க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்ப வகுப்புக்களை நடாத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதிகளில் ஆரம்ப தர வகுப்புக்களை நடத்துவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு கல்வி அமைச்சு மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
மார்ச் 7 ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு நாளை முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு முன்னதாக தீர்மானித்திருந்தது.
எவ்வாறாயினும், இவ்வாறான ஆரம்ப வகுப்புகளை நடத்துவது க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தடையாக இருப்பின் சம்பந்தப்பட்ட அதிபர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டுமென கல்வி அமைச்சு குறிப்பிடுகிறது. இதற்கிணங்க, மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அத்தகைய ஆரம்ப தரங்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இவ்வாறு விடுமுறை அளிக்கப்படும் ஆரம்ப தர மாணவர்களுக்கு வேறு வழிமுறைகளில் கற்பித்தல் முறைகள் பயன்படுத்தப்பட வேண்டுமென கல்வி அமைச்சு அனைத்து அதிபர்களுக்கும் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்ப தரத்தை நடத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. சில ஆரம்பநிலை ஆசிரியர்களும் உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடுவதே இதற்கு முக்கிய காரணம் என சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு ஆரம்ப தரங்களைப் பேணுவது தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.