இலங்கையின் உயர்கல்வித்துறையின் வரலாற்றை நோக்குவோமானால் 1921ம் ஆண்டில் நிறுவப்பட்ட பல்கலைக்கழக கல்லூரியும் அதனைத்தொடர்ந்து 1942 இல் நிறுவப்பட்ட இலங்கை பல்கலைக்கழகமும் ஆரம்பகால உயர்கல்வி நிறுவனங்களாக அமைந்தன. 1942 இல் 904 மணவர்களுடனும் 55 ஆசிரியர்களுடனும் இலங்கை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. கலைத்துறையில் 43% விஞ்ஞானத்துறையில் 18%, மருத்துவத்துறையில் 38% ஆன மாணவர்களுடனேயே தொடங்கப்பட்டன. 1965 ஆம் ஆண்டில் மாணவர்தொகை 10,423 ஆகவும் ஆசிரியர்தொகை 318 ஆகவும் காணப்பட்டமைக்கு காரணம் 1958 ல் வித்தியோதய வித்தியலங்கார பல்கலைக்கழகங்கள், கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் என்பன உருவாக்கப்பட்டமையாகும். 1942 இல் 904 ஆக இருந்த மாணவர் தொகை 2019 இல் 30,830 ஆகவும் 15 பல்கலைக்கழகங்கள், 19 உயர்கல்வி நிறுவனங்கள் 6,116 கல்விசார் ஊழியர்கள் ஆகவும் ( பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழு) அதிகரித்திருப்பதை நோக்கும் போது இலங்கையின் உயர்கல்வித்துறையானது 7 தசாப்தங்களுக்கு மேலாக பரந்தளவில் வளர்ச்சியடைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
இலங்கையில் உயர்கல்வித்துறையானது இலவசமாக வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் இளைஞர்களின் உயர்கல்வி வாய்ப்பை தடுக்கின்றன. 3ஆம் நிலைக்கல்விக்காக 19.6% மாணவர்களே 2018 ஆம் ஆண்டு சேர்த்துக்கொள்ளப்பட்டனர் ( ம.வ. ஆண்டறிக்கை 2019) மாணவர்ளை உள்வாங்கும் எண்ணிக்கை குறைவாக இருப்பது ஒரு காரணமாக அமைகின்ற சமயத்தில் இலங்கையின் பல்கலைக்கழக முறையில் பட்டதாரிகளின் வெளியீடு கூடியளவிற்கு கலை மற்றும் மானிடவியல் சார்ந்த துறைகளாகவும் காணப்படுகின்றன. உயர்கல்வி மட்டத்தில் விஞ்ஞான, தொழினுட்ப, பொறியியல், மற்றும் கணிதவியலில் போதுமான பட்டதாரிகள் இல்லாமையானது ( 2018 விஞ்ஞான, தொழினுட்ப, பொறியியல், கணிதவியல் துறையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் சதவீதம் 14.8% மாத்திரமே) உலகளாவிய சந்தைகளின் கேள்விக்கமைய தொழினுட்பங்களை பின்பற்றவும், போட்டித்தனமையை அதிகரிக்கவும் புத்தாக்க முயற்சிகளை உருவாக்கவும் போதுமானதாக காணப்படவில்லை. அத்துடன் இலங்கையின் உயர்கல்வி வெளியீட்டினால் தொழில்தருனர்களுக்கு பணியாற்றவும் தொழில் முயற்சிகளை உருவாக்கத் தேவையான ஆற்றலை வழங்கவும் பொருத்தமான தேர்ச்சியுடைய ஊழியப்படையை உருவாக்குவதில் பின்னடைவை சந்தித்துள்ளது என்றே கூறவேண்டும்.
