இன்று (02) காலை 8 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு 17 சுகாதாரதொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
சுகாதார நிபுணர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் 14 நாட்கள் கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் எவ்வித உடன்பாடுகளும் எட்டப்படாததால் வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சம்பள முரண்பாடுகளை நீக்குதல், சிறப்புக் கடமை கொடுப்பனவை ரூ.10,000 ஆக அதிகரித்தல் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதார தொழிற்சங்கங்களால் பெப்ரவரி 07 ஆம் திகதி காலை 7 மணிமுதல், ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை, 9 நாட்களின் பின்னர் 16 ஆம் திகதி காலை 8 மணியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
18 தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 65,000 தொழில் வல்லுநர்களின் பங்குபற்றுதலுடன் வேலைநிறுத்தம் இடம்பெற்றிருந்தது.
எனினும், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவையடுத்து அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் மாத்திரம் பணிப்புறக்கணிப்பில் இருந்து விலக தீர்மானித்திருந்த நிலையில், ஏனைய 17 தொழிற்சங்கங்களும் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தன.
மருத்துவ ஆய்வாளர்கள், மருந்தாளர்கள், கதிரியக்க வல்லுநர்கள், ஆய்வுகூட நிபுணர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளை சேர்ந்தவர்கள் பணிப் புறக்கணிப்பினை முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.