ஆரம்பப்பிரிவிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் போசணையுள்ள பிஸ்கட்களை இன்று 7ஆம் திகதிமுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் ஆரம்ப கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் நேற்று (06) காலை 10மணிக்கு கூடியது. வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் வழங்கப்படும் திரிபோஷவை அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் மாலை வேளையில் உட்கொள்வதாகவும் திரிபோஷ முறையாக குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் கிடைக்கிறதா என்ற தொடர்பில் ஆராய்வதற்கு விசாரணைக்குழுவை நியமிக்க வேண்டுமெனவும் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் மேலும் பதிலளிக்கையில்,
குறைந்த வருமானங்களைப் பெறும் குடும்பங்களை கருத்திற் கொண்டு திரிபோஷ வழங்கப்படுவதில்லை எனவும், குழந்தைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், குறைந்த நிறையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு 6மாதங்களில் இருந்து 5வயது வரையில் வழங்கப்படுமென்றார்.
அத்துடன் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் திரிபோஷ நிறுவனத்தினூடாக போசணையுள்ள பிஸ்கட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், இதற்காக 1500 மில்லியன் ரூபாயை அரசாங்கம் ஒதுக்கியிருப்பதாகவும், இன்றும்(07) முதல் போசணையுள்ள பிஸ்கட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
thinakaran