கல்வி என்பது ஒட்டுமொத்த உலக சமூகத்திற்கும் இன்றியமையாதது. மாணவர்கள் காலம் காலமாக தமது கல்வி நடவடிக்கைகளை நேரடியான கற்றல் வழிமுறையின் ஊடாகவே மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த வழிமுறையானது மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சரியான புரிதலையும் விளக்கத்தையும் வழங்கியிருந்தது.
எனினும் தற்போதைய சூழலில் கொவிட்19 வைரஸ் தாக்கத்திலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு கல்வி நிலையங்கள் அடிக்கடி மூடப்படுகின்றன. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் தமது கல்வி நடவடிக்கைகளை ‘ஒன்லைன்’ இணைய வழி மூலமாக முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலைத்தேய நாடுகளில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி முறையானது கொரோனா காரணமாக இன்று இலங்கையிலும் கால் பதித்துள்ளது. இதனுடைய பிரதான நோக்கமானது, அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மாணவர்களின் குறித்த ஆண்டு அல்லது பருவத்திற்கான பாடத் திட்டங்களை பூர்த்தி செய்து, அவர்களின் கல்வி நிலையில் பாதிப்பு ஏற்படாமல் தடுத்து, சீரான கல்வியை வழங்குவதாகும். இலங்கையைப் பொறுத்த வரை பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் இக்கல்வி முறையை துரிதமாக முன்னெடுத்து வருகின்றன.
மேலைத்தேய நாடுகளில் மாணவர்களுக்கு இக்கல்வி முறையானது வெற்றி அளித்திருந்தாலும் இலங்கையைப் பொறுத்த வரை மாணவ சமுதாயத்திற்கு பாரிய சவாலாகவே இணையக் கல்வி பார்க்கப்படுகின்றது. இதுவரை காலமும் இலங்கை மாணவர்கள் இக்கல்வி முறை தொடர்பான அறிவையோ தேவைப்பாட்டையோ கொண்டிருக்கவில்லை. திடீரென அறிமுகம் செய்யப்பட்ட இக்கல்வி முறையால் அதனை எவ்வாறு பெற்றுக் கொள்வது, கலந்து கொள்வது, தொழில்நுட்ப சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் இன்றுவரை மாணவர்கள் பல சிக்கல்களுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக வடக்கு,கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களில் பலருக்கு இக்கல்வி முறை எட்டாக்கனியாகவே உள்ளது. வடமாகாணத்தைப் பொறுத்த வரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் பல இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர். தமது இணையவழி வகுப்பில் கலந்து கொள்வதற்காக 50 கிலோ மீற்றர் இற்கும் மேற்பட்ட தூரத்திற்கு மாணவர்கள் சிலர் பயணம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
கணினி ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி இல்லாத மாணவர்கள் கணனி நிலையங்களுக்குச் சென்று தமது வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களில் 70 சதவீத மாணவர்கள் ‘ஒன்லைன்’ வகுப்புகளில் கலந்து கொள்ளத் தவறுகின்றனர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை மிகவும் பின்தங்கிய ஒரு பிரதேசமாகும். இங்கிருந்து அதிகளவான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற போதும், இணையவழி கல்வி முறையால் இப்பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நிலையானது இன்று கேள்விக்குறியாகிறது.
கொழும்பு, பேராதனை, றுகுனு, சப்ரகமுவ, யாழ்ப்பாணம், கிழக்கு மற்றும் தென்கிழக்கு போன்ற பல்கலைக்கழகங்கள் தொடர்ச்சியாக இணையவழி வகுப்புகளையும் பயிற்சிகளையும் நடத்தி வருகின்றன. இதில் மாணவர்களின் பங்குபற்றல் நிலையானது மிகவும் கீழ்மட்டத்தில் காணப்படுவது சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும். அன்றாட உணவுத் தேவையை பெற்றுக் கொள்வதற்கு சிரமப்படும் பல குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணைய மீள் நிரப்பல் அட்டை கையடக்கத் தொலைபேசி, கணினி போன்றவற்றை பெற்றுக் கொள்வது இயலாத காரியமொன்றாகும்.
