க.பொ.த உயர் தரப் பரீட்சையை நடாத்துவதற்கான திகதி தொடர்பாக முன்வைக்கப்படும் ஆலோசனைகளை பெற்று அவற்றைப் பரிசீலிப்பதற்கு கல்வி அமைச்சு குழு ஒன்றை நியமித்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்திராநந்த தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் கல்வி இராஜாங்க அமைச்சின் செலாளரும் ஏனைய மேலதிக செயலாளர்கள் இருவரும் உள்ளடங்குகின்றனர்.
தொடர்புடைய தரப்புக்களின் கருத்துக்கள் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.. மாணவர்களும் ஆசிரியர்களும் தமது வலயங்கள் ஊடாக கல்வி அமைச்சிற்கு ஆலோசனைகளைச் சமர்ப்பிக்கலாம்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 7 ஆம் திகதியில் பரீட்சையை நடாத்துவது பிரச்சினை இல்லை என அதிகமானோர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சி்ன செயலாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் பெறப்படும் கருத்துக்கள் ஆலோசனைகளின் பின்னரே இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 7 ஆம் திகதி முதல் பரீட்சையை நடாத்துவதற்கு கல்வி அமைச்சு ஏற்கனவே தீர்மானித்து அறிவித்திருந்தது.
எனினும் பல தரப்பினரின் கோரிக்கைகளின் பின்னர் பரீட்சையை நடாத்துவதற்கான திகதியை மீள் பரிசீலிப்பத்து பாடசாலை ஆரம்பித்து முதல் வாரஇறுதியில் அறிவிப்பதாக கல்வி அமைச்சு அறிவித்தது.
உயர்தரப் பரீட்சைக்கான திகதி தொடர்பான அறிவித்தலை இவ்வாறு பிற்போடுவதனால் மாணவர்கள் அதிக சிரமங்களை எதிர்நோக்குவதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
உயர் தரப் பரீட்சை கால நேர அடிப்படையில் திட்டமிட்டு தயாராகும் பரீட்சை என்பதால் மாணவர்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக பல தரப்புக்களும் சுட்டிக் காட்டியுள்ளன.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இது தொடர்பாக கல்வி அதிகாரிகளை குற்றம் சாட்டியுள்ளார்.
உயர் தரப் பரீட்சைத் திகதி தொடர்பாக உறுதியான கல்வி அதிகாரிகள் நிலைப்பாட்டை எடுக்காது விட்டுள்ளனர் என்றும் மிக விரைவில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் கலந்துரையாடி உறுதியான தீர்மானத்தை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.