யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பச்சை குத்தப்பட்ட மாணவர்களைக் கண்டுபிடிப்பதற்காக 70 மாணவர்களை நிர்வாணமாக பரிசோதித்ததாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை விசாரிப்பதற்கு வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக வட மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
விசாரணையின் போது பச்சை குத்திய மாணவர்கள் நால்வரும் அதற்காக பயன்படுத்தப்பட்ட பச்சை குத்தும் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வடமாகாணக் கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை கடந்த 1 முதல் 10 வரை நடைபெற்றது. அதன் போது குறித்த வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் நெஞ்சில் பச்சை குத்தியிந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது மேலும் நான்கு மாணவர்களும் பச்சை குத்தியுள்ளதாக பாடசாலை ஆசிரியர்கள கண்டறிந்துள்ளனர். ஒரே ஊசியைப் பயன்படுத்தி நான்கு மாணவர்களும் உடலில் பச்சை குத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோவிட் அச்சம் காரணமாக சுகாதாரத் துறையுடன் கலந்தாலோசித்து மாணவர்களை பரீட்சிக்கும் பணியில் இரண்டு ஆண் ஆசிரியர்களை ஈடுபடுத்தியுள்ளதாகவும் அவர்கள் மாணவர்களின் மேல் பகுதி ஆடைகளை மாத்திரம் களைந்து பரிசோதித்துள்தாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வலிகாகம் வலயக் கல்விக் காரியாலய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்களில் ஒருவரின் தாயார் புகார் அளித்துள்ளதாகவும், அதிபர் மற்றும் பாடசாலையின் பல ஊழியர்கள் அளித்த வாக்குமூல அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.