அன்னாரின் 25ஆவது நினைவு தினம் (25.03.2021)
ஒரு சமூகத்தின் கீர்த்திமிகு வாழ்வியலை திரும்பிப் பார்க்க வைப்பதில் அச்சமூகத்தின் வரலாற்றுப் பதிவில் மட்டுமல்ல இலக்கியப் பதிவிலும் பெரும் பங்குண்டு.
‘தனது வரலாறு தெரியாதவன் மூடன்’ என்று புலவர்மணி ஆமு ஷரீபுத்தீன் ‘மருதமுனையின் வரலாறு’ நூலில் குறிப்பிட்டுள்ளார்.
எச்சமூகத்தின் இலக்கியமாகிலும் ஆய்வு செய்து கொண்டு போகும் போது
சமூகங்களின் வரலாறுகளை அவ்விலக்கியங்கள் கூறி நிற்கும் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்றால் சீறா புராணமும் மஸ்தான் சாகிபு பாடலும்தாம் என்றொரு காலம் இருந்தது.
ஒரு நேர்முகப்பரீட்சையின் போது விபுலானந்த அடிகள் உவைஸ் அவர்களிடம் “இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பற்றித் தெரியுமா” என்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாதிருக்கையில், சீறா புராணத்தையும் மஸ்தான் சாஹிபு பாடலையும் சுவாமி விபுலானந்த அடிகள் கூறிய போது தான் அறிந்திராததை ஓர் சவாலாக மனதிற் கொண்டு முயற்சித்ததன் தேடலின் விளைவே பேராசிரியர் உவைஸ் அவர்களால் இரண்டாயிரம் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய கருவூலங்களை உலகுக்கு அளிக்க முடிந்தது.
இலங்கை, இந்தியா, தமிழ்நாடு, மலேசியா ஆகிய நாடுகளில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் நன்கு பிரபல்யம் அடைந்து விளங்குகிறது. தமிழ் இலக்கியங்களில் இருந்தும் வேறுபட்ட கருப்பொருட்களையும் சொல்லாட்சியயையும் கொண்டிலங்குவதும், தமிழ்ப் பிரபந்த இலக்கியங்களிலிருந்தும் மாறுபட்ட செய்யுள் கோர்வையையும் கொண்டிலங்குவதும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் சிறப்பு அம்சங்கள்.
இத்தகைய சிறப்புகள் கொண்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் தந்தை என பேராசிரியர் அல்லாமா எம்.எம்.உவைஸ் அறிஞர்களால் போற்றப்படுகின்றார்.
இச்சிறப்புகளுக்கெல்லாம் பல்வேறு காரணங்கள் அடிப்படையாக இருந்தாலும், சிறப்புக் காரணமாக அமைந்தது இலங்கை மருதமுனையில் 1966 ம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வரங்கு விழாவாகும். இதற்கு முன்னின்று உழைத்தவர்களுள் முதன்மையானவர் அண்மையில்
எம்மை விட்டும் பிரிந்த செய்யது ஹசன் மௌலானா அவர்களாவார்.
பேராசிரியர் ம.மு. உவைஸ் 1922ம் ஆண்டு பாணந்துறையில் உள்ள கொறக்கானை எனும் சிற்றூரில் மகுமூது லெப்பை, சைனம்பு நாச்சியார் தம்பதியருக்கு ஒரே மகனாகப் பிறந்தார்.
பாணந்துறை பகுதியில் தமிழ்க் கல்விக்கு இடமில்லாமல் சிங்களமும், ஆங்கிலமும் ஆக்கிரமித்திருந்த சூழலில், உவைசின் தந்தையார் மகுமுது லெப்பை ஒரு தமிழ்ப் பாடசாலையை உருவாக்க ஆர்வப்பட்டு, ஒரு சிறு தமிழ் அறிவுக்கூடம் அமைத்தார். அதில் கார்த்திகேசு என்ற பெயருடைய இருவர் முக்கிய அங்கமாகினர். இவர்கள் இருவரும் யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியின் தந்தையார். இவர்களுடன் பண்டிதர் கந்தையா, செல்லையா ஆகியோரும் ஆரம்பக் கல்வியை வழங்கினர்.
தமிழ்க் கல்வியைத் தொடர்ந்து உவைஸ் ஹேனமுல்ல அரசினர் முஸ்லிம் பாடசாலையில் கற்றார். ஆங்கிலக் கல்வியை சரிக்கமுல்லையில் அமைந்திருந்த தக்சலா வித்தியாலயத்தில் பயின்றார். அதே வித்தியாலயத்தில் சிங்களத்தையும் பாளியையும் பயின்றார். தொடர்ந்து பாணந்துறை அர்ச். யோவான் கல்லூரியில் சேர்ந்து உயர்தரப் படிப்பை முடித்து, 1946 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்க வேண்டும் என்ற சுவாமி விபுலாநந்தரின் வேண்டுகோளுக்கிணங்க தமிழைச் சிறப்புப் பாடமாகவும் சிங்களத்தை உபபாடமாகவும் கற்றார். விபுலானந்தரின் மறைவைத் தொடர்ந்து பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் உதவியுடன் முதுமாணி பட்டம் பெற்றார். “தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு” என்பது இவரது முதுகலைமாணி பட்டத்தின் ஆய்வேடு ஆகும்.
1968 இல் சென்னையில் இடம்பெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ‘தமிழ் இலக்கியத்தில் உள்ள முஸ்லிம் இலக்கிய வடிவங்கள்’ எனும் ஆங்கிலக் கட்டுரையை வாசித்தார். இதனைத் தொடர்ந்து திருச்சியில் இடம்பெற்ற முதலாவது இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பேராசிரியர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.
பல கட்டுரைகளின் தொகுப்பான ‘இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் திருப்பம்’ என்ற நூலை 1974இல் சென்னையில் இடம்பெற்ற இரண்டாவது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் வெளியிட்டார். இத்துடன், இம்மாநாட்டில் முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் பயன்படும் செந்தமிழ்ச் சொற்கள் என்ற கட்டுரையையும் சமர்ப்பித்தார்.
நான்கு இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளில் கலந்து கொண்டதுடன், கொழும்பில் நடைபெற்ற நான்காவது இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைத் தலைமை தாங்கி நடத்தினார். இதில் அறிஞர்களின் ஆக்கங்கள் அடங்கிய’பிறைக் கொழுந்து’ என்ற நூலையும் வெளியிட்டார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக உமறுப்புலவர் இருக்கை உருவாக்கப்பட்டது. அவ்விருக்கைக்கு இணைப் பேராசிரியராக பேராசிரியர் உவைஸ் நியமிக்கப்பட்டார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் போது ஒவ்வொன்றும் 600 பக்கங்கள் கொண்ட 6ஆய்வு நூல்கள் அவரால் வெளியிடப்பட்டன; சுமார் 55 ஆக்கங்கள் அவரால் நூலாக்கம் பெற்றன.
முதுமாணி பட்டத்தின் பின்னர் பேருவளையை சேர்ந்த சித்தி பாத்திமாவை மணந்து நான்கு ஆண் மக்களும் ஒரு பெண் மகளும் அவருக்கு உள்ளனர்.
பேராசிரியர் உவைஸ் நாடு திரும்பிய பின்னர் தனது இறுதிக் காலத்தை பாணந்துறையிலேயே கழித்தார். 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25இல் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
‘செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்’
தாஸிம் அகமது-…
நன்றி: தினகரன்