கிழக்கு மண்ணான கோரக்கர்கோவிலில் பிறந்து, உலகில் இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் இளம் விஞ்ஞானி வினோஜ்குமார்
இதுவரை 99 புதிய கண்டுபிடிப்புகள்; தேசிய, சர்வதேச விருதுகள் ஏராளம்; மேலும் 13 புதிய கண்டுபிடிப்புகளுடன் மற்றொரு தேசிய போட்டிக்கு தயாராகிறார்
புதியவற்றை ஏற்படுத்தாத தேசம் எழுச்சி பெறாது. ஒரு நாடாக இருந்தாலும் சரி,ஒரு நபராக இருந்தாலும் சரி அபிவிருத்தி அடைய வேண்டுமெனில் புதிய சிந்தனைகள்,புதிய உற்பத்திகள் இன்றியமையாதவையாகும்.
அந்த வகையில் கிழக்கில் ஓர் இளம் விஞ்ஞானி புதிய கண்டுபிடிப்புகள் மூலம் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.
யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழினுட்ப பீடத்தில் இரண்டாம் வருடத்தில் பொறியியல் தொழினுட்பம் பயின்று வரும் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர்கோவிலைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் எனும் மாணவனின் பதினொரு கண்டுபிடிப்புக்கள் 2019ம் ஆண்டுக்கான தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் மற்றும் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகாவித்தியாயத்தின் பழைய மாணவராகிய இவர், இதுவரை 38 தேசிய விருதுகளையும் 6 சர்வதேச விருதுகளையும், 5 நாடுகளின் சிறப்பு விருதுகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் பெப்ரவரி தாய்லாந்தின் பாங்கொக் வர்த்தக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சிப் போட்டியில் மூன்று சர்வதேச விருதுகளையும் ஐந்து நாடுகளின் சிறப்பு விருதுகளையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் விஞ்ஞான,தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவும் இணைந்து போட்டியை நடத்தி வருகின்றன. இவ்வருடத்துக்கான தேசிய மட்ட கண்டுபிடிப்புப் போட்டி எதிர்வரும் 20ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை இலங்கை வர்த்தக மற்றும் கண்காட்சி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பாடசாலைப் பிரிவு, பல்கலைக்கழக மற்றும் மூன்றாம் கல்வி நிலையங்கள், வர்த்தகப் பிரிவு,திறந்த பிரிவு என நான்கு பிரதான பிரிவுகளையும் பதினான்கு தொழினுட்ப பிரிவுகளையும் கொண்டதாக இப்போட்டி நடைபெறவுள்ளது.
அகில இலங்கை ரீதியான இப்போட்டிக்கு மாகாண மட்டப் போட்டிகளிலிருந்து கண்டுபிடிப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்டப் போட்டிகள் நடைபெறும். தேசிய மட்டத்தில் தங்கப் பதக்கம் பெறும் ஆக்கங்களிலிருந்து மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளுக்காக சர்வதேச கண்டுபிடிப்பாளர் போட்டிகளுக்கு இளம் விஞ்ஞானிகள் தகுதி பெறுவார்கள். மேலும் அவர்களது கண்டுபிடிப்புக்களை வணிகமயப்படுத்துவதற்குரிய மானியங்கள் மற்றும் உதவிகளை வழங்குதலே இப்போட்டியின் பிரதான நோக்கமாகும். கிழக்கு மாகாண மட்டப் போட்டி கடந்த மே மாதம் 25ம் திகதி மட்டக்களப்பு மகஜன கல்லூரியில் நடைபெற்றது.
அதில் சோமசுந்தரம் வினோஜ்குமார் பதின்மூன்று கண்டுபிடிப்புகளை போட்டிக்காக காட்சிப்படுத்திருந்தார்.
