– 62 வருட பிரச்சினைக்கு தீர்வு
– வர்த்தமானி விரைவில்
– வர்த்தமானி விரைவில்
ஆசிரியர் ஆலோசகர் சேவையை உருவாக்குவது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதால் 62 வருடங்களாக நீடித்துவரும் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவேண்டியிருப்பதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியது.
இதற்கமைய 4,971 ஆசிரியர்கள் இவ்வாறு அமைக்கப்படவிருக்கும் ஆசிரியர் ஆலோசகர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிலேயே இது தொடர்பான தகவல்களை கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேநேரம், இலங்கை பாடசாலை அதிபர் சேவை மற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரங்களும் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதுடன், முறைசாரா கல்வி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருப்பதாகவும் துறைசார் மேற்பார்வைக் குழுவுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
நீண்டகாலமாக நிலவும் தமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுத்த நடவடிக்கைகளுக்கு பாதிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவை, அதிபர் சேவை மற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்கள் துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு நன்றி தெரிவித்தனர்.
தொழிற்துறையை அடிப்படையாகக் கொண்ட கணினி பட்டக்கல்வித் திட்டமொன்று இலங்கையின் அரச மற்றும் அரசசார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுத்துவது தொடர்பான யோசனையும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.
கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி குமாரி விஜேரத்ன, டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, விஜயபால ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
-Thinakaran-
-Thinakaran-
A/L பெறுபேறுகள் வைத்தவர்களின் நிலை என்ன? அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைக்குமா?