இவ்வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் நாளை (16) நள்ளிரவு நிகழவுள்ளது.
பகுதியளவிலான இச்சந்திரகிரகணத்தை இலங்கையில் காணக்கூடியதாக இருக்கும் என, கொழும்பு பல்கலைக் கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
அவுஸ்ரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான நாடுகளில் இச்சந்திர கிரகணத்தை காணமுடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாளை நள்ளிரவு அதாவது 17 ஆம் திகதி 12.13 அளவில் இச்சந்திர கிரகணம் ஆரம்பமாகும்.
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வருவதன் காரணமாக ஏற்படும் பூமியின் நிழல் சந்திரனில் விழ ஆரம்பித்தது முதல் அதிலிருந்து மெதுவாக விலகும் வரை, அதிகாலை 5.47 மணி வரை இச்சந்திரகிரகணம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சந்திரகிரகணத்தை 17 ஆம் திகதி அதிகாலை 1.31 முதல் 4.29 வரை வெற்று கண்களால் அவதானிக்கலாம் என்பதோடு, அதிகாலை 3.00 மணியளவில் சந்திரனின் மேற்பரப்பில் சுமார் 65 வீதம் இருண்ட நிழலால் மிகப்பெரிய கிரகணத்தை அவதானிக்கலாம் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய 17 ஆம் திகதி 12.13 மணி முதல் 5.47 மணி வரையான 5 மணித்தியாலங்கள் 34 நிமிடங்கள் வரை இச்சந்திரகிரகணத்தை இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்நாட்களில் மிகவும் பிரகாசமாக தென்படுகின்ற மிகப் பெரும் கோள்களான வியாழன் மற்றும் சனி ஆகியவற்றையும் இவ்வேளையின்போது, சந்திரனுக்கு அருகில் வரும் எனவும், இதன் காரணமாக மிக அரிதாகக் காணக்கூடிய விண் பொருட்களை அவதானிக்கும் வாய்ப்பு காணக்கூடியதாக இருக்கும் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
இது இவ்வருடத்தின் கடைசி சந்திர கிரகணம் என்பதோடு, அடுத்த சந்திர கிரகணம் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மே 26 ஆம் திகதி இடம்பெறும் எனவும் கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.