அவற்றில் பிறரின் துணையின்றி கணிதத் தேற்றங்களை இலகுவாக படிக்கக் கூடிய Maths Helper – 2 எனும் கருவியும், இயந்திர வேலைகளின் போது தவற,விடப்படும் மிகச் சிறிய துணைப்பாகங்களை இலகுவாகவும் விரைவாகவும் கண்டுபிடிக்கக் கூடிய The Device to detect the lost nuts எனும் கருவியும், களைகளை வேருடன் அழிக்கக் கூடிய The Device to up root the Thorny plants எனும் கருவியும், இரும்புகளை மிகத் துல்லியமான அளவுகளில் விரைவாக வெட்டக் கூடிய A Device to cut out Iron bars & Pipes எனும் கருவியும், பலகைகளை நேர்த்தியாக ஒழுங்கமைக்கக் கூடிய The Device to set up planks to Gather எனும் கருவியும், தளபாட இணைப்புகளை துல்லியமாக கழற்றக் கூடிய The device to Detect the Planks எனும் கருவியும், தட்டை வடிவான பொருட்களுடைய மையப் புள்ளியை கண்டுபிடிக்கக் கூடிய Mid Point Scaler எனும் கருவியும், தளபாட இணைப்புகளின் போது மையப்புள்ளியைக் கண்டுபிடிக்க உதவும் Drill’s Helper எனும் கருவியும், தரையோடுகளின் உருவத்தை மாற்றியமைக்கும் General Scale Helper எனும் கருவுயும், வீட்டில் நாளாந்தம் சேரும் உக்கலடையக் கூடிய கழிவுகளை விரைவாக மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் Novel Plant Pot எனும் கண்டுபிடிப்பும் முக்கியமானவையாகும். இவற்றுடன் மேலும் ஐந்து புதிய தொழினுட்பங்களை உள்ளடக்கியதும் புத்தகங்களை இலகுவாக கற்கக் கூடியதுமான Smart Book Cover எனும் கண்டுபிடிப்பும் தேசிய மட்ட கண்டுபிடிப்பு கண்காட்சிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அவரது புதிய சாதனைகள் பற்றி சம்மாந்துறை, கோரக்கர்கோவில் கிராமத்திலுள்ள வீட்டில் சந்தித்துக் கலந்துரையாடிய போது தனது கண்டுபிடிப்புகள் பற்றி விபரித்தார். அவற்றுக்கான ஆவணங்களைக் காட்டினார். அவரது ஒரேயொரு சகோதரன் தினேஷ்குமார் அந்த ஊரின் முதலாவது பட்டதாரி. தாய் தந்தையர் மிகவும் அடக்கமானவர்கள். எளிமையான வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர்கள். அவரிடம் தொடுத்த கேள்விகளுக்கு எளிமையாகப் பதிலளித்தார்.
‘நான் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தில் தரம் ஆறில் கல்வி கற்கும் போது ஓய்வு நேரங்களில் சிறிய சிறிய புத்தாக்கங்களைச் செய்யத் தொடங்கினேன். அப்போது பலர் எனது ஆக்கங்களைப் பார்த்து சிரித்தார்களே தவிர பாராட்டவில்லை.
அப்போது வீட்டின் வறுமை காரணமாக பல தேசிய மட்ட போட்டிகளுக்குச் செல்ல முடியாமல் இருந்தது. எனினும் விஞ்ஞான பாட ஆசிரியை சாந்திமதி அவர்களுடையஅறிவுரைகள் தன்னம்பிக்கையை வளர்த்தன. அந்த நேரத்தில் முன்னாள் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளரும் தற்போதைய கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருமான மன்சூர் சேர் தன்னுடைய சொந்தப் பணத்தில் வழங்கிய உதவியாலும், ஊக்குவிப்பாலும் சில போட்டிகளில் வெற்றி பெற்றேன்.
காரைதீவைச் சேர்ந்த சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரி.சகாதேவராஜா அவர்கள் ஊடகங்களில் எனது ஆக்கங்கள் பற்றி விபரமாக எழுதத் தொடங்கினார்.எனக்கு உற்சாகம் பிறந்தது. மேலும் மேலும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.அவர் பல மேடைகளில் என்னை உதாரணப்படுத்தி அழகாகப் பேசியிருக்கிறார். இவரது ஆக்கங்கள், கட்டுரைகள், நேர்காணல்களைப் பார்த்த பல புலம்பெயர் உறவுகள் உதவிகளைச் செய்தார்கள். மேலும் எனது உயர்தரப் பாடசாலையான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் நிர்வாகம் பல உதவிகளைச் செய்திருந்தது. அதனால் இந்த வருட கண்டுபிடிப்புடன் எனது மொத்தமாக 99 கண்டுபிடிப்புகளை செய்துள்ளேன்.
நான் இதுவரை 99 கண்டுபிடிப்புகளைச் செய்திருந்தாலும் என்னைப் பொறுத்தவரை எனது மிகச் சிறந்த கண்டுபிடிப்பை நான் இன்னும் செய்யவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. புவியீர்ப்பு விசை மூலம் வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை பெறல் மற்றும் டெங்கு நோய்க்கான நுளம்புகளை அழிக்கும் கருவி போன்றவற்றை உருவாக்குது பற்றிய ஆய்வுகளைச் செய்து வருகின்றேன்.
இந்த ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வரும் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜெயவர்த்தன, இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் ஹல்வதுர, யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரவிராஜன், தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் முசாதிக், இலங்கை புலமைச் சொத்து அலுவலகத்தின் பணிப்பாளர் மற்றும் யாழ். பல்கலைக்கழக தொழினுட்ப பீட நிர்வாகத்திற்கும் பணிவன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் அத்தியாவசியமான கண்டுபிடிப்புக்களை வணிகமயப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றேன்.’
இவ்வாறு விபரித்தார் சோமசுந்தரம் வினோஜ்குமார்.
இவர் தனது பல்கலைக்கழக விடுமுறை தினங்களில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் கிடைக்கின்ற பணப் பரிசில்களில் மூன்றில் ஒரு பங்கில் பாடசாலை மாணவர்களின் புத்தாக்க திறனை ஊக்குவிப்பதற்கான இலவச கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகளை நடத்தி வருகின்றார். பாடசாலைகளிலும் இவ்வாறான நிகழ்வுகளை நடத்த விரும்பினால் 0773867722 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அவர் குறிப்பிடுகின்றார். (Thinakaran)