இலங்கையின் உயர்கல்வித்துறையானது வளர்சியடைந்து வருகின்ற போதிலும் திறன்போதாமை,, தரமற்ற தொழினுட்ப அறிவு ,தேர்ச்சி பெற்ற அறிவுடையோர் இன்மை என்பன இலங்கையின் கல்வியின் பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 1945ம் ஆண்டிலிருந்து ஆரம்ப, இரண்டாந்தர, மூன்றாந்தரக்கல்வி வரை இலவசமாக வழங்கி உயர்மட்ட கல்வியறிவு வீதத்தைக் கொண்ட நாடாக ( ஆண்கள் 93.4%, பெண்கள் 91.4% – 2018 ) இருக்கின்ற போதும் கல்விமுறை பொருளாதார வளர்ச்சித் தேவைப்பாடுகளுடன் ஒருங்கிணைக்கப்படாமையால் சிறந்த தொழிற்படையை உருவாக்க இலங்கை போராட வேண்டிய நிலையில் உள்ளது. சிங்கப்பூர் தென்கொரியா போன்ற நாடுகளை நாம் உதாரணமாகக் கொண்டோமானால் காலத்துக்குக் காலம் கல்வித்துறை சீர்திருத்தங்களை மேற்கொண்டு பொருளாதார தேவையோடு கல்விக்கொள்கையை ஒருங்கிணைத்து கட்டம் கட்டமாக அரச முதலீடுகளை மேற்கொண்டு அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து இன்று தேர்ச்சியுடைய வலுவான தொழிற்படையை கொண்டுள்ள நாடுகளாக மாறியுள்ளன. எனவே எமது நாட்டின் பொருளாதார மட்டம், கலாச்சாரம், கல்விக்கான முதலீடு, மனிதமூலதனம் என்பவற்றை கருத்திற்கொண்டு கல்வித்துறையில் அதிலும் உயர்கல்வித்துறையில் மீள்மதிப்பீடு செய்யவேண்டிய தேவைமிக்க காலகட்டத்தை அடைந்துள்ளது.
இலங்கையின் தொழில் நிலை, தொழிலின்மையின் அண்மைக்கால போக்குகள், உயர்கல்விதுறைக்கு மாணவர்களை சேர்ப்பதற்கும் தொழிற்கேள்விக்கும் இடையே காணப்படும் தொடர்பற்ற தன்மையை புலனாக்குகின்றது. கல்விநிலை அடிப்படையில் தொழிலின்மையை நோக்கும் போது க.பொ.த உயர்தரம் அதற்கு மேல் தொடர்ந்தும் (2017 – 8.1%, 2018 – 9.1%, 2019 – 8.5%) உயர் தொழிலின்மையை பிரதிபலிக்கின்றது. இளைஞர் வேலையின்மையானது 21.5% காணப்படுகின்றது (2018) ஊழியப்படையில் 1/5 பங்குவீதமான இளைஞர்கள் தொழிலற்று இருக்கின்றனர். தொழிற்படை பங்கேற்பில் ஆண் – பெண் பங்குகொள் வீதத்தில் பாரிய இடைவெளி கொண்ட முதல் 20 நாடுகளில் இலங்கை காணப்படுகின்றது. 2018ம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புள்ளிவிபரப்படி 1978ம் ஆண்டு இலக்க பல்கலைக்கழக திருத்தச்சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள், ஏனைய உயர்கல்வி நிறிவனங்களால் பட்டம் பெறும் பெண்களில் 55%மானோர் கலைத்துறை சார்ந்தவராகவும் 5% மானோர் தற்கால நடைமுறைக்கு தேவையான அறிவு, திறன்வாய்ந்த கணினி விஞ்ஞான தொழினுட்ப, பொறியியல் துறை பட்டதாரியாகவும் வெளியேறுகின்றனர். எனவே மனித மூலதனத்தின் தொடர்ச்சியான எதிர்மறைத்தாக்கமானது ஊழியச்சந்தையில் இடைவெளியை அதிகரிக்கின்றது.