அரசாங்கமானது ZOOM செயலி பயன்படுத்துவதற்கு இலவச இணைப்புகளை பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்திக் கொடுத்து இருந்தாலும், அசாதாரண சூழ்நிலை காரணமாக அனைத்து விரிவுரையாளர்களும் பல்கலைக்க ழகங்களுக்கு சென்று கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் போகின்றது. இதனால் மாணவர்கள் பொருளாதார ரீதியான சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடுவதை அவதானிக்க முடிகின்றது.
மலையகத்தில் அதிகளவான பல்கலைக்கழக மாணவர்கள் தோட்டத் தொழிலாளர்களினதும், சாதாரண கூலித் தொழிலாளிகளினதும் பிள்ளைகளே ஆவர். இம்மாணவர்கள் கல்வியை பெற்றுக் கொள்ள பல பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகின்றது. இங்கு சாதாரண தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொள்வதற்கு கூட இணைப்பு பிரச்சினை காணப்படுகின்றது. இங்கு மாணவர்களால் இதற்கான இணைப்புகளை பெற்றுக் கொள்ளல் என்பது சாத்தியமற்ற ஒரு விடயமாகும். இதனால் பல அசௌகரியங்களுக்கு மாணவர்கள் முகம் கொடுக்கின்றனர்.
நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள் பல பிரதேசங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் தொலைத்தொடர்பு வசதிகள், அபிவிருத்தி என்பது மலையகத்தில் தொடர்ச்சியான பிரச்சினையாகவே இருந்து வருகின்றது. மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முடக்கப்படுவதற்கும், அதனால் ஏற்படும் பல பிரச்சினைகளின் விளைவுகளை அனுபவிக்க வேண்டிய நிலையிலும் அம்மாணவர்கள் காணப்படுகின்றனர். தொழில்நுட்ப உலகிற்கு ஏற்ப சகல தரப்பினரும் சமமான விதத்தில் ஏற்றுக் கொள்ளப்படவும் மாற்றம் பெறவும் வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவர்களும் இக்கல்வி முறையில் தெளிவு இன்மையினால் கல்வியை பெற்றுக் கொள்ள முடியாமல் மனஉளைச்சலுக்கு உள்ளாகும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இணைய சாதனங்களை வாங்கி தருமாறு கூறி வறிய பெற்றோரை மாணவர்கள் வற்புறுத்தும் போது அப்பெற்றோர் எங்கு செல்வது?
சில மாணவர்கள் கல்வி கற்பதற்காக தொலைபேசியை பெற்றுக் கொண்டு தவறான பாதையில் பயணிப்பதுமுண்டு. இது மட்டுமன்றி பல ஆசிரியர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் கூட புதிய இணையவழி கல்வி முறையில் இன்றுவரை தெளிவின்மை காணப்படுவதனையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இது சாதாரண கற்றலில் ஈடுபட்டு வந்த மாணவர்களுக்கும், கற்பித்தலில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களுக்கும் பெரும் சவாலாகவே காணப்படுகின்றது.
சரியான முறையில் திட்டங்கள்,கொள்கைகள் வகுக்கப்பட்டு மாணவர்களிடம் கருத்துகள் பெற்றுக் கொள்ளப்பட்டு இணையவழிக் கல்வி முறை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே பலரதும் கருத்தாகும். அது மட்டுமன்றி இலங்கையின் சகல பிரதேசங்களிலும் தொடர்பாடல் கோபுரங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு இணைய, தொடர்பாடல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டால் மாத்திரமே இணைய கல்வி முறையானது இலங்கையில் சாத்தியமானதாகும். எதிர்காலத்தில் சரியான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு இணையவழிக் கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது மாணவர் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
ஏ.யுமிதராஜ்
(பேராதனை பல்கலைக்கழகம்)
-நன்றி: தினகரன்-
.