– கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் புள்ளநாயகம் அறிவிப்பு!
கொரோனா நீண்ட விடுமுறையின்பின்பு, கிழக்கில்
இன்று (21) வியாழக்கிழமை 568 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. இன்று அதிபர் யாராவது லீவு அறிவித்தால், அவர் பாடசாலைத்திறப்பையும் ஆவணங்களையும் அந்தந்த வலயக்கல்விப்பணிமனையில் ஒப்படைக்கவேண்டும் என்று கிழக்குமாகாணகல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அறிவித்துள்ளார்.
நேற்று, அவர் சகல வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள அவசர அறிவுறுத்தல் கடிதத்தில் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு ஒப்படைக்கப்படும் திறப்பும் ,ஆவணங்களும் குறித்த பாடசாலையின் பாடசாலை மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளரிடம் (PSI Coordinator)கையளிக்கப்பட்டு, கோட்டக்கல்விப்பணிப்பாளர் (D.E.O)பாடசாலை இன்று மீளத்திறப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.
மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு குறைந்த ஆரம்பவகுப்புக்களைக்கொண்ட 568பாடசாலைகள் இன்று மீளத்திறக்கப்படவிருக்கின்றன.
அதிபர் சமுகமளிக்காத பாடசாலைகளை, அந்தந்த பாடசாலைப்பொறுப்பு மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளர்கள் திறந்து மாணவர்களுக்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
இதுபற்றிய குறிப்பை பாடசாலையின் சம்பவத்திரட்டுப்புத்தகத்தில் (LogBook)கோட்டக்கல்வி அதிகாரி முன்னிலையில் இணைப்பாளர் முறைப்படி பதியவேண்டும்.
அதிபர் திரும்பும்வரை ,குறித்த இணைப்பாளர் அந்தந்த பாடசாலையின் பாடசாலை அபிவருத்திக்குழுவினர், சுகாதாரக்குழுவினர் மற்றும் பாடசாலை கட்டாயக்கல்விக்குழுவினரோடு கலந்துரையாடி பாடசாலை நடவடிக்கைளை முன்னெடுக்கவேண்டும்.
பட்டதாரி பயிலுனர்களை பாடசாலையில் இணைத்து ஆசிரியர்கள் சகல வகுப்புகளிலும் இருக்கத் தக்கவாறு நடவடிக்கைகளை வலயக்கல்விப்பணிப்பாளர்கள் மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.