– தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியில் மேடை வடிவமைப்பாளர்
ஆண் சிறுவர்கள் சிலரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், ஆங்கிலப் பாட ஆசிரியர் என்பதோடு, தொலைக்காட்சியில் சிறுவர் தொடர்பான நிகழ்ச்சியில் மேடை வடிவமைப்பாளராக உள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த 54 வயதான சந்தேகநபரால், ஆண் சிறுவர்கள் சிலர் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
அத்தோடு, வெளிநாடுகளிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு வீடியோ காட்சிகள் விற்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் இச்சந்தேகநபரை நேற்று (26) முன்னிலைப்படுத்தியபோது, எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பல பகுதிகளில் இச்சந்தேகநபர் பிரத்தியேக ஆங்கில வகுப்புகளை நடாத்தி வந்துள்ளார்.
10-12 வயதிற்குட்பட்ட ஆண் மாணவர்கள் சிலரை தனியார் வகுப்புகளுக்காக தனது வீட்டிற்கு வரவழைத்து, அங்கு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக இச்சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இச்சந்தேகநபரின் வீட்டிலிருந்து 135 இறுவெட்டுகள், பென் ட்ரைவ், வன்தட்டு, சேமிப்பகம், (Pen-drive, hard disk, memory card) கெமரா, கையடக்க தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் தரவு சேமிப்பு உபகரணங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன
தினகரன்