இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 18 ஆம் திகதி ஆளுநர் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் அந்தத் தின விடுமுறையை சம்பளமற்ற விடுமுறையாக கணிக்குமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து சென்று வன்னியில் கடமையாற்றும் ஆசிரியர்கள் 6 வருடங்கள் நிறைவு பெறுகின்றபோதும் தமது சொந்த மாவட்டத்துக்கு இடமாற்றம் வழங்கவில்லை என கடந்த 18ஆம் திகதி அவர்களில பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும் தாம் கடமையாற்றும் பாடசாலைகளுக்கு சுகவீன விடுமுறை அறிவித்தலையும் அனுப்பி வைத்திருந்தனர்.
இவற்றை ஆராய்ந்த மாகாண கல்வி அமைச்சு நிர்வாகக் கோவையின் பிரகாரம் சலுகையாக வழங்கப்படும் ஒரு விடுமுறையைப் பெற்று அந்த விடுமுறைக்கு சுகவீனத்தைக் காரணமாக காண்பித்த போதிலும், அவர்கள் மாகாண ஆளுநர் செயலகம் முன்பாகவும் மாவட்டச் செயலகம் முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆகையால் அவர்கள் அனைவரதும் அந்த விடுமுறையை சம்பளமற்ற விடுமுறையாகக் கணிக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எழுத்தில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாகாண கல்வி அமைச்சின் செயலாளரது இந்தக் கடிதம் தற்போது வலயக் கல்விப் பணிப்பாளரால் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இதனால் 18ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டோர் தமது ஒரு நாள் வேதனத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
-தினக்குரல்-