெள்ளப்பட்டிருந்தன.
இதற்கிடையில் இன்றைய தினம் ஆசிரியர்களின் சம்பள உயர்வு தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றை தான் சமர்ப்பிக்க உள்ளதாக கல்வி அமைச்சர் நேற்று அறிவித்திருந்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்களுக்கு பேட்டி அளித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின், தற்போது அதிபர் ஆசிரியர்கள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள ஒன்று திரண்டு சக்தி பெற்றுள்ளதாகவும், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்காலத்தில் இதனை விட ஆசிரியர்களைத் திரட்டி போராட்டம் நடாத்துவதாகவும் எச்சரித்தார்.
இந்தப் பின்னணியில் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் தொழில் சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை.
கல்வி அமைச்சின் அதிகாரிகள் உறுதியான பதிலை வழங்கத் தயாராக இல்லை என்பதனால், உரிய தீர்வைப் பெற்றுக் கொள்ளும் வரை அரசுக்கு அழுத்தத்தை வழங்குவது என ஆசிரியர் தொழில் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
அதனடிப்படையில்
1. நாளை முதல் சட்டப்படி வேலை என்ற போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபடுதல் (காலை 7.30 முதல் 1.30 வரையான காலப்பகுதியல் மாத்திரம் பணியில் ஈடுபடல்.
2. மார்ச் 16 ஆம் திகதிக்கு முன்னர் சுற்று நிருபம் வெளியிடப்படாவிட்டால் மார்ச் 16 முதல் 5 நாட்கள் தொடர்ச்சியாக பணி பகிஷ்கரிப்பை மேற்கொள்வது
முதலான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.
முதல் தீர்மானத்தின் படி, மேலதிக வேலைகள் கடமைகள் அனைத்தையும் புறக்கணிப்பதோடு, காலை மற்றும் மாலை நேரங்களில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மேலதிக வகுப்புக்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்புக்கள் முதலான அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் தவிர்ந்து கொள்ள முடியும்.
ஆனால் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 அல்லது 2.00 மணி வரை கட்டாயமாக வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடல் வேண்டும்.