உயர்கல்வித் துறையானது வெறுமனே அறிவை மாத்திரம் மையப்படுத்தியதாக அன்றி ஆராய்ச்சிகளினூடாக அறிவினை உயர்த்துவதையே யதார்த்த உலகு வேண்டிநிற்கின்றது. ஆனால் எமது நாட்டின் உயர்கல்வித்துறையை வழங்குகின்ற அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதிலும் பார்க்க கற்பித்தல் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வருகின்றமையானது தொழினுட்பத்திறனை உயர்த்தவும் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் அதனூடாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்குமென புத்தாக்க கண்டுபிடுப்புகளில் ஈடுபடுவதற்கும் தடையாகவே அமைகின்றது என்பது உண்மையே. (இலங்கையின் H சுட்டெண் நிலை – 75)
மேற்கூறப்பட்ட உயர்கல்வித்துறை சார்ந்த பிரச்சினைகளுக்கான உபாயமூலங்களை தொடர்ந்து வருகின்ற அரசாங்கங்கள் முன்னெடுத்து வருகின்றன. உதாரணமாக தனியார் துறையுடன் இணைந்து 3ம் நிலைக்கான அணுகலை உயர்த்த முயற்சிகள் எடுக்கப்பட்டமை, உயர்கல்வி நிறுவன கல்விசார் அலுவலர்களின் வாண்மை விருத்திக்கு முதுமாணி, கலாநிதி நிகழ்ச்த்திட்டங்களை தொடர நிதியியல் உதவிகள் வழங்கப்பட்டமை, தொழிநுட்பத்துறைகளில் பட்டதாரிகளை அறிமுகப்படுத்தவும் கலைப்பிரிவு மாணவர்களின் தரத்தை உயர்த்தி வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் உயர்கல்வி சட்டமூலமானது வர்த்தமானியாக்கப்பட்டமை (மசோதா) என்பவற்றைக் கூறலாம்.
உயர்கல்வி பிரச்சனைக்கான தீர்வுகளாக பின்வருவனவற்றைக் கொள்ள முடியும். அறிவினை மேம்படுத்த ஆங்கிலக்கல்வி, தொழினுட்பக்கல்வியில் (டிஜிட்டல்) தரத்தை அதிகரிக்க தனியார் பங்குடமையின் கீழ் வழங்க முடியும். இதன்மூலம் அரசாங்கத்தின் செலவுகளை குறைத்து பல்கலைக்கழக அமைப்பையும், பாடத்திட்டங்களையும் மறுசீரமைத்துக் கொள்ளமுடியும். கல்விக் கடன்களை வழங்கி உயர் கல்வியை முடிந்தவரை பெற்றுக்கொடுக்க வகைசெய்யலாம். உயர்கல்வித்துறைசார் அலுவலர்களை வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்து தரத்தை வலுப்படுத்திக்கொள்ள முடியும். உயர்கல்வியானது தொழிநுட்ப வழிகாட்டலுடன் கூடிய பாடத்திட்டங்களை கொண்டு ஒழுங்கமைக்கப்பட்டு தனியார் துறை ஊக்குவிப்பு செயற்றிட்டங்களில் பணியாற்ற ஊக்குவித்து தொழில் அனுபவங்களை பெற வழிசெய்யலாம்.
தொகுத்து நோக்கும் போது ஊழியச் சந்தையின் மாற்றத்திற்கேற்ப தொழில்துறை வேலைவாய்ப்பை கருத்திற்கொண்டு இலங்கையின் உயர்கல்வித் துறையானது விரிவாக்கலையும் சீர்திருத்தத்தையும் வேண்டி நிற்பதோடு மாத்திரமல்லாமல் பொதுக்கல்வி, தொழிற்கல்வி போன்ற அனைத்து மட்டங்களினது சீராக்கத்தின் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது. இலங்கையின் ஊழியப்படையில் அதிக உற்பத்தித்திறன் வாய்ந்த பகுதியினராக பாடசாலையில் இருந்து வெளியேறும் மாணவர்கள் காணப்படுவதால் இவர்கள் தொழிற்கல்வி, தொழிற்துறையை நோக்கி நகர்த்தவேண்டிய முயற்சிகள் அவசியம் எனவே ஆரம்ப மட்டத்திலிருந்து சீராக்கம் செய்து பயிற்சிகள் அளித்து உயர்கல்விக்கும் ஊழியப்டைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் கருவியாக மனிதமூலதனத்தை பயன்படுத்தலாம் என்பதில் ஐயமில்லை.
உசாத்துணை நூல்கள்
1. Central bank report – 2019
2. Central bank report – 2018
3. University Grants Commission, University Statistics, 2018
4. http://dx.doi.org/10.1596/978-1-4648-1052-7
5. சந்திசேகரன். சோ, (2019) இலங்கையின் உயர்கல்வி, சேம்மமடு பதிப்பகம்.